திருப்பதி திருக்குடை-சென்னையில் 3 நாள் ஊர்வலம்
சென்னை: மூன்று நாட்கள் நடக்கும் திருப்பதி ஏழுமலையான் திருக்குடை ஊர்வலம் சென்னையில் நேற்று துவங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானுக்கு 10 நாள் பிரமோற்சவ விழா நடக்கிறது. இதில் ஏழுமலையான் தினமும் ஒரு அலங்கார வாகனத்தில் பவனி வருவார்.
இந்த திருவிழாவின் 5வது நாள் நடக்கும் கருட வாகன வீதி உலாவின் போது சுவாமியை அலங்காரம் செய்ய சென்னை பட்டு குடைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பழக்கம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக செய்யப்பட்டு வருகிறது.
துவக்கத்தில் சாதாரண பூஜைகளுக்கு பின்னர் கொண்டு செல்லப்பட்ட இந்த திருக்குடைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்து தர்மார்த்த ஸ்மிதி என்ற அறக்கட்டளையின் முயற்சியால் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஊர்வலம் நேற்று காலை சுமார் 11 மணிக்கு வழக்கம் போல் பூக்கடை தேவராஜ முதலியார் தெருவில் உள்ள சென்ன கேசவன் பெருமாள் கோவிலில் துவங்கியது.
இது என்எஸ்சி போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கர் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக மாலை 4 மணிக்கு யானைக்கவுனிக்கு வந்தது.
பின்னர் சால்ட் கொட்டகை, புனித தாமஸ் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, அவதான பாப்பையா சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை வழியாக காசி விசுவநாதர் கோவிலை சென்றடைந்தது.
முன்னதாக திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஊர்வலத்தில் 2 பெரிய வெண்பட்டு குடைகளும், 9 சிறிய குடைகளும் அலங்காரமாக பவனி வந்தன.
இல.கணேசன், சுப்பிரமணியசாமி பங்கேற்றனர்...
இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் இல.கணேசன், ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று இந்த திருக்குடை ஊர்வலம் பெரம்பூர் ஐசிஎப், வில்லிவாக்கம், பாடி, அம்பத்தூர் எஸ்டேட் பகுதிகளில் நடக்கிறது. நாளை கடைசி நாள் ஊர்வலம் ஆவடி, பட்டாபிராம், மணவாள நகர், திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவில் பகுதிகளில் நடைபெற இருக்கிறது.
இதையடுத்து இந்த திருக்குடைகள் 24ம் தேதி திருப்பதி செல்லும்.


Click it and Unblock the Notifications
