தமிழகத்தில் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்: 25ம் தேதி வரை நடக்கிறது

அகில இந்திய அளவிலான வன விலங்கு கணக்கெடுப்புப் பணிகள் கடந்த 20ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 43 புலிகள் காப்பகங்களில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், மகேந்திரகிரி துவங்கி சிவகிரி வரையிலும் நீண்ட வனப்பகுதி உள்ளது.
இங்குள்ள களக்காடு, முண்டந்துறை காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 64 வன ஊழியர்கள், 96 மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட ஏராளமானோர் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.
42 குழுக்கள் தனித் தனியாக சென்று களக்காடு-முண்டந்துறையில் உள்ள 7 சரகங்கள் மற்றும் 30 பீட்டுகளில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
களக்காடு தவிர, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் சரணாலயம், முதுமலை புலிகள் மற்றும் வனவிலங்கு சரணாலயம் ஆகிய இடங்களிலும் கணக்கெடுப்புப் பணிகள் நடந்துவருகின்றன.
புலிகள் மட்டுமல்லாது யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் கணக்கெடுப்பும் இத்துடன் நடத்தப்படும். மேலும், வன விலங்குகள் வாழ்விடத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட மற்ற அம்சங்கள் குறித்தும் இந்த கணக்கெடுப்பு பணிகளின் போது ஆராயப்படும்.
கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதையொட்டி சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கணக்கெடுப்பு பணியை கள இயக்குனர் ராம்குமார் துவக்கி வைத்தார். இதில் பி.எஸ்.சி, எம்.எஸ்.சி, தாவரவியல், விலங்கியல் படிக்கும் 96 மாணவர்கள், 64 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கணக்கெடுப்பின் போது பாபநாசம் சரகத்திற்கு உட்பட்ட கோவில்தேரி பீ்ட், கோரையாறு பீட், முண்டன்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட கொடைமாடி பீட் மற்றும் களக்காடு பகுதிகளில் புலிகளின் கால் தடங்களையும், எச்சங்களையும் சேகரித்துள்ளனர்.
இதன் மூலம் இங்கு பெரிய புலிகள் இருப்பதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டு கணக்கெடுப்பில் 6 புலிகள் இருப்பது தெரிய வந்தது. இந்த ஆண்டு அவற்றின் எண்ணிக்கை கூடும் என தெரிகிறது.
கோயில்தேரி பீட்டில் சுமார் 12 நீளமுள்ள ராஜநாகத்தின் சட்டையை வனகுழுவினர் கண்டு ஆய்வு செய்தனர். இதன்மூலம் இப்பகுதியில் ராஜநாகம வசிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் பாபநாசம் ரேஞ்சுக்கு உட்பட்ட மணிமுத்தாறு ஆலடியூரில் செந்நாய் மற்றும் கரடிகளை கணக்கெடுப்பு குழுவினர் நேரடியாக கண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications