சென்னையை தூய்மையாக பராமரிக்க கருணாநிதி வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: சென்னை மாநகரை அழகுமிக்க, தூய்மையான நகராக பராமரிக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னை தீவுத்திடலில் 36வது ஆண்டு சுற்றுலா தொழில் பொருட்காட்சி நேற்று துவங்கியது. முதல்வர் கருணாநிதி இதைத் துவக்கி வைத்து பேசுகையில்,

நான் சென்னைக்கு குடி வந்த அந்தக் காலத்தில் சென்னை மாநகரம் இருந்த நிலைமையையும், இன்றைக்கு சென்னை மாநகரம் மாறியிருக்கின்ற நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்த்து நான் ஆச்சரியத்தில் முழுகுகின்றேன்.

இந்த சென்னை மாநகரத்தில் 15 மாதங்களுக்கு முன்பு வரை கட்டிடங்களையே காண முடியாத அளவுக்கு தட்டிகள், விளம்பரப் பதாகைகள் இருந்த காட்சியை நீங்கள் யாரும் மறந்திருக்க முடியாது.

நான் டெல்லி, பெங்களூர் போன்ற இடங்களுக்கு சென்றபோது அங்கே கண்ட காட்சியை எங்கேயும் சாலையோரங்களில் பெரிய பெரிய பலகைகளை வைத்து, விளம்பரங்களை வைத்து, மாளிகையையோ மண்டபங்களையோ, இயற்கை காட்சிகளையோ யாரும் மறைக்கவில்லை. ஆனால் சென்னையிலே தான் அவைகள் மறைக்கப்பட்டிருந்தன.

நான் நம்முடைய அதிகாரிகளையெல்லாம் அழைத்து அவர்களிடம் கேட்டுக் கொண்டு அவர்கள் விரைவாகவும், வேகமாகவும் செயல்பட்ட காரணத்தால், சென்னை மாநகரத்திலே ஒரே நாளில் இருந்த எல்லா விளம்பரப் பலகைகளும் அகற்றப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.

பத்திரிகைகளில் எல்லாம் விளம்பரங்கள் வந்தன. "கலைஞர் அவர்களே, முதலமைச்சர் அவர்களே, கருணை கூர்ந்து அந்த விளம்பரப் பலகைகளை எல்லாம் மீண்டும் அங்கே அமைப்பதற்கு வழி செய்யுங்கள்'' என்று எனக்கு வேண்டுகோள் விடுத்து ஒவ்வொரு நாளும் நாளேடுகளில் ஒரு பக்க விளம்பரங்கள் வந்து கொண்டே இருந்தன. நான் அதையெல்லாம் பார்க்காதவன் போல இருந்து விட்டேன். அப்படி இருந்த காரணத்தால்தான் இன்றைக்கு கண்களை அகல விரித்து சென்னையைப் பார்க்க முடிகிறது.

நமது கடற்கரையை அழகுபடுத்த நாம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் சாதாரணமானதல்ல. கடற்கரையை அழகுபடுத்த யார் இடையூறு என்றால், அந்த அழகை விரும்பாதவர்கள் அல்ல. அந்த அழகு இருந்தால், நீங்கள் அழகுபடுத்துவதற்காக எங்களுடைய குடிசைகளைப் பிரித்தெரிந்தால் நாங்கள் வாழ வழியில்லை, நாங்கள் உட்கார, ஓய்வெடுக்க, உறங்க எங்கே செல்வது என்கின்ற கிளர்ச்சியை ஏழையெளிய மக்கள் நடத்தத் தொடங்கினார்கள்.

அவர்களுக்கு உறுதுணையாக சில கட்சிகள்- ஆளுங்கட்சிக்கு எதிரான கட்சிகள் எல்லாம் கிளம்பினார்கள். அவர்களையும் சமாதானப்படுத்தி, அவர்களுக்கும் விவரத்தைச் சொல்லி டெல்லியைப் பாருங்கள், மும்பையைப் பாருங்கள், பெங்களூரைப் பாருங்கள், சென்னையும் அது போல ஆக வேண்டாமா என்று அவர்களிடத்திலே கெஞ்சிக் கேட்டு, இப்போது சென்னை மாநகரத்திலே நல்ல காற்றோட்டமான நிலையை உருவாக்கியிருக்கிறோம்.

பல்லாயிரக்கணக்கானவர்கள் உலவுகின்ற கடற்கரையிலே இருந்த தூசிகளையெல்லாம் அகற்றி, அழுக்கற்ற தூய்மையான கரையாக, கடற்கரையாக அதை மாற்றியிருக்கிறோம். அதை பல்லாயிரக்கணக்கான மக்கள், பொருட்காட்சியை வந்து பார்ப்பதைப் போல பார்த்து விட்டுச் செல்கிறார்கள் என்றால், நான் உள்ளபடியே அதற்காக பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

இது போன்ற அழகுமிக்க ஒரு நகரை காண்பதற்காக நாம் கண்ட கனவு பலித்தது என்று சொல்ல மாட்டேன், பலித்துக் கொண்டு வருகிறது, இது முழுமையாகப் பலிப்பதற்கு எல்லோருடைய ஒத்துழைப்பும் வேண்டும்.

இன்று நாங்கள் கடற்கரையை சீர்படுத்தி விட்டால் நாளைக்கு கடற்கரைக்கு உள்ளே சென்று அதை அசுத்தப்படுத்துகின்றவர்கள் நாங்கள் சொல்லியும் கேட்காமல் அதைச் செய்வார்களேயானால் நாங்கள் என்ன செய்ய முடியும்?.

கேட்டுக் கொள்ளலாம், வேண்டுகோள் விடுக்கலாம். உணர்ந்து பார்க்க வேண்டும். ஒவ்வொருவரும்- இது நம்முடைய நகரம், நம்முடைய தெரு, நம்முடைய உடைமை, இதை நாம் தான் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், நாம் தான் சுகாதார வசதியோடு இந்தப் பகுதியைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் சென்னை மாநகரத்திலே உள்ளவர்களுக்கு வந்தால்தான் இங்கே உள்ள இந்தச் சுற்றுலா கண்காட்சியிலே நீங்கள் காணுகின்ற தூய்மையை அங்கேயும் காண முடியும்.

அந்த ஒத்துழைப்பை நீங்கள் தாருங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

கட்டணம் செலுத்தி, லட்சக்கணக்கானவர்கள் இங்கே வந்து செல்வது மாத்திரம் பெரிதல்ல. வந்து செல்பவர்கள் இந்த இடத்திலே எந்தவிதமான மாசுமருவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த இடத்தைத் தூய்மையாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அதற்காக ஆவன செய்ய வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த வேண்டுகோளை நீங்கள் அலட்சியப்படுத்தாமல்- இந்த வேண்டுகோள் உங்களுடைய பாதங்களிலே வைக்கப்பட்ட வேண்டுகோள் என்று கருதி- இதை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தூய்மையான சென்னை, அழகான சென்னை, நேர்த்தியான சென்னை, நாகரிகமான சென்னை, நாடு போற்றும் சென்னையைக் காண்போம். அதற்கு வழி வகுத்துத் தாருங்கள் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

ராமாயணத்தாலும், அதன் நாயகனான ராமராலும் இந்தியாவுக்கு ஒரே ஒரு பலன் உண்டு என்றால் அது இந்தியாவில் சுற்றுலாவை வளர்க்க அது உதவுகிறது என்பதுதான்.

உதாரணத்திற்கு ராமாயணத்தில், ராமர் அயோத்தியிலிருந்து தண்டகாரண்யம் வரை பயணம் செய்கிறார். மேலும், கோடியக்கரையிலிருந்து இலங்கையை அவர் பார்த்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. இதை கோடியக்கரையில் உள்ள ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

அது உண்மையோ, பொய்யோ, ஆனால் இன்று சுற்றுலாவை வளர்க்க அது பயன்படுகிறது.

கோடியக்கரைக்குச் செல்லும் மக்கள், சென்னை மக்களிடம் ராமர் பாதம் குறித்து சொல்கிறார்கள். சென்னையில் உள்ள மக்கள் கோடியக்கரைக்குப் போனால் இதைப் பார்க்கலாம் என்கிறார்கள். மொத்தத்தில் சுற்றுலா வளருகிறது.

அதேபோல சிலப்பதிகாரத்திலும், பூம்புகாருடன் அந்தக் கதை முடிந்து விடுகிறது. ஆனால் அதன் ஆசிரியர் கோவலனையும், கண்ணகியையும் பல்வேறு நகரங்கள் வழியாக அழைத்துச் செல்கிறார். வாஞ்சி மூதூர் வரை கதை நீளுகிறது. இதன் மூலம் சுற்றுலா வளருகிறது என்றார் கருணாநிதி.

முன்னதாக சுற்றுலா துறை செயலாளர் வெ.இறையன்பு வரவேற்றுப் பேசினார்.

வழக்கமாக டிசம்பர் மாத இறுதியில் தான் இந்த சுற்றுலாப் பொருட்காட்சி தொடங்கும். இந்த ஆண்டில் முதல்முறையாக சற்று முன்னதாகவே, டிசம்பர் 22ம் தேதியே தொடங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+