கல்வியால் மட்டுமே நாடும் நாமும் முன்னேற்ற முடியும்: அமைச்சர் அகதா சங்மா
நாகப்பட்டினம்: கல்வியால் மட்டுமே நாடும் நாமும் முன்னேற்ற முடியும் என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் அகதா சங்மா பேசினார்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் கத்தோலிக்க பாதிரியார்களின் மூன்று நாள் மாநாடு நடைபெற்று வருகின்றது.
அப்போது, மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் அகதா சங்மா பேசுகையில், 'கல்வியால் மட்டுமே நாடும் நாமும் முன்னேற்ற முடியும். கல்வியால் ஒரு சமுதாயமே முன்னேற்றப் பாதையில் செல்கிறது.
கல்வியில் முக்கியப் பங்கு வகிப்பது கிறிஸ்தவ அமைப்புகள் தான் என்பதில் எனக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி, மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இந்தியாவில் தலித் மற்றும் பழங்குடியினரின் தனித்தன்மை காப்பாற்ற கிறிஸ்தவ அமைப்புகள் தனி கவனம் செலுத்த வேண்டும்.
மதம் என்பது வேறு, கலாசாரம் என்பது வேறு. இந்திய கலாசாரத்தில் மதங்களால் எந்த பிரச்னையும் ஏற்படாதவாறு நாம் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
ஒவ்வொரு நாட்டிலும் பலதரப்பட்ட கலாசாரம் இருக்கும். ஆனால், கலாசாரத்தை வைத்து எந்த ஒரு நாட்டையும் எடை போட்டு விடமுடியாது.
இந்தியா சிறந்து விளங்க இளைஞர்கள் நல்ல அரசியல் பாதையை தேர்வு செய்து, நல்ல தலைவர்களாக உருவெடுத்து, நாட்டை வழி நடத்திச் செல்ல வேண்டும்.
தற்போது அரசும், திருச்சபைகளும் கைகோர்த்து பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. இந்த நிலை தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்' என்றார்.
இந்த மாநாடில், மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் அகதா சங்மா, தேசிய சிறுபான்மை துறை துணைத் தலைவர் சங்கிலியானா, இந்திய பிஷப்கள் மக்கள் தொடர்பாளர் பாபு ஜோசப், ஜான் டயால் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications