வெள்ளாற்றங்கரையில் ஒரு தமிழ்த்துறவி: அடிகளாசிரியர்- பகுதி 2

பதினைந்து ஆண்டுகளாக நான் காண நினைத்த வடிவம் அஃது.பேராசிரியர் திரு.அடிகளாசிரியர் அவர்கள்தான் நான் கண்டு வணங்கிய வடிவம்.99 அகவையாகும் நிலையிலும் நல்ல பார்வை நலத்துடனும் நினைவாற்றலுடன் காணப்பட்டார்.அவருக்குக் காது கேட்காதோ என நான் நினைத்துக் கத்திப்பேச முயன்ற பொழுதெல்லாம் அதற்குத் தேவை இல்லாமல் போனது.
அடிகளாசிரியர்:
நான் என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.புதுச்சேரியிலிருந்து வந்துள்ளமையைச் சொன்னதும் அவர் மகன் புதுச்சேரியில் இருப்பதைச் சொன்னார்கள்.நான் வாழும் வீட்டின் அருகில்தான் அவர் குடியிருப்பதை உணர்ந்துகொண்டேன். அவர் பற்றி சொல்லி அவருடன் தொடர்புகொள்ளும்படி சொன்னார்கள்.
வழக்கமாகக் கால் மணி நேரம் மட்டும் அமர்ந்து உரையாடிவிட்டு ஓய்வெடுக்கும்படியான தளர்ந்த உடல்நிலை கொண்ட பேராசிரியர் அடிகளாசிரியர் ஒரு மணிநேரம் என்னுடன் பேசியவண்ணம் இருந்தார். அவர் பேச்சைக் கால் மணி நேரம் அளவு என் நாடாப்பெட்டியில் பதிந்துகொண்டேன்.பேச்சு குழறாமல் இருந்தது.ஆனால் முதுமை கனிந்திருந்ததை உணர முடிந்தது.
அடிகளாசிரியர் அவர் இளமைக்காலம் தொடங்கி தமிழ்ப் பேராசிரியராக, ஆய்வறிஞராக விளங்கிய அவர் தம் வாழ்க்கை வரலாற்றைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே யான் அவர்தம் இளையமகன் முனைவர்.அ.சிவபெருமான்(அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராசிரியர்)அவர்கள் வழியாக ஓரளவு அறிந்தவன் எனினும் ஐயா வழியாக, அவர் பற்றிய சில வாழ்க்கை நிகழ்வுகளைக் கேட்டுப்பதிவு செய்துகொண்டேன். அவரைப்பல கோணங்களில் படம் எடுத்துக்கொண்டேன்.அனைத்திற்கும் பேராசிரியர் அவர்கள் எனக்கு அனுமதி தந்து ஒத்துழைப்பு நல்கினார்கள்.
இடையிடையே அன்பர்கள் சிலர் வந்து அடிகளாரிடம் திருநீறு பெற்று வாழ்த்துப் பெற்றுச் சென்றார்கள்.அடிகளாசிரியர் தமிழ்க்கடல் மறைமலையடிகளாரிடத்து நிறைந்த ஈடுபாடு கொண்டவர்.அவர் கொள்கையில் ஈர்ப்புண்டு தம் பெயரை அடிகளாசிரியர் என அமைத்துக்கொண்டாராம்.மறைமலைஅடிகளார் மயிலம் கல்லூரிக்கு வந்தபொழுது அடிகளாரை வரவேற்று,
எத்தனையோ புலவர்கள்முன்பு இருந்தார்கள் என்றாலும் இவர்கள் எல்லாம்
அத்தனையும் தமிழ்த்தாயை ஆரியத்தின் அடிச்சிஎன ஆக்கி வைத்தார்!
உத்தியினில் மிகச்சிறந்த உரவோனே! நீயுதிக்க ஒருதா னாகி
முத்தனைய தமிழ்சிறக்கும் வகைகண்டாய் நீவாழி! முன்பி னோடே!
என்று பாடியதை அடிகளாசிரியர் நினைவிலிருந்து சொன்னமை கண்டு வியப்படைந்தேன்.இப்பாடல் கேட்ட அடிகளார் தமக்கு இத்தகுதிகள் உண்டு என ஏற்றுக்கொண்டாராம்.
யார் இந்த அடிகளாசிரியர்?:
பேராசிரியர் அடிகளாசிரியர் என்றால் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு அறிந்தவர்களுக்கு நன்கு புரியும்.தொல்காப்பியப் பதிப்பில் இவருக்கு இணையாக ஒருவரைக் காட்டமுடியதபடி ஆழமான,விளக்கமான பதிப்பை வழங்கியவர். தம் ஆராய்ச்சியால் உழைத்து உருவாக்கிய இலக்கண நூல்களைப் பிறர் பதிப்பிக்க முன்வராதபொழுது தாமே அச்சிட்டு வெளியிட்டவர்.விற்பவரும் வாங்குவோரும் இன்மையால் ஊர் ஊராக விற்கச் சென்று விற்பனை ஆகாமல் பல்வேறு பொருள் தட்டுப்பாடுகளால் தளர்வுற்றவர்.
கடைசிவரை கூரை வீட்டில் வாழும்படி இவர் வறுமையில் வாட நேர்ந்தது. முத்தமிழ்க் காவலர்கள் கூட இவர் தொல்காப்பியத்தை விலைக்கு வாங்காமல் அலைய வைத்தமை இவர் வாழ்வில் காணக் கிடைக்கும் செய்திகளாகும்.கும்பகோணத்தில் இருந்த வணிகர் ஒருவர் வெள்ளிக்கிழமை எனத் தம் பணப்பெட்டியைத் திறக்காதபொழுது அவருக்கு இலவயமாக ஒரு தொல்காப்பியப் பதிப்பை அன்பளிப்பாக வழங்கிய கொடையுள்ளம் கொண்டவர் நம் அடிகளாசிரியர்.
தொல்காப்பியம்(1969):
தமிழ்க் கல்வெட்டுகள்,சோதிடம் பற்றிய பேரறிவு பெற்றவர் இவர்.தொல்காப்பியம் எழுத்ததிகாரம் (இளம்பூரணம்),சொல்லதிகாரம்(சேனாவரையம்), பொருளதிகாரம்(செய்யுளியல்-பேராசிரியம்),தொல்காப்பியம் பொருளதிகாரம்(ஏனைய இயல்கள்) எனத் தொல்காப்பியப் பதிப்புகளில் ஈடுபட்டு இவர் வெளிப்படுத்தியுள்ள பதிப்பு நூல்கள் உலகத் தரத்தின.பல பாடவேறுபாடுகளை நுட்பமாகக் கண்டவர்கள்,புதுப்புதுப் பொருள்களைக் கண்டு சொன்னவர்.யோகக்கலையில் வல்லவர்.பல நூல்களுக்கு உரை வரைந்துள்ளார்.தஞ்சாவூர் சரசுவதி மகாலுக்காகப் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.பல நூல்கள் இன்னும் பதிப்பிக்கப்பெறாமல் உள்ளன.ஏறத்தாழ அறுபது நூல்கள் இவரால் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் தொல்காப்பியப் பதிப்புகளும் சமயநூல் பதிப்புகளும் குறிப்பிடத்தகுந்தன.
அடிகளாசிரியரின் தமிழ் வாழ்க்கை:
அடிகளாசிரியர் விழுப்புரம் மாவட்டம் கல்லக்குறிச்சி வட்டத்தின் தென்கோடியில் உள்ள கூகையூரில் பிறந்தவர்(1910 சாதாரண ஆண்டு,சித்திரைத் திங்கள் ஐந்தாம் நாள்,ஞாயிற்றுக்கிழமை).இவர் தம் பெற்றோர் பெரியசாமி ஐயர்(பார்ப்பனர்களைக் குறிக்கும் ஐயர் இல்லை),குங்கும அம்மாள்.வீரசைவ மரபினர்.அடிகளாசிரியரின் இளமைப் பெயர் குருசாமி என்பதாகும்.மறைமலையடிகளார் தொடர்பிற்குப் பிறகு தம் பெயரைத் தனித்தமிழாக்கி அடிகளாசிரியர் என அமைத்துக்கொண்டார்.
அடிகளாசிரியரின் ஏழாம் அகவையில் தந்தையார் இயற்கை எய்தினார்.எனவே அடிகளாசிரியர் தம் தாய்மாமனான பெரம்பலூருக்கு அண்மையில் உள்ள நெடுவாசல் என்னும் ஊரில் வாழ்ந்த கு.சுப்பிரமணியதேவர்,கு.சிவப்பிரகாச தேவர் ஆகியோரின் ஆதரவில் வளர்ந்தார். தாய்மாமன்கள் மருத்துவம்,சோதிடம் வல்லவர்கள்.அவர்கள் வீட்டில் தங்கித் தமிழும் வடமொழியும் பயின்றார்.
பெரம்பலூரில் வாழ்ந்த மருத நாடார் என்பாரிடம் சோதிடக் கலையை முறையாக அறிந்தவர்.முசிறியில் வாழ்ந்த அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய வீ.குமார வீரையர் என்பவரிடம் நன்னூல் காண்டிகையுரையைப் பாடம் கேட்டார்.1937 இல் இவர் தனித்தேர்வராகத் தேர்வெழுதி 1937 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்புலவர் பட்டம் பெற்றார்.
14.07.1938 இல் மயிலம் திருமடத்தில் தமிழ்க்கல்லூரி தொடங்கப்பட்டது. அக்கல்லூரியில் இவர் முதல் ஆசிரியராக அமர்த்தம் பெற்றார்.அங்கு விரிவுரையாளராகவும், துணைத் தலைவராகவும் பணிபுரிந்தார்.அதுபொழுது மறைமலையடிகளார்,நா.மு.வேங்கடசாமி நாட்டார் உள்ளிட்ட அறிஞர்களுடன் பழகியதாக அறியமுடிகிறது.
அடிகளாசிரியர் அவர்களின் துணைவியார் பெயர் சம்பத்து(அகவை 80).கூகையூரில் அடிகளாசிரியருடன் வாழ்ந்து வருகிறார்.இவர்களுக்கு எட்டு மழலைச்செல்வங்கள் வாய்த்தன.அவர்களுள் ஆண்மக்கள் நால்வர்.1.அ.பேராசிரியர்(மறைவு),2. அ.இளங்கோவன்,3.அ.நச்சினார்க்கினியன்,4.அ.சிவபெருமான்.பெண்மக்கள் நால்வர்.1.திருநாவுக்கரசி,2. குமுத வல்லி, 3.செந்தாமரை,4.சிவா(மறைவு).அடிகளாசிரியர் வீரசைவ மரபினர் என்பதால் இறையீடுபாடு கொண்டு விளங்குகிறார்கள்.
கடவுள் மறுப்பாளர்கள் பலரும் இவருக்கு அணுக்கமான நட்பிற்கு உரியவர்கள்.தந்தை பெரியாரை உயர்வாக மதிப்பவர்.பிறர் மனம் புண்படாதபடி பழகும் பாங்கினர்.எளிய வாழ்க்கை, தூய வாழ்க்கை இவருடையது.இவருக்குப்பணிவிடை செய்யும் அன்பர் அடிகளாசிரியரை மிகச் சிறப்பாகக் கவனித்துக்கொள்கிறார்.கிழமைதோறும் மருத்துவர் ஒருவர் வந்து அடிகளாசிரியர் உடல்நிலையை ஆய்வு செய்து அறிவுரை சொல்கின்றார்.இம்மருத்துவர் அடிகளாசிரியர் மேல் அன்பும் மதிப்பும் கொண்டவர் என்பதால் தம் மருத்துவ ஆய்வைத் தொழிலாகச் செய்யாமல் தன் குருவிற்குச்செய்யும் பணிவிடையாகச் செய்வதை அறியமுடிந்தது.
03.07.1950 முதல் 03.07.1970 வரை தஞ்சை-கரந்தைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து தரமான தமிழ் மாணவர்களை உருவாக்கினார்.இவர் வகுப்பில் பாடம் நடத்தும்பொழுது மாணவர்கள் விரும்பிப் பாடம்கேட்பது உண்டாம்.கடுஞ்சொல் சொல்லாதவர்.இவருக்குச் சினம் வருவதே இல்லையாம்.இவர்மேல் மாணவர்களுக்கு மிகப்பெரிய மதிப்பு இருந்தது. நாற்பதாண்டுகளுக்கு முன்பு இவரிடம் படித்த மாணவர்கள் கூட இப்பொழுதும் இவரை வீடு தேடி வந்து பார்த்துச் செல்கின்றனர் என்றால் இவரின் பெருமை விளங்கும்.
கரந்தைக் கல்லூரியில் பணிபுரிந்தபொழுது அருகில் உள்ள சிவன் கோயிலில் சைவ சித்தாந்த வகுப்புகளை இலவயமாக நடத்தியுள்ளார்.இதில் பல மாணவர்கள் கற்றுள்ளனர்.இங்குப் பணிபுரியும்பொழுது பல தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்.சரசுவதிமகால் நூலகம் இதில் இவரைப் பயன்படுத்திக் கொண்டது.
1977 இல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் ஆராய்ச்சியாளராகப்(1977) பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.
20.01.1982 முதல் 01.10.1985 வரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுவடிப்புலத்தில் சிறப்புநிலை இணைப்பேராசிரியராக அமர்ந்து தொல்காப்பிய ஆராய்ச்சிகளைச் செய்து வந்தார்.மூப்பின் காரணமாகத் தாமே அப்பணியிலிருந்து விலகி வந்தாலும், வீட்டிலிருந்தபடியே அப்பணியை நிறைவுசெய்து வழங்கினார்.அவ்வகையில் தொல்காப்பியம் செய்யுளியல்,பிற இயல்களைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியிட்டது.இவர்தம் அருமை உணர்ந்த மாணவர்கள் பலர் இவரை வந்து காண்பதும் உரையாடி மகிழ்வதுமாக உள்ளனர்.அதிசயப் பிறவியாக எந்தநோய் நொடியும் இன்றி, கூரைவீட்டில் வாழ்ந்துவரும் தமிழறிஞரை வணங்கி மகிழ்ந்த நினைவுகளுடன் வெள்ளாற்றங் கரையில் இருந்து கோயில்களையும் இயற்கை அழகையும் கண்டு மகிழ்ந்த மன நிறைவுடன் புதுச்சேரிக்குப் பேருந்தேறினேன்.
பேராசிரியர் திரு.அடிகளாசிரியர் முகவரி:
பேராசிரியர் திரு.அடிகளாசிரியர்
குகையூர்-அஞ்சல்
நயினார் பாளையம்-வழி
கல்லக்குறிச்சி-வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
6006 306
பேராசிரியர் திரு.அடிகளாசிரியர் அவர்களின் திருமகனார்:
முனைவர் அ.சிவபெருமான்
தமிழ் இணைப்பேராசிரியர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலைநகர்,சிதம்பரம்.
செல்பேசி: 9443099936
நன்றி: http://muelangovan.blogspot.com/
தொடர்பான செய்திகள்:












Click it and Unblock the Notifications