இயேசு நாதர் காலத்து வீடு நாசரேத்தில் கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

நாசரேத் (இஸ்ரேல்): இயேசுநாதர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்த மிகத் தொன்மையான வீட்டை இஸ்ரேல் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

இஸ்ரேலின் நாசரேத் நகருக்கு வெளியே ஒரு சர்ச்சுக்கு அருகில் இந்த வீடு உள்ளது. மொத்தம் 50 வீடுகள் அங்கு புதைந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றை முழுமையாக வெளிக் கொணரும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள வீட்டில்தான் இயேசு நாதர் வாழ்ந்திருப்பார் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதனால் இந்தக் கண்டுபிடிப்பு கிறிஸ்தவ மக்களிடையே பெரும் ஆர்வத்தை கிளறி விட்டுள்ளது.

நேற்றுதான் இந்த முக்கிய கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. நாசரேத் புறநகரில் உள்ள ஒரு சர்ச்சுக்கு அருகே புதிய கட்டடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோதுதான் இந்த வீட்டுக் குவியல் தென்பட்டது.

அந்த இடத்தில் மொத்தம் 50 வீடுகள் உள்ளன. கிட்டத்தட்ட நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் இந்த வீடுகள் உள்ளன. இந்த வீடுகள்தான் நாசரேத் நகரின் முதல் குடியிருப்பாக கருதப்படுகிறது. நாசரேத்தில்தான் இயேசுநாதர் தனது பால பருவத்தைக் கழித்ததாக புதிய ஏற்பாடு தெரிவிக்கிறது.

இந்த வீடுகள் உள்ள இடத்தைச் சுற்றிலும் கல்லறைகள் உள்ளன. இப்பகுதியில் யூதர்கள் நிறைந்திருந்தனர் என்று தொல்பொருள் ஆய்வாளர் யார்தேனா அலெக்சான்ட்ரே கூறியுள்ளார்.

இங்குள்ள வீடுகள் சுண்ணாம்பு மற்றும் களிமண்ணால் கட்டப்பட்டுள்ளன. ஒரு சாதாரண யூதக் குடும்பம் வசித்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.

தற்போது வீட்டின் நுழைவாயில் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீட்டின் சுவரை பாதிக்கப்படாத வகையில் தோண்டி எடுக்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இயேசுநாதர் பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லகேமில் பிறந்தவர். ஆனால் பின்னாளில் இயேசுவின் பெற்றோரான ஜோசப்பும், மேரியும் நாசரேத்துக்கு இடம் பெயர்ந்தனர். நாசரேத்தில்தான் தனது பால பருவத்தைக் கழித்தார் இயேசுநாதர் என்று பைபிள் கூறுகிறது. கிறிஸ்தவ மதத்தில் நாசரேத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு.

புதிய கண்டுபிடிப்பு குறித்து யார்தேனா மேலும் கூறுகையில், இந்த இடம் இயேசுநாதர் நடமாடிய இடமாக இருக்கலாம். அவரும், அவரது நண்பர்களும், உறவினர்களும் ஓடியாடிய விளையாடிய இடமாக இது இருக்கலாம் என்றார்.

இந்த இடத்திற்கு அருகில் உள்ள சர்ச்சின் பெயர் அனன்சியேஷன் பசிலிகா என்பதாகும். இந்த சர்ச், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள வீட்டின் மேற்கூரையில் தேங்கும் தண்ணீரை வீட்டுக்குள் கொண்டு வருவதற்கான வசதியும் செய்யப்பட்டிருப்பது அக்காலத்திய கட்டுமான முறைகள் குறித்த தகவலையும் நமக்குக் கூறுவதாக உள்ளது.

இந்த வீட்டு வளாகப் பகுதியில் ஒரு மறைவிடமும் உள்ளது. இது யூதப் புரட்சியாளர்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள கட்டப்பட்ட மறைவிடமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த மறைவிடத்தில் ஆறு பேர் சில மணி நேரங்களுக்கு பதுங்கிக் கொள்ளலாம்.

வீட்டுக்குள் சில களிமண் மற்றும் சுண்ணாம்பினால் செய்யப்பட்ட பாத்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அந்தக் காலத்து யூதர்கள் பயன்படுத்திய பொருட்களாகும்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வீடு, கி.மு 100 மற்றும் கி.பி. 100ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

வீட்டில் வேறு எந்தப் பொருளும் இல்லாததால், இந்த வீட்டில் மிக எளிமையான ஒரு யூத குடும்பம் வசித்திருக்கலாம் என கருதப்படுகிறது. அதேசமயம், இவர்கள் வியாபாரிகளா அல்லது விவசாயிகளாக என்பது தெரியவில்லை. அதை உணர்த்தும் எந்த அடையாளமும் அந்த வீட்டில் இல்லை.

நாசரேத்தில் இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரிய அளவில் மக்கள் தொகை இல்லை. மிக மிக குறைந்த அளவிலான மக்களே இருந்தபடியால் இந்த குடியிருப்பைத் தவிர நகரில் வேறு எந்த இயேசு காலத்து குடியிருப்பும் இருக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. எனவே இந்த குடியிருப்பில்தான் இயேசுநாதர் வாழ்ந்திருக்க வேண்டும் என உறுதியாக நம்பப்படுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு குறித்து அனன்சியா பசிலிகாவின் பாதிரியார் கரம் கூறுகையில்,இது கிறிஸ்துமஸ் காலம். இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட கண்டுபிடிப்பு நடந்திருப்பது மிகப் பெரிய பரிசாக கருதுகிறேன். இது எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய பரிசு என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+