கன்னடர்-தமிழர் நல்லிணக்கம் வலுவடைந்துள்ளது: கர்நாடக அமைச்சர்

ஏ.வி.பி.வி. அமைப்பின் 16வது மாநில மாநாடு சென்னை வேப்பேரி அகர்வால் வித்யாலயா பள்ளிக்கூடத்தில் நேற்று தொடங்கியது.
இரண்டு நாள் மாநாட்டை கர்நாடகா மாநில உயர் கல்வித் துறை மந்திரி அரவிந்த லிம்பாவளி தொடங்கி வைத்துப் பேசினார்.
அவர் பேசுகையில், 'கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையை சென்னையிலும், திருவள்ளுவர் சிலையை பெங்களூரிலும் திறந்து வைத்தோம். இதன்மூலம் இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் பெரிதும் வளர்ந்துள்ளது.
நான் மாணவனாக இருந்தபோது ஏ.பி.வி.பி. அமைப்பில் உறுப்பினராக இருந்தேன். அதன்பின் மாநில, தேசிய அளவில் பல பதவிகளை வகித்தேன். மாணவர்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி இருக்கிறேன்.
நான் தற்போது உயர்கல்வி அமைச்சராக இருப்பதால் மாணவர்களின் தேவைகளை நன்கு அறிவேன். இந்த விஷயத்தில், ஏ.பி.வி.பி.யில் இருந்த அனுபவம் எனக்கு பெரிதும் உதவுகிறது.
கல்வியைப் பொறுத்தவரையில், வெறும் எழுத்தறிவு, படிப்பு இவற்றில் மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம். படிப்பை தவிர்த்து மாணவ-மாணவிகளின் இதர திறமைகள் குறித்து அதிகம் சிந்திப்பது இல்லை. இதிலும் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.
மாநாட்டிற்கு தலைமை தாங்கிய ஏ.பி.வி.பி.யின் தமிழ் மாநில தலைவர் கே.மோகன்தாஸ் சமுதாய நலனுக்காகவும், மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஏ.பி.வி.பி. ஆற்றி வரும் பணிகளையும், அதன் செயல்பாடுகளையும் விளக்கி கூறினார்.
ஏ.பி.வி.பி. அகில இந்திய துணைத்தலைவர் எம்.ஜெயக்குமார். மாநில செயலாளர் ராஜ்குமார், மாநாட்டு அமைப்பாளர் பாலாஜி வேணுகோபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநாடு தொடக்கவிழாவில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் இல.கணேசன், ஏ.பி.வி.பி. முன்னாள் செயலாளர்கள் சடகோபன், சீனிவாசன், கணேசன், வட தமிழக முன்னாள் அமைப்பு செயலாளர் சாம்பமூர்த்தி உள்பட ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications