நேந்திரன் வாழைப்பழ விலை கிடுகிடு உயர்வு- காஸ்ட்லியாகிறது ஓணம் கொண்டாட்டம்!

தமிழகத்திலிருந்து நேந்திரன் பழ சப்ளை எதிர்பார்த்தபடி இல்லையாம். விளைச்சல் குறைந்து போனதன் காரணமாக சப்ளையும் குறைந்து விட்டது. இதன் காரணமாக எர்ணாகுளம் சந்தையில், நேந்திரன் வாழைப்பழத்தின் மொத்த விலை, கிலோ ரூ. 30 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரி மாட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்துதான் பெருமளவில் நேந்திரன் சப்ளையாகிறது. இங்கு ஓணம் பண்டிகைக்குப் பிறகுதான் அறுவடை தொடங்கவுள்ளதால், இந்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கு நேந்திரன் கடும் கிராக்கிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் உற்பத்தியாகும் நேந்திரன் பழம்தான் இருப்பதிலேயே மிகவும் தரமானதும், சுவையானதும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு 7 மாத கால அளவுக்குக விளைச்சல் இருக்கும் என்பதும் முக்கியமானது.
அதேசமயம், திருச்சியிலிருந்து வரும் நேந்திரன் பழத்தின் சப்ளை பிப்ரவரி மாதத்தில் தொடங்கி 2 மாதங்களுக்கு மட்டுமே நடைபெறும் என்பதால் அந்தப் பழமும் கிடைக்காத நிலை. இருப்பினும் திருச்சி பழத்தின் தரம் பெரிதாக இருக்காது என்பதால் அவற்றுக்கு கிராக்கியும் குறைவாம்.
கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் கூட நேந்திரன் பழத்துக்கு நல்ல கிராக்கி உள்ளதால் மேட்டுப்பாளையத்தில் மேலும் பல ஏக்கர் அளவுக்கு நேந்திரன் தோட்டங்கள் போடப்பட்டு உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சப்ளை அதிகரித்தால் தற்போதைய பெரும் விலை உயர்வு கணிசமாக குறையும் என விற்பனையாளர்கள் நம்புகின்றனர். இன்னும் சில வாரங்களில் நிலைமை சீராகும் வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்திலிருந்து வரும் நேந்திரன் மட்டுமல்லாமல், கேரளாவிலும் கூட நேந்திரன் உற்பத்தி பெருமளவில் குறைந்துள்ளதாம். வயநாடு பகுதியில் நேந்திரன் பழம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அங்கும் தற்போது நிலைமை சரியில்லை. நேந்திரன் உற்பத்தியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணியாற்றப் போய் விடுவதால் தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாம்.
வாழைத் தோட்டங்களில் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, குறைந்த ஊதியத்தைப் பெறுவதற்குப் பதில் வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் மூலம் நிலையாக ஊதியம் பெறுவதையே தொழிலாளர்கள் விரும்புகிறார்களாம்.
வயநாட்டில் உள்ள தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஆதிவாசிகள் ஆவர். இவர்களை அருகில் உள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இஞ்சி தோட்டங்களின் உரிமையாளர்கள், அங்கு பெரிய சம்பளத்தைக் கொடுத்து கூட்டிப் போய் விடுவதாலும் ஊழியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படுவதாக வயநாடு உற்பத்தியாளர்கள் குமுறுகின்றனர்.












Click it and Unblock the Notifications