டல்லாஸில் தமிழ் சங்கத்தின் கோலாகல பொங்கல் விழா!
அமெரிக்காவில் தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும் முக்கிய நகரங்களின் ஒன்றான டல்லாஸில் 1978 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோப்ளக்ஸ் தமிழ் சங்கம் தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியை செய்து வருகிறது.
வருடம் முழுவதும் ஒவ்வொரு முக்கிய தமிழர் பண்டிகைகளை ஆரவாரத்துடன் தமிழ் சங்கம் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டின் முதல் சிறப்பு நிகழ்ச்சியாக பொங்கல் விழாவை தமிழ்நாட்டு வழக்கப்படி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
ஜனவரி 14, சனிக்கிழமை மாலை மூன்று மணி அளவில் ப்ளேனோவில் உள்ள பிள்ளையார் கோவில் வளாகத்தில் திறந்தவெளியில் சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். வழக்கமாக மேக மூட்டத்துடன் இருக்கும் வானத்தில், அன்று மட்டும் சூரியன் பிரகாசித்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
டல்லாஸ் வாழ் தமிழர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள். பாரம்பரிய உடைகளில் ஆண்களும் பெண்களும், சிறுவர் சிறுமிகளும் ஒருங்கே குழுமியிருந்ததால் அந்த இடமே தமிழகத்தின் ஒரு பகுதியாக காட்சி தந்தது.
பெண்களும், சிறுமிகளும் கோலாட்டத்துடன் ஆடிப்பாடி விழாவை மேலும் சிறப்பு செய்தார்கள். சூரியனுக்கு படைத்து வழிபாடு செய்த பிறகு அனைவரும் சக்கரைப்பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
அமெரிக்காவில் பிறந்த தமிழர் குடும்ப சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்துடன், தமிழர் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விழாவாக அமைந்தது சிறப்பம்சமாகும்.
பொங்கல் தமிழர் திருவிழாவின் தொடர்ச்சியாக வரும் சனிக்கிழமை (ஜனவரி 21) மாலை 4 மணி முதல் ப்ளேனோ வில்லியம்ஸ் ஹைஸ்கூல் ஆடிட்டோரியத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெறுகிறது, வருகை தரும் அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாட்டை மெட்ரோப்ளக்ஸ் தமிழ் சங்க தலைவர் கலைச்செல்வி, உபதலைவர் கஸ்தூரி, செயலாளர் கீதா, பொருளாளர் செல்வமணி ஆகியோர் மேலும் பல தன்னார்வ தொண்டர்களுடன் இணைந்து செய்து வருகின்றனர்.













Click it and Unblock the Notifications