பழனி: கற்கால மனிதன் குகை கண்டுபிடிப்பு!
திண்டுக்கல்: பழனி அருகே 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதன் வாழ்ந்த குகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பழனிக்கு அருகில் உள்ள பாப்பம்பட்டி நரிப்பாறையை அடுத்து நீண்டமலைத் தொடர் உள்ளது.
சுமார் 1000 அடி உயரம் உடைய இம்மலைத் தொடரில் சாமியார் மலை, பொன்னி மலை என்ற 2 குன்றுகள் உள்ளன.
இங்கு கற்கால மனிதர்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை பற்றி அறிந்து கொள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர் நாராயணமூர்த்தி, கோவில் கட்டிடக்கலை நிபுணர் மணிவண்ணன் ஆகியோர் கடந்த சில மாதங்களாக ஆய்வுசெய்து வருகின்றனர்.
இந்நிலையில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாயந்த கற்கால மனிதர்கள் வாழ்ந்த இரண்டு குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் அவர்கள் பயன்படுத்திய கருவிகள், வரைந்த ஓவியங்கள் ஆகியவை கிடைத்தன. இவை கி.மு.3000ம் ஆண்டுக்கு முந்தையவை என தெரிகிறது.
இது குறித்து அவர்கள் கூறுகையில், ஒரு குகையில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் பச்சிலைச் சாற்றினால் வரையற்றப் பெற்ற அபூர்வ ஓவியங்கள் காணப்படுகிறது. அதில் நான்கு ஓவியங்கள் மட்டும் மிக தெளிவாக காணப்படுகின்றன. பல உருவம் தெரியாமல் உள்ளது.
குகையில் பானை ஓடுகள், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கூரிய கற்களால் ஆன கருவிகளும் கிடைத்துள்ளன. இந்த பானை ஓடுகள் பழங்கற் காலத்தைச் சேர்ந்தவை.
எனவே கி.மு.3000 முதல் கி.மு.1000 வரை இங்கு குகைகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்து இருக்கலாம் என்றனர்.












Click it and Unblock the Notifications