திருப்பதியில் விஐபி தரிசனத்தை ரத்து செய்யக் கோரிக்கை
திருப்பதி: கடவுள் முன் அனைவரும் சமம். எனவே திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் விஐபி தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி வழக்கு தொடரப் போவதாக வெங்கட்ரமணா என்ற சமூக நல ஆர்வலர் அறிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இது தவிர வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து ஏழுமலையானை வணங்கி செல்கிறார்கள்.
பண்டிகை காலங்கள், விழா காலங்களில் வழக்கத்தை விட ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். அப்போது ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் 3 நாட்களுக்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படும்.
ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் முறை உள்ளது. மேலும் 50 ரூபாய் தரிசனம் என்று கட்டணம் செலுத்தி சாமி தரிசனம் செய்யும் முறையும் உள்ளது.
இது தவிர முக்கியப் பிரமுகர்களுக்கென வி.ஐ.பி. தரிசன முறையும் உள்ளது. எம்.பி. க்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கோவிலுக்கு வந்தால் அவர்கள் வரிசையில் நிற்கத் தேவையில்லா. தனி வழியில், நேராக கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
அதேசமயம், வி.ஐ.பி.க்கள் தரிசனத்தின் போது மற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனால் பக்தர்கள் மேலும் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
மேலும் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி பிரம்மோற்சவம் விழா போன்ற காலங்களில் வி.ஐ.பி.க்கள் அதிகம் வருவதால் மற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதிப்படுவதாகவும் எனவே வி.ஐ.பி. தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
எனவே விஐபி தரிசனத்தை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக ஆந்திராவைச் சேர்ந்த வெங்கட்ரமணா என்ற சமூக நல ஆர்வலர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என்று நான் பல ஆண்டுகளாக சமூக நல அக்கறையுடன் போராடி வருகிறேன். ஆனால் இதை யாரும் கண்டு கொள்ளமாட்டேன் என்கிறார்கள்.
விழா, பண்டிகை காலங்கள் மட்டும் அல்லாமல் அனைத்து நாட்களிலுமே வி.ஐ.பி. தரிசன முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.
அதே போல கோவிலில் கட்டண முறை தரிசனத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இறைவனை தரிசிக்க பணம் வாங்குவது சரி அல்ல. அனைத்து பக்தர்களும் இலவசமாக ஏழுமலையானை தரிசனம் செய்யும் முறையை விரைவில் அமல்படுத்த வேண்டும்.
இறைவன் முன் அனைவரும் சமம் என்பதால் வி.ஐ.பி. முறையையும் கட்டண தரிசன முறையையும் ரத்து செய்ய கோவில் நிர்வாகமும் ஆந்திர மாநில அரசும் முன்வர வேண்டும்.
திருப்பதி கோவில் நிர்வாகமும், அரசும் இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் சார்பில் நான் விரைவில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன். கோர்ட்டில் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications