சங்கமம்: யாரும் நடத்தலாம்-கனிமொழி

சென்னை சங்கமம் நிகழ்ச்சி 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. ஒரு வாரகால நிகழ்ச்சியான இதில் கலை நிகழ்ச்சிகள், கிராமியக் கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா களை கட்டியுள்ளது.
சென்னை, மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, தியாகராயநகர் நடேசன் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் பெரியார் விளையாட்டு மைதானம், அண்ணாநகர் டவர் பூங்கா, அசோக்நகர் பூங்கா, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, செனாய் நகர் திரு.வி.க. பூங்கா, ராயபுரம் அண்ணாபூங்கா, வள்ளுவர் கோட்டம் சுதந்திரதின பூங்கா, தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி, பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலை, லேடி வெலிங்டன் பள்ளி, பல்லாவரம் கண்டோன்மென்ட் விளையாட்டு மைதானம், கோடம்பாக்கம் விளையாட்டு மைதானம், திரு.வி.க. நகர் பள்ளி விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
செட்டிநாடு, தஞ்சாவூர் உள்ளிட்ட 30 வகையான உணவு வகைகளும், திருநெல்வேலி இருட்டுக்கடை' அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மதுரை ஜிகர்தண்டா, கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, திண்டுக்கல் வேணு பிரியாணி உள்பட பிரபலமான உணவு வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
நேற்று ஞாயிறுக்கிழமை என்பதால், அனைத்து இடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதன் ஒரு பகுதியாக தமிழ் சங்கமம் தொடக்க விழா நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கில் நடைபெற்றது.
அதில், கடந்த 2007-2008-ம் ஆண்டு சென்னை சங்கமம்' நிகழ்ச்சியில் படிக்கப்பட்ட கவிதைகள் தொகுக்கப்பட்டு நூறு பூக்கள் மலரட்டும்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
புத்தகத்தை கவிஞர் கனிமொழி வெளியிட, அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் பெற்றுக் கொண்டார். விழாவில், கவிஞர் வைரமுத்து, ஜனநாயக முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன், கவிஞர் இளையபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கனிமொழி பேசுகையில், தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரம் மீது இளைய தலைமுறையினர்களுக்கு அக்கறை இல்லை என்று கூறப்பட்டது. ஆனால், நிகழ்ச்சிகளை காணவந்த கூட்டத்தின் மூலம், தமிழ் சமூகம் தனது வேர்களை இழந்துவிடவில்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு அமைப்புக்கு உரிமையானது அல்ல. மக்களுக்காக யார் வேண்டுமானாலும் எடுத்து நடத்தலாம். ஒருவர் கையில் இருப்பது ஆரோக்கியமானது அல்ல என்பது எனக்கு தெரியும். பொங்கல் நேரத்தில் இந்த கிராமிய கலைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதுதான் எங்கள் அவா என்றார்.
வைரமுத்து பேசுகையில், கனிமொழி கவிஞராக அடையாளம் காட்டப்பட்டவர். கலைஞரின் வித்து என்றும் பழுதாகாது. 33 சதவீதம் இடஒதுக்கீடு உறுதியாகிவிட்டது என்றால், அதற்கு தகுதியான பெண்களை இப்போதே தயாரிக்கிறோமா?.
பொது வாழ்க்கைக்கு முதல் தகுதி அவமானம் தாங்குதல் என்று பெரியார் சொல்லுவார். அதற்கு அச்சப்பட்டு ஆண், பெண் என அனைவரும் தள்ளி நிற்கின்றனர். ஆனால், எதையும் தாங்கும் இதயமாக பொது வாழ்க்கைக்கு கனிமொழி வந்திருக்கிறார். நான் அவரை பாராட்டுகிறேன்.
தமிழ் கவிதை காலங்கலமாக வடிவத்தால் வடிவமைக்கப்பட்டது. புதுக்கவிதை வந்த பிறகு தமிழில் வடிவமும், உலகின் வடிவமும் நொறுங்கிப்போனது. நம் நாட்டில் விளம்பரம் உள்ள கவிஞன் தான் அறிவாளி என்ற மோசமான கருத்து உள்ளது. பல நல்ல எழுத்தாளர்கள் பத்திரிகையில் தனது பெயர் வந்தால் அவமானம் என நினைத்து வெளியே தெரியாமல் வாழ்கிறார்கள். மனம் என்ற மர்ம குகையில் வாசிக்கப்பட வேண்டும் என நினைப்பவர்கள் அவர்கள்.
இந்த நூறு பூக்கள் மலரட்டும்' என்ற புத்தகத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சிறப்பாக உள்ளது. ஒரு நல்ல கவிதை என்பது, தெரியாத கவிதையை சொல்லி கொடுக்க வேண்டும். தெரிந்த கவிதையை உயிர்ப்பித்து கொடுக்க வேண்டும். வாழ்க்கை அனுபவம் இல்லாமல் எழுதுபவன் போலி எழுத்தாளன். யாருக்கெல்லாம் கவிதையோடு தொடர்பு இருக்கிறதோ, அவர்கள் வாழ்க்கையை நேசிக்க தெரிந்துவிட்டார்கள் என்று அர்த்தம் என்றார்.
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணா, கவிஞர் சல்மா, பாலம்' கல்யாண சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications