அரசியல் அல்லாத பொது வாழ்க்கைக்கு வர விரும்புகிறேன்-வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் அல்லாத பொது வாழ்க்கைக்கு வர விரும்புவதாக கவியரசு வைரமுத்து கூறியுள்ளார்.

வெற்றித் தமிழர் பேரவை சார்பில் வைரமுத்துவின் 57வது பிறந்தநாள் 'கவிஞர்கள் திருநாளாக' நேற்று கொண்டாடப்பட்டது.

கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள வைரமுத்துவின் பொன்மணி மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கு கவிஞர்கள் திருநாள்' விருதை வைரமுத்து வழங்கினார்.

பின்னர் 57 ஏழை மாணவர்களுக்கு ரூ.60 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கி, 'கண்ணதாசன் ஒரு காலப்பேழை' என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்.

பின்னர் பேசிய வைரமுத்து, இந்த பிறந்தநாள் விழா கொண்டாடுவது, எனது தோளுக்கு பொன்னாடை போர்த்திக்கொள்ள அல்ல. எல்லா இடங்களிலும் உள்ள என் உயிர் சொந்தங்களை எல்லாம் ஒரே குடையின்கீழ் கூடச் செய்து, ஆண்டுக்கு ஒருமுறை பார்க்கத்தான் இந்த விழா.

கவிதை எழுதுவதை உடனடியாக தொடங்க முடியும். ஆனால் முடிக்க முடியாது. வாழ்க்கையும் அப்படித்தான்.

நேற்று இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் 83வது பிறந்தநாள். இவரை எல்லாம் பார்க்க முடியுமா என்று நான் ஏங்கிக்கிடந்த நாட்கள் உண்டு. இவர்கள் எல்லாம் மனிதர்கள் உருவில் வந்த கடவுளா என்று அப்போது நினைப்பேன்.

அவரிடம் நான், நீங்கள் வந்து என்னை வாழ்த்தினால் கவிஞர் கண்ணதாசனே நேரில் வந்து வாழ்த்தியதாக கருதுவேன் என்று கூறினேன். ஆனால், இன்று அவர் இங்கு பேசுகையில், கவிஞர் கண்ணதாசனையே வாழ்த்திச் செல்வதாகக் கூறினார்.

நாட்டில் முதியவர்களும், குழந்தைகளும் மதிக்கப்பட வேண்டியவர்கள். ஏனென்றால், முதியவர்கள் வாழ்ந்து முடித்தவர்கள், குழந்தைகள் வாழப் போகிறவர்கள். இவர்களை இரு கண்களாக நினைத்தால் நாகரீக சமுதாயம் உருவாகும்.

வாய்ப்பு வரும்போது அதை தள்ளிப்போடக்கூடாது. வாழ்க்கை என்பது நிரூபித்துக் கொண்டே இருப்பது. எனக்கு மேலே பருந்துகள் வட்டமடித்துக் கொண்டிருக்கும்போது, நான் இறந்து விடவில்லை, உயிரோடு இருக்கிறேன் என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது. வாழ்க்கையில் என்றும் முயற்சியை நிறுத்தாதீர்கள்.

இந்த வெற்றித் தமிழர் பேரவையின் துணை தலைவராக நடிகர் ராஜேஷ் நியமிக்கப்படுகிறார். இனி இந்த அமைப்பு புலிபோல் பாயும்.

நானும், அரசியல் அல்லாத பொது வாழ்க்கைக்கு வர விரும்புகிறேன்.

இப்போதுள்ள மாணவர்களிடம் தமிழில் படிக்க விரும்புகிறீர்களா என்று கேட்டால், அவர்கள் வேறு மொழிகளில் படித்தால் அதிக மதிப்பெண் போடுகிறார்கள். ஆனால், தமிழ் பாடத்திற்கு 45 மதிப்பெண்களுக்கு மேல் போடுவதே இல்லை என்கிறார்கள்.
நான் தமிழ் ஆசிரியர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு, நீங்கள் வாங்கிய மதிப்பெண்களை விட அதிகம் போடுங்கள். அப்போதுதான், அவர்களுக்கு தமிழ் மீது நம்பிக்கை வரும் என்றார் வைரமுத்து.

விழாவில் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, நடிகர்கள் ராஜேஷ், விவேக், பாண்டியராஜன், இயக்குனர் ஷங்கர், பாடகர் மனோ, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், பனை பொருள் நலவாரிய தலைவர் குமரி அனந்தன், வெற்றித் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் முத்தையா, எம்பி ஆரூண் உள்பட பலர் கலந்து கொண்டு வைரமுத்துவை வாழ்த்திப் பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+