மழைச் செம்புச் சடங்கும் மூதேவி வழிபாடும்
கோவில்பட்டி அருகே கீழ வைப்பாறு ஊரில் மழைச் சடங்கில் பாடப்படும் பாடல் ஒன்று
எங்க காட்டுக்கும் பெய்யும் மழை
எருக்கலங்காட்டுக்கும் பெய்யும் மழை
வண்ணாத்தி வாசலிலே
வந்து வளத்தோடு பெய்யும் மழை! (39) என்கிறது.
எருக்கு (அ) கள்ளி என்பது ஒரு நிலையில் வறட்சியோடும், பஞ்சத்தோடும், வெறுமையோடும் தொடர்புடையது. முள்ளிக்குளம் மழைச்செம்புச் சடங்கிலும், கீழ வைப்பாறு மழைச் சடங்குப் பாட்டிலும் எருக்கு காணப்படுவதோடு, அது வண்ணார் சமூகப் பெண்ணோடும்தொடர்புபடுத்தப்படுவது குறிக்கத்தக்கது. குமரி மாவட்டம் குளச்சல் கடற்கரையில் உள்ள மீனவர் பகுதிகளில், தோசம் பிடித்த (மீன்)வலையைக் கடற்கரையில் வைத்து நடு இரவில் எருக்கம் இலையை எடுத்து, வயது வந்த ஆண்கள் நிர்வாணமாக நின்று கெட்டவார்த்தைகள் ஏசி வலையை சுற்றிச்சுற்றி அடிப்பார்கள். இதனால் வலையைப் பிடித்த தோசம் நீங்கிவிடுவதாக நம்புகிறார்கள் (40) என்றசெய்தியும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
முள்ளிக்குளம் மழைச்செம்புச் சடங்கில் பெண்கள் மட்டுமே பங்கு பெறுவதும், அதில் பங்கெடுக்கும் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவரும்பெண்ணாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், அச்சடங்கின் ஒரு பகுதியாக அப்பெண் எருக்கலங்குச்சியால் அடித்துவிரட்டப்படுவது போன்ற பாவனைக்கு உள்ளாகி வடதிசை நோக்கி போய்விடுவார் என்பதை முன்பே கண்டோம். மூதேவிக்கு உரிய திசைவடமேற்கு திசையாகும். சிவன் கோயில் பிரகாரங்கள் சிலவற்றில் அவளுக்கு வடமேற்கு மூலையில்தான் சன்னதி அமைந்திருக்கும் என்றுஆகமங்கள் கூறுகின்றன. மேலும், வடமேற்கு திசைக்கு உரியவள் என்று பொருள்படும் நிருதி என்ற பெயரும் மூதேவிக்கு உண்டு என்றபுராணச் செய்தியையும், மழைச் செம்புச் சடங்கில் நிகழ்த்தப்படும் பாவனையையும் ஒப்பு நோக்க வேண்டும்.(41)
தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளில் அளவுக்கு அதிகமான மழை பெய்தால், மழையை நிறுத்த வேண்டியும் சில சடங்குகள்செய்யப்படுகின்றன. அப்போது பெண்கள் விளக்குமாறுகளை வானத்தை நோக்கிக் காட்டுகின்றனர். (42) விளக்குமாறு மூதேவியின்கைக்கருவி என்பது நோக்கத்தக்கது. மூதேவியை வெயிலுடனும், சீதேவியை மழையுடனும் தொடர்புபடுத்தி, பல நாள் மூதேவியைத்தாங்கலாம், ஒரு நாள் சீதேவியைத் தாங்கமுடியாது என வழங்கும் நாட்டார் நம்பிக்கையும் (43) இங்கு கருதத்தக்கது.
முள்ளிக்குளம் மழைச்செம்புச் சடங்கில் எருக்கலங்குச்சியால் அடித்து விரட்டப்படுவது போன்ற பாவனைக்கு உள்ளாகின்ற வண்ணார்சமூகப் பெண், மூதேவியின் கற்பிக்கப்பட்ட பதிலியே என இவ்வாய்வு கருதுகிறது. இதன் மூலம் சமூகப் புறக்கணிப்பு செய்யப்பட்டஅவைதீகப் பெண் தெய்வமான மூதேவி, சமூக இழிவுக்குள்ளான, இன்னமும் முழுமையாக வைதீகமயமாகாத அடித்தளச் சாதிகளுள்ஒன்றான வண்ணார் சாதியோடு தொடர்புடையதாகக் கற்பிக்கப்பட்டுள்ளது என்ற புதிய கருத்தை உறுதிப்படுத்துகிறது.
கற்பிக்கப்பட்ட மூதேவி வண்ணார் சமூகத்தொடர்பு என்பது நேரடியாக அல்லாமல் குறியீட்டு அளவிலும், சடங்கு வடிவத்திலும்காணப்படுகிறது. மழைச் செம்புச் சடங்கும், அதில் வண்ணார் சமூகப் பெண் பெறும் இடமும், அவைதீக தெய்வமான மூதேவியின்தன்மையும், அவைதீக சாதியான வண்ணார் பற்றிய செய்திகளும் அம்மூன்றுக்கும் உள்ள சடங்கு மற்றும் குறியீட்டு அடிப்படையிலானகற்பிக்கப்பட்ட உறவை வெளிப்படுத்துகின்றன.
மூதேவியின் வாகனமும், வண்ணார்கள் தங்கள் தொழிலுக்குப் பயன்படுத்துவதுமாகிய கஸிதை அவைதீக தெய்வத்தின் வாகனம் என்பதால்வைதீக மரபால் இழிவு படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. மழைச் சடங்கில் இழிவு படுத்தப்பட்டு எரிக்கப்படும் கொடும்பாவி என்பதுமூதேவியே என்ற சில புதிய கருத்துக்களையும் இவ்வாய்வு நிறுவுகின்றது. இப்புதிய செய்திகளுடன், தமிழ்நாட்டில் சில இடங்களில் மூதேவிதெய்வமானது உருமாற்றத்துக்குள்ளாகி காளி போன்ற நாட்டார் தெய்வங்களுடன் இணைக்கப்பட்டு இன்றும் வழிபாட்டில் உள்ளது என்றசெய்தியையும் இங்கு இணைத்துப்பார்ப்பது என்பது, தமிழ் நிலப்பகுதிகளில், நாட்டார் பண்பாட்டில் ஜேஷ்டா தேவியின் தோற்றம் குறித்துஏதுமில்லை. எனவே நாட்டார் தெய்வங்களுக்கிடையே அவள் உருவமும் காணப்படவில்லை (44) என்கிற பேரா. ஆர். வெங்கட்ராமனின்கருத்து தவறானது என்ற முடிவுக்கே நம்மை இட்டுச் செல்கின்றன. கள ஆய்வுகளுள், திரட்டப்பட்ட தகவல்களும் இதனையே உறுதிசெய்கின்றன.
இனக்குழுக் கால வளமைத் தெய்வங்களில் பல பின்னர் தோன்றிய நிலவுடமைச் சமூகத்தில் தேவையற்றதாக உணரப்பட்டன. எனவேஅவை புறந்தள்ளப்பட்டு, இழிவுக்குள்ளாக்கப்பட்டன. இந்தியச் சூழலில் நிலவுடமையின் தோற்றத்தோடு பிறந்ததும், அதனைநியாயப்படுத்தும் தத்துவ அரணாக விளங்குவதும் வருணாசிரம மரபே ஆகும். இம்மரபே இங்கு நிலவிய இனக்குழு, வளமைத்தெய்வங்களைத் தன் காலடியின் கீழ் கொண்டு வந்தது. மேலும், வருணாசிரம மயமாதலுக்கு உள்ளாகாத தெய்வங்களை இழிவுபடுத்தியதுஎன்பன போன்ற வரலாற்றுச் செய்திகள் இங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அதே வேளையில் அடித்தள வெகு மக்கள் மரபை ஒரு ஆதிக்க மரபு ஒடுக்கும்போது, ஒடுக்கப்படுகின்ற மரபானது அதன்அடையாளங்களை முற்றிலும் இழந்துவிடுவதில்லை. அதன் எச்சங்கள் சில ஆங்காங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். இங்கே,வருணாசிரம ஆதிக்க மரபின் ஒடுக்க முறைக்கு உள்ளான, அவைதீக மரபான மூதேவி வழிபாடு, முற்றிலும் தன் அடையாளங்களை இழந்துவிடவில்லை. மாறாக மழைச் செம்புச் சடங்கு, கொடும்பாவி எரிப்பு என்பன போன்ற நாட்டார் சடங்குகளிலும், குறியீடுகளிலும் இன்னமும்வாழ்ந்து கொண்டுள்ளது என்பதும் இவ்வாய்வின் மூலம் நிறுவப்பட்டுள்ளது.
வைதீக மரபு, சமூகமனிதனைத் தனிமனிதனாக மாற்றுவதன் மூலம் அவனை வைதீக மயப்படுகிறது. அவைதீக மரபு, இனக்குழு மரபின்தொடர்ச்சியான கூட்டு வழிபாட்டைப் பேணுவதன் மூலம் சமூக உணர்வைத் தனி மனிதர்களிடம் ஏற்படுத்துகிறது என்கிற வரலாற்றுஉண்மைக்கும் இம் மழைச் செம்புச் சடங்கு மூதேவி வழிபாடு சான்றாக இருக்கிறது.
வருணாசிரம அழுக்கின் பிரதிநிதியாக மூதேவியையும், தூய்மை (அ) செழிப்பின் (சுத்தம், விருத்தி) பிரதிநிதியாக லட்சுமியையும் இன்றுஎதிரெதிராக நிறுத்தியுள்ளது. ஆனால் ஒரு காலத்தில், அழுக்கின் தெய்வமாக இப்போது கருதப்படும் மூதேவியே வளமையின்மூலத்தெய்வமாகவும் இருந்துள்ளது. மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றின் கழிவுகளே அழுக்கு என்றபெயரால் சுட்டப்படுகின்றன. அழுக்கு என்ற சொல் அழுகச் செய்யப்படுவது என்ற பொருளையே உணர்த்துவதாகும். இந்த அழுகல்என்ற நிகழ்வு மண்ணும் மற்ற இயக்கச் சக்திகளும், காலம் என்கிற பரிமாணத்தோடு கூடி அழுக்குகளின் மீது நிகழ்த்தும் வேதியியல்வினையாகும். இந்த வேதியியல் வினையின் விளைவாக மண்ணில் மூலவளம் (சாரம்) தன்னைக் காத்துக் கொள்கிறது. பெருக்கிக்கொள்கிறது. மண்ணில் மூல வளமாகிய உரச்சாரமே பயிர்களின் பெருக்கத்திற்கும் பிற அசை உயிர்களின் பெருக்கத்திற்கும் காரணமாகஅமைகின்றது.
வேறுவகையில் சொல்வதனால் பயிர்களும், உயிர்களுமாகிய செல்வங்களின் மூலவடிவம் உரமாகும். உரத்தின் மூலவடிவம் அழுக்காகும்.பழஞ்சமூகம் வேளாண் உற்பத்தியை மையமிட்டு நிலமானிய மதிப்பீடுகளைக் கொண்டதாகும். பழைய தெய்வங்களும் நிலமானியஉற்பத்தி முறைகளின் வெளிப்பாடுகளாகத்தான் அமைகின்றன. எனவே உயிர் வளர்ச்சியினையும், பயிர்வளர்ச்சியினையும் உருவாக்கும்-அடையாளப்படுத்தும் திரு (அ) லட்சுமியினைத் தங்கையாக்கி, அதற்குரிய மூலவளம் சேர்க்கும் உரத்தின் தெய்வத்தை தமக்கையாக (மூத்ததேவி) மூதேவி என்று அடையாளப்படுத்தினர். இது காலம் என்ற உறுதிப் பொருளினை (பிரமாணத்தை) அடிப்படையாகக்கொண்டதாகும்.
உரம் பயிராகும் கால இடைவெளியே தமக்கைக்கும், தங்கைக்கும் மூத்ததேவிக்கும், இளைய தேவிக்கும் அலெட்சுமிக்கும், லெட்சுமிக்கும்இடையிலுள்ள வேறுபாடாகும். எனவே, இந்த ஆராய்ச்சி முடிவின்படி, மூதேவியை அழுக்கின் தெய்வம் என்றதை எழுத்து மரபு சார்ந்தபார்ப்பனிய ஒடுக்குமுறைக் கருத்தியலாகவே பார்க்க முடிகின்றது. எனவேதான் பல்லவ அரசின் தொடக்கக் காலத்தில் மூதேவிபெருந்தெய்வக் கோவில்களில் பரிவாரத் தேவதையாக இருந்த போதிலும், பின்னர் சோழர்களின் பேரரசு தோன்றியபோது வைதீகநெறியாளர்களால் கோவிலுக்கு புறமாகத் தள்ளப்பட்டது என்பதே வரலாற்று உண்மை.
இதனை உறுதி செய்யும் சில சான்றுகளையும் கள ஆய்வில் காண முடிகின்றது. கார்த்திகைத் திருவிழாவின் போது பாண்டிச்சேரி-தென்னார்க்காடு பகுதிகளில் சில இடங்களில் உரக்குழி எனப்படும் குப்பைக் கிடங்குகளில் அகல்விளக்குகளை ஏற்றி, அதனைக் குப்பைநாச்சியார் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.(45) நாச்சியார் என்ற பெயர் உயர்குடிப்பெண்களையும், திருமகளின் குறியீடானதிருவிளக்கையும் குறிக்க வழங்கப்படுவது கவனிக்கத்தக்கது. மேலும், செயங்கொண்டம் அருகில் உள்ள உதயநத்தம் என்ற ஊரில்குப்பைக் குழியில் விளக்கு வைத்து வழிபடுவதுடன், பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டின் குப்பை குழியைப் பார்த்துஅவர்களின் செல்வ மதிப்பை அளவிடும் வழக்கமும் உள்ளது.(46)
மேலும், முள்ளிக்குளத்தில் நடைபெறும் மழைச் செம்புச் சடங்கில் எருத்துண்டு(வறட்டி) இடம் பெறுவதும், அவ்வூரில் குப்பை முத்துகுப்பை என்ற பெயர்கள் பெண்களுக்கு வழங்கப்படுவதும் குறிப்பிடத் தகுந்தது. மேலும் குப்பம்மாள் குப்பச்சி என்ற பெயர்கள் நெல்லைமாவட்டத்தில் வழக்கில் உள்ளவை ஆகும்.
இயற்கையின் இயங்கியல் போக்கில் ஏற்படுகின்ற இத்தகைய சிதைவு மற்றும் வளர்ச்சிப் போக்கினை வருணாசிரமம் உள்வாங்கிக்கொண்டது. அதனை அழுக்கு X தூய்மை என்கிற எதிர்வாக கற்பித்தது, ஒன்றுக்கொன்று தொடர்ச்சியான - இசைவான இப்போக்கினை, தன்ஆதிக்கத்தினை நிலைநாட்டும் பொருட்டே ஒன்றுக்கொன்று எதிர்வானதாகக் கற்பித்தது.
அழுக்கு X தூய்மை என்ற இந்த எதிர்வினை, காலநியமம், தேச(இட) நியமம், அதிகாரி (பிறப்பு வழி மேன்மை) நியமம், பல(வலிமை)நியமம் ஆகியவற்றைக் கொண்டு உடலுழைப்பை இழிவானதாகக் கருதும் சமூக உளவியலை உருவாக்கப் பயன்படுத்தியது. மூதேவிவழிபாட்டின் மறைவு அதனைத் தெளிவாக உணர்த்துகின்றது.
நாட்டார் தெய்வங்களை சமஸ்கிருத மயமாக்கும் பண்பாட்டு வன்முறைகள் ஆதிக்க சக்திகளால் முனைப்புடன் நடத்தப்பட்டு வரும்இந்நாளில் அவைதீகத் தெய்வங்கள் மற்றும் அடித்தள.அவைதீகச் சாதிகளின் உறவும், தொடர்பும் விரிந்த ஆய்வுக்குரியன. ஒருபரந்துபட்ட களத்தின் அடிப்படையிலேயே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட வட்டாரம் அல்லது ஒரு குறிப்பிட்டசாதியை வரையறுத்துக் கொண்டு இந்த ஆய்வு தொடரப்படுமானால் பல புதிய உண்மைகள் வெளிவரக்கூடும்.
மேற்கோள்கள்:
1. . சிவசுப்பிரமணியன், மந்திரமும் சடங்குகளும், மக்கள் வெளியீடு, 1999, சென்னை. பக்-3
2. மழைச் செம்புச் சடங்கு பற்றிய தகவல் அளித்தவர்கள்
வெ.திலட்சுதி, 69 (கோனார்) முள்ளிக்குளம்
சி.திலகவதி, 59(கோனார்) முள்ளிக்குளம்
லட்சுமி, 63(கோனார்) முள்ளிக்குளம்
கு.பாண்டியன், 59(கோனார்) முள்ளிக்குளம்
கோமதி,65(வண்ணார்) முள்ளிக்குளம்
3. பேனும் பெண்ணும், ஆனந்த விகடன் 15-04-2001
4. T.A.Gobinatharao.Elements Of Hindu Iconography Vol-I Part II. Page 390-399
5. புலவர் செ.இராசு, தமிழர் மறந்த தனித்தெய்வம், ஆய்வுக்கோவை, தொகுதி-3, 1988, பக்.96-99
6. T.A.Gobinatharao,Page. 390-399
7. மு. சண்முகம்பிள்ளை, நிகண்டுச் சொற்பொருள் கோவை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1982
8. கு. நெடுஞ்செழியன்- பேரா.சக்குபாய், 1996, சமுகநீதி, மனிதம் பதிப்பகம்,திருச்சி
9. இரா.நாகசாமி(பதி) 1983, மதுரை மாவட்ட வரலாற்றுக் கருத்தரங்கு, தொகுதி3, வரலாற்றுப் பேரவை சென்னை 18, பக்29-30
10. புலவர் செ.இராசு, பக்96-99
11. A.R.37 Of 1908,Thirupparankundram S.I.I Vol XIV
12, புலவர் செ.இராசு, பக்96-99
13. K.G. Krishnan, Jyeshta - A forgotten Deity, studies in south indian history and geography, New Erapublications,1981, Madras, page. 1518
14. மு.இராமசாமி, நன்குமடி-நற்குடி வேளாளர் வரலாறு, ம.தி.தா. இந்துக்கல்லூரி ஆண்டு மலர், 1976, பக்28
15. தி.நா.சுப்பிரமணியன், ஜ்யேஷ்டா தேவி, கலைமகள், 1944 மார்கழி. பக் 290.
16.K.Damodaran, (Ed) Jyeshta cult - an overview tamilnadu archaelogical perspective, Dept of archaelogy, 1999,Govt.of.Tamilnadu, Chennai, page 110-116.
17.K.G. Krishnan,1981, page-18
18. சொ. சாந்தலிங்கம், தமிழகத்தில் ஜேஷ்டாதேவி வழிபாடு, ஞானசம்பந்தம், தருமையாதீன
திங்களிதழ், 1-0-1--03. பக்-62--63
19. தகவலாளி பேரா. .சிவசுப்பிரமணியன் தூத்துக்குடி. 4-6-2001.
20. அ.கா. பெருமாள், 1992 தொல் பழம் சமயக்கூறுகள், பயோனியர் புக் சர்வீஸ், சென்னை - 5. பக் 135.
21. தகவலாளி சுடலை முத்து 45,(வண்ணார்) வண்ணாரமாடன் கோவில் சாமி கொண்டாடி, சின்னசங்கரன் கோவில், அம்பாசமுத்திரம்.21-4-2001.(கள ஆய்வு உதவி) யு.சுப்பிரமணியன் (ஊர்க்காடு), எஸ். கிருஷ்ணன் (அம்பை), ம.தி.தா.இந்துக்கல்லூரி மாணவர்கள்.
22. கள ஆய்வு, 2-4-2000 வண்ணாரமாடன் கோவில், வேட்ரம்பட்டி, புளியங்குடி(களய்வு உதவி) சு. சக்திவேல், (சிங்கிலிப்பட்டி)ம.தி.தா.இந்துக் கல்லூரி மாணவர். வண்ணாரமாடன் கோவில், சின்னசங்கரன் கோவில், அம்பை-21-4-2000.
23. தகவலாளி மா.மாரியப்பன்.50(வண்ணார்) பீ.பீ.குளம், மதுரை.9 - 6-2001.
24. தகவலாளி சண்முகம் 48 (வண்ணார்) குருக்கள்பட்டி
25. தகவலாளி முருகேசன் 45 (வண்ணார்) பெருமாள்புரம், திருநெல்வேலி
26. தகவலாளி முனைவர் வே.கட்டளைகைலாசம் 45 ம.தி.தா.இந்துக்கல்லூரி நெல்லை.
27.Edger thurston, " vannan" Caste and tribes of south india Vol- VII page 315-321
28. தகவலாளி பேரா.தொ.பரமசிவன் 52, திருநெல்வேலி. 1-5-2000
29. தகவலாளி பிச்சை 75,( வண்ணார்) , லெட்சுமி 70(வண்ணார்), சுரண்டை 2-9-2000.
30. தகவலாளி பூசாரி என்ற கண்ணப்பத்தேவர் 75, ஊர்க்காடு, 21-4-2000.
31.தகவலாளி சுப்பையா 65(வண்ணார்) வண்ணாரமாடன் கோவில் பூசாரி வேட்ரம்பட்டி 2-4-2000.
32. .சிங்காரவேலு முதலியார், அபிதான சிந்தாமணி, AES, சென்னை.1988.
33. முனைவர் த. கருப்பையா, தென்தமிழகத்தில் மதுரைவீரன் வழிபாடும், கதைப்பாடலும், முனைவர் பட்ட ஆய்வேடு, 1997--98,காந்திகிராம பல்கலைக்கழகம், காந்திகிராமம். பக்-182.
34.வீ.மீ. ஞானப்பிரகாசம் - க.ப. அறவாணன்(பதி), 1974, நாட்டுப்புற இலக்கியப் பார்வைகள். பக்-41.
35. தே. லூர்து 1981, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள், தொகுதி 1, பக் 222. பாரிவேள் பதிப்பகம், நெல்லை.
36. த.ந.ஜெயச்சந்திரன், மேய்ப்பனும், மேய்ச்சல் நிலமும் , குமுதம் 29-6-2000
37. தகவலாளி செ. முத்துக்கனி, 25, வரலாற்று ஆய்வாளர், பாளையங்கோட்டை.
38. தகவலாளி மா.பரதன்,42(பள்ளர்) சேதுராயன்புதூர், திருநெல்வேலி
39. தே.லூர்து,1981 பக்220-221
40. ஏ.ஜார்ஜ், மீனவர் தொழில் சடங்கு முறைகள்,பாரதி விழா சிறப்பு மலர்,1988, கலை இலக்கிய பெருமன்றம், குமரி மாவட்டம்
41. தி.நா.சுப்பிரமணியன்,1944, பக்289
42. தே.லூர்து,1981 பக்229
43. வீர.அசோகன், வழக்காற்றில் மழை, ஆய்வுக்கோவை,தொகுதி 3, 1981, பக்510
44. N.Subramanian(Ed) Jyeshtha Devi - An astronamical clue to a fallen deity, Tamil studies, International institute ofTamil Historical Studies, Madurai, Vol II, July1982,P.22
45. தகவலாளி- பேரா.தொ.பரமசிவன், திருநெல்வேலி4.3.2003
46. தகவலாளி- எம்.தமிழ்மாறன், இளங்கலை இரண்டாமாண்டு மாணவர், உடற்கல்வியியல்துறை,ம.தி.தா.இந்துக்கல்லூரி,திருநெல்வேலி,05.03.2003
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications