நோபல் பரிசை விட அறிவியல்தான் பெரியது - வெங்கி ராமகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

Venki Ramakrishnan
சென்னை: நோபல் பரிசு பெற என்ன வழி என்று மாணவர்கள் கேட்கக் கூடாது. மாறாக, அறிவியலில் ஏன் சேர வேண்டும் என்றுதான் அவர்கள் கேட்க வேண்டும். நோபலை விட அறிவியல்தான் பெரியது என்று கூறியுள்ளார் வேதியியலுக்காக நோபல் பரிசு வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்கிற வெங்கி.

சென்னைக்கு வந்திருந்தார் நோபல் பரிசு பெற்ற வெங்கி. சென்னை பல்கலைக்கழக ஏ.எல்.​ முதலியார் அறிவியல் மேம்பாட்டு மையத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

பின்னர் மாணவர்கள் மத்தியில் அவர் உரை நிகழ்த்தினார்.

அப்போது பேசுகையில்,

ஒருவருக்கு விருது கிடைத்துள்ளதால்,​​ அவர்தான் தகுதியானவர் என்று கருதக் கூடாது.​ விருதுகளை வைத்து ஒருவரை கெளரவப்படுத்த நினைக்கக் கூடாது. அவர் என்ன செய்துள்ளார் என்பதுதான் மதிக்கப்பட வேண்டும்.

நான் எனது ஆய்வை 2002ம் ஆண்டுதான் முடித்தேன். அதுவரை ஒரு சாதாரண விஞ்ஞானியாகவே இருந்தேன். இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். ஆனால் எனக்கு நோபல் பரிசு கிடைத்து விட்டதால் பெரும் பிரபலமாக பார்க்கிறார்கள். ஆனால் என்னைப் போல ஏராளமான விஞ்ஞானிகள் இந்த உலகில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நோபல் பரிசு கிடைத்து விடவில்லை.

திறமையுள்ள அனைவரும் அங்கீகரிக்கப்படுவது கிடையாது.​ உதாரணமாக,​​ சென்னை பல்கலைக்கழக மூலக்கூற இயற்பியல் துறை முன்னாள் பேராசிரியர் கோபாலசமுத்திரம் நாராயண அய்யர் ராமச்சந்திரன். இவர் எழுதிய புத்தகங்கள் உலக அளவில் பாடப் புத்தகங்களாக உள்ளன.​ எனினும் அவருக்கு பெரிய அளவில் எந்த விருதும் தரப்படவில்லை.

மாணவர்கள் தங்களுக்கு ஆர்வம் உள்ள படிப்புகளில் சேர்ந்து படிக்கவேண்டும்.​ அறிவியலில் விருப்பம் இருந்தால் அறிவியலில் சேரலாம்.​ பணத்தின் மீது விருப்பம் இருந்தால், வியாபாரத்தில் ஈடுபடலாம்.

அறிவியல் படித்தவர்களுக்கு பரிசுகள்,​​ விருதுகள் கிடைத்துள்ளதால்,​​ நாமும் அறிவியல் படிப்புகளில் சேர வேண்டும் என்று மாணவர்கள் நினைக்கக் கூடாது. நோபல் பரிசு பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்காதீர்கள்.​ அறிவியலில் ஏன் சேர வேண்டும் என்று கேட்டுப் பாருங்கள்.

விஞ்ஞானியாக ஆக வேண்டுமானால்,​​ அதற்கு பொறுமை,​​ மற்றவர்களிடம் சேர்ந்து பணியாற்றும் ஒற்றுமை உணர்வு,​​ ஆராய்ச்சிக்குத் தேவையான நிதி ஆகியவை அவசியம்.

வெளிநாடுகளில் ஆராய்ச்சிக்கு வரும் மாணவர்கள் திறமையாக உள்ளனர்.​ இதன் மூலம் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது தெரிகிறது.​ எனவே,​​ ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியது இல்லை.​ இங்குள்ள நிறுவனங்களிலேயே மாணவர்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளலாம்.

நான் கண்டுபிடித்துள்ள ரிபோசோம் அமைப்புகளை வைத்து,​​ பல்வேறு நோய்களுக்கு ஆன்ட்டிபயாடிக்கை தயாரிக்க முடியும்.​ இதனால் எனது கண்டுபிடிப்பால் நிச்சயம் சமூகத்துக்கு அதிக பலனுண்டு.

ஆன்டிபயாட்டிக் மருந்துகள் குறித்து ஒரு முக்கிய விஷயத்தை இங்கு கூற விரும்புகிறேன். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பலர் அப்படி ஆலோசனை பெறாமலேயே தாங்களாகவே வாங்கி சாப்பிடுகிறார்கள். அது ஆன்டிபயாட்டிக்குக்கு எதிரான தடுப்பு சக்தியை நமது உடலி்ல் ஏற்படுத்தி விடும்.

ஒரு புதிய ஆன்டிபயாட்டிக் மருந்தை உருவாக்க அமெரிக்க டாலர் மதிப்பில் 1 பில்லியன் டாலர் செலவாகிறது. எனவே ஆன்டிபயாட்டிக்கை இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வதை நாம் குறைக்க வேண்டும். அது மிகவும் முக்கியம்.

வேதியியல் தேர்வை எழுதச் சொன்னால் பெயிலாவேன்...

எனக்கு வேதியியலில் பரிசு கிடைத்திருந்தாலும் கூட அது எனது துறையல்ல. அதில் எனக்கு அதிக அளவிலான பரிச்சயமும் கிடையாது. என்னை ஒரு பி.எஸ்.சி. வேதியியல் தேர்வை எழுதச் சொன்னால் நிச்சயம் நான் பெயிலாவேன். அந்த அளவுக்குத்தான் எனது அறிவு உள்ளது.
நான் இயற்பியல் படித்தேன். பின்னர் உயிரியலுக்கு மாறினேன். எனது ஆய்வுக்கு வேதியியல் தேவைப்பட்டது. எனவே அதை சற்று அறிந்து கொண்டேன்.

என்னைப் பொறுத்தவரை நோபல் பரிசு என்பதை ஒரு தொந்தரவாகத்தான் கருதுகிறேன. அது எனது வேலையைப் பாதிக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கிறது. அது தேவையில்லாததாக கருதுகிறேன். என் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை வேத வாக்கு போல கருத ஆரம்பிக்கிறார்கள். அதை நான் விரும்பவில்லை.

இந்தியாவில் தற்போதுள்ள கல்வி முறை,​​ ஆராய்ச்சியின் வளர்ச்சி உள்ளிட்டவை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.​ அதனால் இந்தியாவில் ஆராய்ச்சியை மேம்படுத்த கல்வி முறைகளில் மாற்றம் கொண்டு வருவது,​​ இதில் கார்ப்பரேட் அமைப்புகள்,​​ கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் பங்களிப்பு பற்றி கருத்து சொல்வது கடினம்.

வெளிநாடுகளில் உள்ள சீன விஞ்ஞானிகள்,​​ சீனாவுக்கு திரும்ப,​​ அந்நாடு நல்ல திட்டத்தை அறிவித்து வசதி செய்துள்ளது.

அதேபோல்,​​ வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்தியா திரும்ப வசதியாக,​​ நல்ல ஆய்வுக் கூட வசதி,​​ அரசியல்,​​ அதிகாரிகள் குறுக்கீடு இல்லாமை போன்றவை ஏற்படுத்தித் தந்தால்,​​ வெளிநாடுகளில் உள்ள இந்திய பூர்விக விஞ்ஞானிகள் இந்தியாவுக்குத் திரும்ப வாய்ப்பு உண்டு என்றார் வெங்கி.

வெங்கி பேசியது புரியவில்லை...
வெங்கியின் பேச்சைக் கேட்பதற்காக கூட்டம் நடந்த சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் நிறைந்து வழிந்தது. ஆனால் ஒரே ஒரு பெரிய குறை. வெங்கியின் ஆங்கிலப் பேச்சு. அவர் பேசியது பலருக்குப் புரியவில்லை. காரணம், அங்கு கூடியிருந்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்கூட மாணவ, மாணவியர்.

அழகான ஆங்கிலத்தில் வெங்கி பேசிக் கொண்டே போக பலருக்கு அவரது பேச்சு புரியவில்லை. தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை வைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். வெங்கியின் கருத்துக்கள் அப்படியே மாணவர்களிடம் போய்ச் சேர்ந்திருக்கும்.

செளம்யா கச்சேரியை ரசித்தார்...

அறிவியல் பூர்வமான உரையை நிகழ்த்தி முடித்த பின்னர் நேராக மியூசிக் அகாடமிக்கு சென்றார் வெங்கி. அங்கு டிசம்பர் மாத மார்கழி இசை நிகழ்ச்சியை கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ரசித்தார்.

பாடகி செளம்யா, சிக்கில் குருச்சரண் ஆகியோரின் கச்சேரிகளை ரசித்துப் பார்த்தார். ரிபோசோம் பிரியர் ராக, தாளத்தை ரசித்தது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+