தமிழ் மொழி வளர்ச்சியில் கிருஸ்துவ அறிஞர்கள்-கருணாநிதி பெருமிதம்

நெல்லை மாவட்டம் இடையன்குடியில் தமிழறிஞர் கால்டுவெல் வாழ்ந்து மறைந்த இல்லம் ரூ. 19 லட்சம் செலவில் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது.இந்த இல்லத்தை சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த தமிழறிஞர் கால்டுவெல் வாழ்ந்து-மறைந்த நெல்லை மாவட்டம் இடையன்குடியில் உள்ள இல்லத்தை நினைவில்லமாக மேம்படுத்தி, அதை வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் மொழியின் தொன்மையும், தூய்மையும், வலிமையும், வனப்பும், கற்றோர் அனைவரையும் கவர்ந்திழுத்து, உயிருக்கும் மேலென உணர வைத்திடும் தகுதி மிக்கது. அப்படி தமிழால் கவரப்பட்ட வெளிநாட்டவர் மிகப்பலர். அவர்களில் தலையா அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், சிறப்புக்கும் கிருஸ்துவ அறிஞர்கள் ஆற்றியிருக்கும் அரிய பணியை, இந்த இனிய வேளையில் நினைவு கூர்வது எனது கடமையாகும். தமிழ் மொழியைப் பொறுத்தவரை, கிருஸ்துவர்கள் ஆற்றிய பணி பலவகைப்பட்டதாகும்.
தமிழ்நாட்டுக் கலைச்செல்வத்தை மேலைநாட்டினர்க்குக் காட்டினர் சிலர். தமிழ் இலக்கியத்தின் பண்புகளை பாட்டாலும், உரையாலும் விளக்கியவர்கள் சிலர். இலக்கண வாயிலாக ஆராய்ந்து தமிழின் தொன்மையையும், செம்மையையும் துலக்கினர் சிலர். மேலைநாட்டு முறையில் தமிழ் அகராதியை தொகுத்து உதவினர் சிலர். தெல்லிய தமிழ் வசன நடையில் அறிவுநூல் இயற்றித் தொண்டாற்றினர் சிலர் என்று சொல்லின் செல்வர் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மொழிகளில் முதன்முதல் அச்சுப் புத்தகம் உண்டானது தமிழ் மொழியிலேதான். கிருஸ்துவ மதத்தைப் பரவச் செய்வதற்காகப் பெருந்தொண்டாற்றி வந்த ஏசு சபை பாதிரிமார்கள், முதன்முதலில் தமிழில் அச்சுப் புத்தகம் உண்டாக்கினர். பெஸ்கி என்னும் வீரமாமுனிவர்தான் தமிழில் முதன்முதலில் உரைநடை நூல் இயற்றியவர். முதன்முதலில் தமிழில் அகராதி எழுதியவரும் வீரமாமுனிவரே ஆவார்.
திருக்குறள் போன்ற தலைசிறந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அவற்றின் சிறப்புகள் உலகமெங்கும் பரவிட காரணமாக இருந்தவர் ஜி.யு.போப். தமிழ்நாட்டு மக்கள் வழங்கும் நன்கொடையைக் கொண்டு, தனது கல்லறை அமைக்கப்பட வேண்டும் என்றும், தனது கல்லறையில் தன்னை தமிழ் மாணவன் என்று குறிப்பிடப்பட வேண்டும் என்றும் விரும்பியவர் போப்.
தமிழ்-ஆங்கில அகராதியை தயாரித்த ராட்லர், யாழ்ப்பாணத்திலும், சென்னையிலும் ஆக்கபூர்வமான தமிழ்த் தொண்டு புரிந்த டாக்டர் வின்ஸ்லோ ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். நம் நாட்டுக் கிருஸ்துவர்களின் தமிழ்த் தொண்டும் சாமானியமானதல்ல.
'ரட்சண்ய யாத்திரிகம்' என்னும் காவியத்தைப் படைத்த கிருஷ்ணபிள்ளை, 'குறவஞ்சி' நாடகம் எழுதிய இன்பகவி, 'பிரதாப முதலியார் சரித்திரம்' எழுதிய வேதநாயகம் பிள்ளை, 'தொல்காப்பிய நன்னூல்' எழுதிய சாமுவேல் பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கால்டுவெல், 1838ம் ஆண்டில், தமது 24வது வயதில் மதபோதகராக, சென்னை மாநகர் வந்தடைந்தவர், பின்னர் நெல்லை பேராயராக பொறுப்பேற்று, பன்னூறு ஓலைச்சு வடிகளையும், சங்ககாலத் தமிழ் இலக்கியங்களையும் பயின்றவர், புதைபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பாண்டியர் காலத்திற்குச் சொந்தமான கயல் சின்னம் பொறிக்கப்பட்ட நாணயங்களைக் கண்டுபிடித்தவர், நெல்லை வரலாற்றை ஆய்வு செய்து, தமது ஆய்வுகளின் அடிப்படையில், 'திருநெல்வேலி சரித்திரம்' எனும் பெயரில், நெல்லை வரலாற்றை நூலாக எழுதியவர்.
தமிழ் மொழியை மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற திராவிட மொழிகளையும் கற்றவர், திராவிட மொழிகளுக்கிடையில் உள்ள ஒற்றுமைகள் குறித்து ஆய்வு செய்தவர், அதன் பயனாக திராவிட மொழிகள்' என்னும் சொல்லாக்கத்தை முதன்முதல் உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தவர், அத்துடன் தமிழ் மொழி, 'செம்மொழி' என முதல் குரல் கொடுத்த தமிழர் பரிதிமாற்கலைஞர் என்றால், தமிழ்மொழி செம்மொழியென்று முதலில் முழக்கமிட்ட வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்தான்.
பரிதிமாற்கலைஞர் தமிழ்மொழி செம்மொழியென 1887ம் ஆண்டு குரல் கொடுத்ததற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே, 1856ஆண்டில் அறிஞர் கால்டுவெல் தாம் எழுதிய "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்'' என்ற ஒப்புவமை காண்பித்திட இயலாத, உயர்பெரும் நூலில், "திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே அகற்றிவிட்டு தனித்து உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்'' என்னும் வரலாறு போற்றும் மகத்தான உண்மையையும் நிலைநாட்டியவர். அதன்மூலம் செம்மொழித் தமிழின் மேன்மையையும் உலகறியச் செய்தவர் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications