மயானங்கள், கல்லறைகளை சுற்றிப் பார்க்கும் டூர்-சுற்றுலாத்துறையின் நூதன திட்டம்

இந்த சுற்றுலாத் திட்டம் நிச்சயம் வித்தியாசமானது என்பதில் சந்தேகம் இல்லை. அதாவது மரணம் மற்றும் போராட்டம் ஆகியவை சம்பந்தப்பட்ட இடங்களுக்கான டூர் இது.
அதன்படி தமிழகத்தில் அந்தக் காலத்தில் போர்க்களங்களாக திகழ்ந்த பகுதிகள், வரலாற்றுடன் தொடர்புடைய பழமையான மயானங்கள், கல்லறைத் தோட்டங்கள் ஆகியவற்றுக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர்.
இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் கூறுகையில், முதல் கட்டமாக தஞ்சை, கும்பகோணம், தரங்கம்பாடி, நெல்லை, மதுரை, வேலூர், சென்னை ஆகிய நகரங்களில் உள்ள வரலாற்றுடன் தொடர்புடைய மயானங்கள் அல்லது இடுகாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படும்.
இந்த சுற்றுலாவுக்கு டார்க் டூரிசம் என ஆங்கிலத்தில் பெயர். இது சுற்றுலாப் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.
சென்னையில் 3 போர்க்கால நினைவிடங்கள் டார்க் டூரிசத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. புலிக்காட்டில் உள்ள டச்சி கல்லறை, எலிஹு யேலின் மகன் டேவிட்டின் நினைவிடம். (இந்த ஏல் பெயரில்தான் அமெரிக்காவின் பல்கலைக்கழகத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது. எலிஹு ஏல், புனித ஜார்ஜ் கோட்டையில் ஆளுநராக வீற்றிருந்தவர் ஆவார்.)
இதேபோல வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம், மதுரையில் உள்ள ஜாக்சன் கல்லறை, பாளையங்கோட்டை குளோரின்டா சர்ச் சிமெட்டரி ஆகியவையும் இந்த பட்டியலில் உள்ளன.
இதில் குளோரின்டா கல்லறைத் தோட்டத்தில்தான் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட கலெக்டர் ஆஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் ஜாக்சன் கல்லறை உள்ளது. கிழக்கிந்திய கம்பெனிக்கு வரி கட்ட மறுத்த வீரபாண்டிய கட்டபொம்மனுடன் மோதிய வெள்ளைக்கார கலெக்டர் ஜாக்சனுடைய சமாதிதான் இது.
வெறுமனே கோவில்களையும், பழங்கால இடங்களையும் பார்த்துச் செல்வது மட்டும் சுற்றுலாவாக இருக்க முடியாது. நமது வரலாற்றுடன் தொடர்புடையவர்களின் நினைவிடங்களையும், சமாதிகளையும், கல்லறைகளையும் பார்த்து அதை அறிந்து கொள்வதும் அவசியம். அதன்படியே இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் மோகன்தாஸ்.












Click it and Unblock the Notifications