திருச்செந்தூரை ஓரம் கட்டியது ரயில்வே-அனைத்து சிறப்பு ரயில்களையும் நிறுத்தியது

Subscribe to Oneindia Tamil

Train
திருச்செந்தூர்: செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்ற பொதுமக்களின் தொடர் கோரிக்கையை தூக்கி குப்பைக் கூடையில் போட்ட ரயில்வே தற்போது திருச்செந்தூருக்கான அனைத்து சிறப்பு ரயில்களையும் நிறுத்தி மக்களை அதிர வைத்துள்ளது.

மதுரையைத் தாண்டி உள்ள தென் மாவட்டங்களின் ரயில்வே திட்டங்களை ரயில்வே துறை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அரசியல் கட்சியினரும், பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதை நிரூபிக்கும் வகையில்தான் ரயில்வே துறையும் மகா மோசமாக நடந்து கொண்டிருக்கிறது. மக்களின் கோரிக்கைகளைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல் தான் தோன்றித்தனமாகவே செயல்பட்டு வருகிறது ரயில்வே துறை.

திருச்செந்தூர்-சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந் தேதி அப்போதைய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், திருச்செந்தூர்-சென்னை வாராந்திர செந்தூர் எக்ஸ்பிரஸ், விரைவில் தினசரி ரயிலாக இயக்கப்படும் என்று அறிவித்தார்.

அதற்குக் காரணம் அந்த ரயிலுக்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலும், மக்களின் அமோக வரவேற்புமே. தினசரி ரயிலாக செந்தூர் எக்ஸ்பிரஸ் மாற்றப்பட்டால் அப்பகுதி மக்கள் பெரும் பலன் அடைவார்கள். ரயில்வே துறைக்கும் நல்லவருமானம் கிடைக்கும்.

இதனால் எப்போது இந்த ரயில் தினசரி ரயிலாக மாற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வந்தது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பிலும் கோரிக்கைள் குவிந்து கொண்டிருந்தன. ஆனால் கிணற்றில் போட்ட கல்லாக மாறி விட்டது ரயில்வேயின் வாக்கு.

மமதா பானர்ஜி சமீபத்தில் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டின்போது செந்தூர் எக்ஸ்பிரஸ் குறித்த அறிவிப்பே இடம் பெறவில்லை.

என்ன கொடுமை என்றால், தெற்கு ரயில்வேக்கு பெருமளவில் வருமானத்தைத் தேடித் தருவதே தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள்தான். சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குத்தான் பெருமளவிலான ரயில்கள் இயக்கப்படுகின்றன. காரணம், தென் மாவட்ட மக்கள்தான் பெருமளவில் ரயில்களைப் பயன்படுத்துவதே.

தென் மாவட்டங்களின் எந்த ஊருக்கு ரயிலை அறிமுகப்படுத்தினாலும் கூட்டம் கட்டி ஏறுகிறது. அந்த அளவுக்கு கூட்ட நெரிசல் இருப்பதோடு, வருமானமும் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது ரயில்வேக்கு.

இந்த நிலையில்தான் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வாராந்திர ரயிலாக உள்ளதை தினசரி ரயிலாக்க வேண்டும் என்ற கனவு எப்போது நிறைவேறும் என்ற தெரியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றியது போல திருச்செந்தூருக்கு சென்னையிலிருந்து இயக்கப்பட்டு வந்த இரண்டு சிறப்பு ரயில்களையும் ரயில்வே துறை நிறுத்தி விட்டதாம்.

தெற்கு ரெயில்வே பொதுமேலாளராக எம்.எஸ்.ஜெயந்த் இருந்தபோது முருகனின் அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் சென்னை சென்டிரல்-திருச்செந்தூர் இடையே திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி கடந்த ஆண்டு ஜுலை மாதம் 27-ந் தேதி முதல் சிறப்பு ரயில்கள் ஓடின. மறுமார்க்கத்தில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்த சிறப்பு ரெயில்கள், முருகனின் அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் அமைந்திருந்தது சிறப்பம்சம். அதாவது, காட்பாடியில் இறங்கி முருகனின் அறுபடை வீடான திருத்தணிக்கும், திண்டுக்கல்லில் இறங்கி பழனிக்கும், கரூரில் இறங்கி கும்பகோணத்தில் அருகில் உள்ள சுவாமிமலைக்கும், மதுரையில் இறங்கி பழமுதிர்ச்சோலை மற்றும் திருப்பரங்குன்றத்திற்கும், கடைசியாக ரயில் நிற்கும் இடமான திருச்செந்தூருக்கும் என பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு போய் வந்தனர்.

பயணிகளிடத்தில் கிடைக்கும் வரவேற்பை பொருத்து சிறப்பு ரயில் நீட்டிக்கப்படும் என்றும் ஜெயந்த் அறிவித்திருந்தார். சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் வழக்கமான ரயிலான செந்தூர் எக்ஸ்பிரசை விட சிறப்பு ரயில்களின் பயண நேரம் ஒருமணி நேரம் அதிகமாக இருந்த போதிலும் தென்மாவட்ட மக்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது.

அதனால்தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை இயக்குவதற்கு திட்டமிட்டிருந்த ரயில்வே நிர்வாகம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை சிறப்பு ரயில்களை இயக்கியது. இந்த நிலையில் ஜனவரி மாதக் கடைசியில் இந்த ரயில்களை திடீரென நிறுத்தி விட்டனர்.

ரயில்வே பட்ஜெட்டின்போது வட மாநில எம்.பிக்கள், பிற மாநில எம்.பிக்கள் எல்லாம் தங்களது பகுதிகள் புறக்கணிக்கப்பட்டபோது எழுந்து நின்று கடும் கூச்சலிட்டனர். ஆனால் தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள், செந்தூர் எக்ஸ்பிரஸ் குறித்து பட்ஜெட்டில் இடம் பெறாமல் போனது தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு எம்.பியும் அசைந்து கூட கொடுத்ததாகத் தெரியவில்லை.

இவர்கள் எல்லாம் எதற்காக எம்.பிக்களாக நாடாளுமன்றத்திற்கு மக்களால் அனுப்பப்பட்டார்கள் என்றே தெரியவில்லை என்று புலம்பும் அளவுக்கு மகா மோசமான முறையில் அமைதி காத்தனர். அதை விட கொடுமை, இதுவரை எந்த ஒரு எம்.பியும், செந்தூர் எக்ஸ்பிரஸ் நீட்டிக்கப்படாதது குறித்து அதிருப்தி கூட தெரிவிக்கவில்லை என்பதுதான்.

மக்களின் இப்போதைய ஒரே நம்பிக்கை முதல்வர் கருணாநிதிதான். பிரதமருக்கும், சோனியா காந்திக்கும், மமதா பானர்ஜிக்கும் கடிதம் எழுதி ஏதாவது நல்லது செய்ய முதல்வர் முயற்சிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+