இலக்கை அடைவது எப்படி?: சைலேந்திரபாபு
திண்டுக்கல்: இலக்கை அடைவதற்கு எது தடையாக இருக்கிறது என்பது பற்றியும், நம்மிடம் உள்ள பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் துல்லியமாக கணித்து செயல்பட வேண்டும் என்று சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி சைலேந்திரபாபு மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் பள்ளியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் பயிற்சித் தளம் துவக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், 'குறிப்பிட்ட இலக்கை அடைவதில் ஆர்வமும், ஈடுபாடும் தேவை. தேர்வுக்கு, தொடர்ச்சியாக 30 நாட்கள் கடினமாக உழைத்தால், 100 சதவீத மதிப்பெண் பெறுவது சுலபமாகும்.
பாடங்களை மனப்பாடம் செய்தால் மட்டுமே தேர்வில் அதிக பலன் தருவதில்லை. அது, மறதியை ஏற்படுத்தி, மதிப்பெண் பெறும் வழிகளை முழுமையாக முடக்கி விடும்.
நாம் படிக்கும் பாடத்தை மீண்டும் மீண்டும் சிந்தித்து நினைவுபடுத்தல், சுயதேர்வு போன்ற முறைகளே எளிதான வெற்றிக்கு வழி வகுக்கும்.
தினமும் எதிர்கால திட்டமிடலுக்காக, ஐந்து நிமிடங்களை ஒதுக்க வேண்டும். எதிர்கால இலக்கு, அதற்காக அன்றைய நாளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை எடை போடவேண்டும்.
இலக்கை அடைவதற்கு எது தடையாக இருக்கிறது என்பது பற்றியும், நம்மிடம் உள்ள பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் துல்லியமாக கணித்து செயல்பட வேண்டும்.
மேலும், பலவீனங்களை ஒதுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, அவற்றை கையாளும் முறை குறித்த சிந்தனை போன்றவை வெற்றியைப் பெறுவதில் முக்கிய இடம் வகிக்கின்றன.
இவற்றில் அதிக முக்கியத்துவம் பெறுவது தன்னம்பிக்கை. எந்த செயலும் முயன்றால் முடியாதது இல்லை. இலக்கை அடைவதற்கான செயல்களில், தொடர் முயற்சி மட்டுமே வெற்றியை கொடுக்கும்' என்றார்


Click it and Unblock the Notifications
