கிருஷ்ண தேவராயர் முடிசூடிய 500ம் ஆண்டு விழா

பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹம்பியில் விஜய நகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு முடிசூட்டப்பட்ட 500வது ஆண்டு விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் கர்நாடக முதல்வருக்கு வாழ்த்துத் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
அதில் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது:
விஜயநகரப் பேரரசின் 18வது மன்னராக முடிசூட்டப்பட்டவர் கிருஷ்ண தேவராயர். அவர் போர்ச்சுகீசியர்கள், அரேபியர்கள், பாரசீகர்கள், சீன நாட்டினர் ஆகிய அயல்நாட்டினரை மகிழ்ச்சியுடன் வரவேற்று தமது நாட்டின் வாணிபத்தைப் பெருக்கினார்.
அவர் தமது அரசின் நிர்வாகத்தை மிகச் சிறந்த அறநெறிகளுடன் நடத்தியுள்ளார். கிருஷ்ண தேவராயர் தெலுங்கிலும், வடமொழியிலும் மிகுந்த புலமை வாய்ந்தவர்.
அவர் தெலுங்கில் படைத்துள்ள 'அமுக்தமால்யதா' என்னும் நூலில் திருவில்லிபுத்தூர் நங்கை ஆண்டாளின் பெருமைகளை புகழ்ந்து எழுதியுள்ளார்.
அவரது அரசவையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய பல மொழிகளிலும் சிறந்த அறிஞர்களை அமர்த்தி, ஆதரவளித்தார்.
ஓவியக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை, நடனக்கலை, நாடகம் போன்ற பல்வேறு கலைகளுக்கும் ஊக்கமளித்து அவற்றை வளர்த்துள்ளார்.
அவர் ஒரு வைணவர் என்ற போதிலும், சைவம், சமணம் ஆகிய சமயங்களையும் வேறுபாடு கருதாது ஆதரித்துள்ளார். இத்தகைய பெருமைகள் மிகுந்த கிருஷ்ண தேவராயர் முடி சூடியதன் 500ம் ஆண்டு விழா நடக்கிறது.
கர்நாடக மாநிலம் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் வேளையில், அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்ததையும், சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் சிலையைத் திறந்து வைக்கப்பட்டதையும் எண்ணி மகிழ்கிறேன்.
இந்த மகிழ்ச்சியோடு கர்நாடக அரசு அங்கு ஏற்பாடு செய்துள்ள, மாமன்னர் கிருஷ்ண தேவராயர் முடிசூடிய 500ம் ஆண்டு விழா வெற்றிகரமாகவும், எழுச்சியோடும் நிகழ்ந்திட தமிழக மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications