சங்கரன்கோவிலில் நாளை ஆடிதபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் ஆடிதபசு திருவிழா நாளை (1-ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலும் ஒன்று. இங்கு அரியும், சிவனும் ஒன்று என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆடி மாதம் பெளர்ணமி நாளில் ஆடிதபசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் சங்கரலிங்கர் தனது உடலில் ஒரு பகுதியை சங்கரலிங்கராகவும், மற்றொரு பகுதியை நாராயணராகவும் மாற்றி சங்கரநாராயணராக காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த அரிய காட்சியை காண தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலுக்கு வருவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான ஆடி தபசு திருவிழா நாளை (1-ம் தேதி) காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் சங்கரநாராயண சாமி கோவிலில் கோமதி அம்மன் சன்னதி முன்னாள் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கிறது. விழாவின் 7-ம் நாள் திருவிழாவான 7-ம் தேதி இரவு 10 மணி அளவில் பூப்பல்லக்கில் அம்பாள் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
9-ம் திருநாளான 9-ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாவின் 11-ம் திருநாளான 11-ம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக தபசு காட்சி நடக்கிறது. அன்று 11.45 மணி அளவில் தங்க சப்பரத்தில் எழுந்தருளும் அம்பாள் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்தில் வந்து தபசு இருக்கிறார். அம்பாளின் வேண்டுகோளை ஏற்று மாலை 6 மணிக்கு மேல் தெற்கு ரதவிதியில் சங்கரலிங்க சாமி அம்பாளுக்கும், பக்தர்களுக்கும் சங்கரநாராயண சாமியாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் இரவு 10 மணி அளவில் சாமி மீண்டும் யானை வாகனத்தில் சங்கரலிங்க சாமியாக காட்சி கொடுக்கிறார்.
விழாவை முன்னிட்டு தினமும் காலையும், இரவும் அம்பாள் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் மாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கோவில் கலையரங்களில் பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், சிறப்பு நாதஸ்வரம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை சங்கரநாராயணசாமி கோயில் துணை ஆணையர் ராஜாமணி மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications