86 வயது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கோரும் 80 வயது பாட்டி
சென்னை: 86 வயதான கணவரிடமிருந்து மாதம் ரூ. 10,000 ஜீவனாம்சம் தேவை என்று கோரி 80 வயது பாட்டி கோர்ட்டை அணுகியுள்ளார்.
சென்னை சாந்தோம் பகுதியைச் சேர்ந்தவர் லீலா. இவருக்கு 80 வயதாகிறது. இவரது கணவர் பெயர் கண்ணன். இவருக்கு 86 வயதாகிறது.
1945ம் ஆண்டு இருவருக்கும் கல்யாணம் ஆனது. இருவருக்கும் 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுடன் கடைசி மகன் தங்கியுள்ளார். திருமணமாகி இத்தனை ஆண்டுகள் கழிந்த நிலையில் லீலாவுக்கும், கண்ணனுக்கும் இடையே மனத்தாங்கல் ஏற்பட்டு பிரச்சினையானது. கோபத்தில் லீலாவை அடித்த கண்ணன் அவரை வீட்டை விட்டும் வெளியேறுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து தள்ளாத வயதில் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அணுகினார் லீலா. போலீஸார் தாத்தாவையும், பாட்டியையும் அழைத்து சமரசம் செய்து வைத்தனர். அதன்படி வீட்டின் மேல் மாடியில், கண்ணனும், கீழ்ப் பகுதியில் லீலாவும் இருக்க வேண்டும் என உடன்பாடு ஏற்பட்டது.
லீலாவின் மாதச் செலவுக்காக மாதம் ரூ. 2000 தருவதாகவும் கண்ணன் ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில் குடும்ப கோர்ட்டை அணுகியுள்ளார் லீலா. அங்கு அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எனது கணவர் கண்ணன், மாதம் ரூ. 2,000 எனது தனிப்பட்ட செலவுகளுக்குத் தருகிறார்.
ஆனால் எனது மருத்துவச் செலவுக்கு மட்டும் மாதம் ரூ. 1,500 செலவாகிறது. மீதமுள்ள ரூ. 500-ல் சாப்பாட்டிற்கே கஷ்டப்படுகிறேன்.
எனக்கு வயதாகிவிட்டதால், துணிகளைத் துவைப்பதற்கும், பாத்திரங்களைக் கழுவுவதற்கும் சிரமமாக உள்ளது.
கூடுதல் சிலிண்டர் , ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை எனது கணவரே வைத்துக்கொண்டுள்ளார்.
எங்களது வீட்டில் 6 குடியிருப்புகளும், ஒரு கடையும் உள்ளன. அவற்றை வாடகைக்கு விட்டுள்ளோம். அதன் மூலம் ரூ. 25 ஆயிரம் வருகிறது. அதை எனது கணவரே வைத்துக் கொள்கிறார்.
இந்தத் தொகையிலிருந்து மாதந்தோறும் ரூ. 10,000 ஜீவனாம்சமாக எனக்கு அளிக்க வேண்டும் என எனது கணவருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார் லீலா.












Click it and Unblock the Notifications