2994 தமிழக ஹஜ் யாத்ரீகர்களை தேர்வு செய்ய 27ம் தேதி குலுக்கல்
சென்னை: தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 2994 ஹஜ் யாத்ரீகர்களை தேர்வு செய்ய மே 27ம் தேதி குலுக்கல் நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினர் மற்றும் செயல் அலுவலர் கா.அலாவுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஹஜ் 2010 பயணத்திற்காக தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளிடமிருந்து 12,081 (மற்றும் 23 குழந்தைகள்) விண்ணப்பங்கள் மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. ஆனால் மும்பை மத்திய ஹஜ் குழுவினால் அளிக்கப்பட்ட ஒதுக்கீடு 2,994 இருக்கைகள் ஆகும்.
கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து விண்ணப்பித்து தேர்வு செய்யப்படாத பயணிகள் இவ்வருடம் விண்ணப்பித்து சிறப்பு பிரிவின் கீழ் பதிவு செய்துள்ள பயணிகளுக்கு 202 இருக்கைகளை அளிக்குமாறும், பின்னர் குலுக்கல் மூலம் 2792 பயணிகளை தேர்வு செய்ய வேண்டுமென்றும் மும்பை மத்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
எனவே 2,792 ஹஜ் பயணிகளைத் தேர்வு செய்ய மாவட்ட வாரியாக குலுக்கல் நடத்த தமிழ்நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது. இந்தக் குலுக்கல் நிகழ்ச்சி 27-ந் தேதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை, புதுக் கல்லூரியிலுள்ள ஆனைக்கார் அப்துல் ஷுக்கூர் கலையரங்கத்தில் நடைபெறும்.
ஹஜ் 2010-க்காக விண்ணப்பித்துள்ள புனித பயணிகள் இக்குலுக்கலில் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடத்திட ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications