மீண்டும் ராமேஸ்வரத்திற்கு 'போட் மெயில்' ரயில்
சென்னை: தனுஷ்கோடிக்கு ஒருகாலத்தில் ஓடிக் கொண்டிருந்த 'போட் மெயில்' ரயில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ராமேஸ்வரம் வரை ஓடவுள்ளது.
ஒரு காலத்தில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் ரயில் போக்குவரத்து நடந்து வந்தது. கப்பல் போக்குவரத்தும் சிறப்பாகவே இருந்தது.
ரயில் போக்குவரத்து இருந்த காலத்தில் போட் மெயில் என்ற ரயில் சென்னையிலிருந்து தலைமன்னார் வரை இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு 'போட் மெயில்' எனப் பெயர் வந்ததற்குக் காரணம் உண்டு.
இந்தியா- இலங்கை எக்ஸ்பிரஸ் என்பதுதான் இதன் பெயர். ஆனால், இந்த ரயில் சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை செல்லும். அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னாருக்குப் போவார்களாம். இதனால்தான் இதற்குப் 'போட் மெயில்' என்ற பெயர் வந்தது. இந்த ரயிலுக்கான டிக்கெட் சென்னை- தலைமன்னார் என்றுதான் தரப்படும். ஆனால் பாதிப் பயணம் ரயிலில், மீதிப் பயணம் கப்பலில் என வித்தியாசமாக இருந்து வந்தது.
1920ம் ஆண்டு இந்த 'போட் மெயில்' சேவை தொடங்கியது. 1964ம் ஆண்டு வரை ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆண்டு வீசிய மாபெரும் புயலால் தனுஷ்கோடியே அழிந்து போனது. ரயில் அடித்துச் செல்லப்பட்டது. கப்பல் தளத்தையும் கடல் கொண்டு விட்டது.
இதன் காரணமாக 'போட் மெயில்' போக்குவரத்து நின்று போனது. அதற்கு மாறாக ராமேஸ்வரம் வரை மட்டுமே ரயில் ஓடி வந்தது. இந்த ரயில் கடந்த 2003ம் ஆண்டு தஞ்சை-கும்பகோணம் இடையிலான அகல ரயில் பாதைப் பணியையொட்டி நிறுத்தப்பட்டது.
தற்போது இந்தப் பாதையில், ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் சென்னை- ராமேஸ்வரம் இடையிலான ரயில் மீ்ண்டும் ஓடத் தொடங்கவுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்த ரயில் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-அஜ்மீர் இடையே சிறப்பு ரயில்:
இந் நிலையில் சென்னை எழும்பூர்- அஜ்மீர் இடையே சிறப்பு ரயிலை அறிமுகப்படுத்தி உள்ளது தெற்கு ரயில்வே.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி்க் குறிப்பில்,
பயணிகள் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவும் எழும்பூர்- அஜ்மீர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இன்றிரவு 8.40 மணிக்கு அஜ்மீரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 0284) 17ம் தேதி மாலை 4.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இதே போல 18ம் தேதி மாலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 0283) 20ம் தேதி காலை 11.35 மணிக்கு அஜ்மீர் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications