மியான்மர் ஜனநாயக தலைவர் ஆங்சான் சூ கியி நவம்பரில் விடுதலை?

கடந்த 14 ஆண்டுகளாக ஆங்சான் சூ கியி ராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க பல்வேறு உலக நாடுகளும் தொடர்ந்து கோரி வருகின்றன. ஆனால் ராணுவ ஆட்சியாளர்கள் அதை சட்டை செய்யாமல் உள்ளனர்.
தொடர்ந்த வழக்குகளைப் பதிவு செய்து காவலிலேயே வைத்துள்ளது மியான்மர் ராணுவ ஆட்சி.
இந்த நிலையில், தற்போதைய அவரது காவல் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஆனால் இந்த முறை வழக்கம் போல காவலை நீட்டிக்க ராணுவ ஆட்சி விரும்பவில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சர் மாங் ஓ கூறுகையில், ஆங்சானின் வீட்டுக் காவல் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அதன் பின்னர் அவர் விடுவிக்கப்படுவார் என்றார்.
இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர் டெபி ஸ்டோதர்டு கூறுகையில், மியான்மர் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடத்த ராணுவ ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே மக்களை ஏமாற்றுவதற்காக ஆங்சானை நவம்பரில் விடுவிக்கப் போவதாக பொய்யான வாக்குறுதியை அளிப்பதாக தோன்றுகிறது என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ஆசியான் நாடுகளுடனும், சர்வதேச சமுதாயத்துடனும் தொடர்ந்து மியான்மர் ராணுவ ஆட்சியாளர்கள் விளையாடி வருகின்றனர். அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பது இது முதல் முறையல்ல.
ஆங்சானை விடுவிப்போம் என்று பலமுறை கூறி அதன்படி அவர்கள் நடந்து கொள்ளாமல் இருந்துள்ளனர். தற்போது நவம்பரில் விடுவிக்கப்படுவார் என்று கூறுகின்றனர். இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications