புவியியலில் பார்வையற்ற சென்னை மாணவி முதலிடம்
சென்னை: இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் புவியியல் பாடத்தில் சென்னையைச் சேர்ந்த பார்வையற்ற மாணவிகள் முதல் 3 இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சென்னையில் உள்ள பார்வைத்திறன் குறைவுடைவோர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் புவுயியல் பாடத்தில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 3 பேருமே 200-க்கு 199 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதில் அவர்கள் எடுத்துள்ள மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 1095 மதிப்பெண்கள் பெற்றுள்ள சங்கீதா முதலிடத்தையும், 1084 மதிப்பெண்கள் வாங்கியுள்ள வெண்ணிலா 2-வது இடத்தையும், 1077 மதிப்பெண்கள் எடுத்துள்ள துர்காதேவி 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
முதலிடத்தைப் பிடித்துள்ள சங்கீதாவின் தந்தை பார்த்தீபன். ரயில்வே பொறியாளர். தாய் அலமேலு. இல்லத்தரசி. அவருக்கு கண் பார்வை குறைபாடுள்ள ஜெயந்த் என்ற தம்பி உண்டு. அவரும் சங்கீதா படித்த பள்ளியில் 3-ம் வகுப்பில் இருந்து 4-ம் வகுப்பு செல்கிறார்.
சாதனை மாணவி சங்கீதா கூறியதாவது,
பிறவியிலேயே பார்வை குறைபாடுடைய எனக்கு ஓரளவு தான் பார்க்க முடியும். அதிலும் பெரிய எழுத்துகளை மட்டுமே படிக்க முடியும். என் அம்மா அன்றைய பாடங்களை பெரிய எழுத்தி்ல் எழுதிக் கொடுப்பார். அதை வைத்து தான் சிரமமின்றி படித்தேன். 10-ம் வகுப்பில் தனித்தேர்வு எழுதி 330 மதிப்பெண் பெற்றேன். அப்பா பார்வைத்திறன் குறையுடையோர்களுக்கான சாப்ட்வேர் மற்றும் லென்ஸ் வாங்கிக் கொடுத்து ஊக்கமளித்தார்.
நான் புவியியலில் முதலிடம் பிடிப்பேன் என்றே எதிர்பார்க்கவில்லை. எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை வசந்தி மெடோனா மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பொறுமையாக சொல்லிக் கொடுத்ததால் தான் இந்த சாதனை படைக்க முடிந்தது. அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி எனக்கு உதவியதோடு ஐ.ஏ.எஸ். படிக்க வைப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் நான் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து கல்லூரிப் பேராசிரியையாக விரும்புகிறேன்.
என்னைப் போன்று குறைபாடுடன் படித்துக் கொண்டிருக்கும் சகோதரிகளுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நம்மை பெற்றோரோ, ஆசிரியரோ திட்டினால் அது நம் நன்மைக்குத் தான். அன்றைய பாடங்களை அன்றே படித்து விடுங்கள். தினமும் 4 மணி நேரமாவது படியுங்கள் என்றார்.
சென்னை தேனாம்பேட்டை சிறுமலர் பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளி மாணவி டி.வெண்ணிலா புவியியலில் 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது மொத்த மதிப்பெண் 1084. ஆங்கில இலக்கியம் படித்து ஐ.ஏ.எஸ். ஆவதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை லிட்டில்பிளவர் ஆங்கிலப்பள்ளி மாணவி துர்காதேவி புவியியல் பாடத்தில் 200-க்கு 199 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தார். அவர் எடுத்துள்ள மொத்த மதிப்பெண்கள் 1077. கல்லூரி பேராசிரியை ஆக விரும்புவதாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications