வடலூர் சத்தியஞான சபையில் இன்று ஜோதி தரிசனம்
வடலூர்: வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது.
அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை வடலூரில் உள்ளது. சபையின் தெற்கு வாசல் வழியாக உள்ளே சென்றால் வலது புறம் பொற்சபையும், இடது புறம் சிற்சபையும் உள்ளன. இவைகளுக்கு மத்தியில் பஞ்சபூத தத்துவங்களை குறிக்கும் 5 படிகளை கடந்து உள்ளே சென்றால் சதுரபீடத்தில் வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் காணப்படும்.
அதன் முன் 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக்கண்ணாடி உள்ளது. கண்ணாடிக்கு முன்னால் கருப்பு, நீலம், சிவப்பு என 7 வண்ணங்களிலான திரைகள் காணப்படும். இந்த திரைகளை நீக்கி நிலைக்கண்ணாடிக்கு பின் உள்ள தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம்.
சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தை மாசம் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் நடக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று காலை 5 மணிக்கு அகவல் பாராயணத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 7.30 மணியளவில் வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லம், தண்ணீரால் விளக்கெரித்த கருங்குழி இல்லம், வடலூர் தர்மசாலை மற்றும் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடிகள் ஏற்றப்பட்டன.
பின்னர் காலை 10 மணியளவில் மேளதாளம் முழங்க சத்தியஞானசபையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதை அடுத்து பகல் 1 மணிக்கு மகாமந்திரம் ஓதப்பட்டது. அதை தொடர்ந்து 1.30 மணியளவில் சரஸ்வதி சுகுணா குழுவினரின் அகவல் பாராயணம் நடைபெற்றது. இரவு 7 மணியளவில் தர்மசாலை மேடை மற்றும் ஞானசபை மேடையில் கருத்தரங்கம் மற்றும் சன்மார்க்க சொற்பொழிவுகள் நடைபெற்றன.
இன்று காலை 6 மணியளவில் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதையடுத்து காலை 10 மணி, பகல் 1 மணி ஆகிய நேரங்களில் ஜோதி தரிசனம் நடைபெற்றது.
தொடர்ச்சியாக, இரவு 7 மணி, 10 மணி, நாளை காலை 6 மணி ஆகிய நேரங்களிலும் ஜோதி தரிசனம் நடக்கிறது.
காலை 11 மணியளவில் தைப்பூச விழா சிறப்பு நிகழ்ச்சி தருமசாலை மேடையில் நடைபெற்றது.
வருகிற 1-ந் தேதி வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவரை திரு அறை தரிசனம் நடக்கிறது.
முன்னதாக வடலூர் சத்தியஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து ஊர்வலமாக மேட்டுக்குப்பம் எடுத்துச்சென்று பின்னர் அங்கிருந்து வடலூர் கொண்டு வரப்படுகிறது.
தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி வடலூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications