சின்சினாட்டியில் நித்யஸ்ரீ மகாதேவேன் கச்சேரி

சின்சினாட்டி பல்கலைக் கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்களால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சபா (Society for the Appreciation of Bharatiya Heritage and Arts) அமைப்பு மூலம் ஆண்டு தோறும் இந்திய பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சியில் நித்யஸ்ரீ மகாதேவன் கர்நாடக இசைக்கச்சேரி நடத்துகிறார். ஏப்ரல் 29ம் தேதி (நாளை) மாலை ஐந்து மணி அளவில் சின்சினாட்டி பல்கலை கழகத்தின் க்ரெஸ்கே ஆடிட்டோரியத்தில் (Kresge Auditorium) நடைபெறும் நிகழ்ச்சியில் பி.வி ராகவேந்திர ராவ் வயலின் மற்றும் பத்ரி சதீஷ்குமார் மிருதங்கம் இசைக்கிறார்கள்.
கடந்த ஆண்டுகளில் கே ஜே ஏசுதாஸ், சுதா ரகுநாதன், டி.என். சேஷகோபாலன், உன்னி கிருஷ்ணன், அருணா சாய்ராம், ஷஷாங்க் உள்ளிட்ட பிரபல கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சி உட்பட இதுவரை நடந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே பார்வையாளர்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சின்சினாட்டி பல்கலைக் கழகத்திற்குட்பட்ட இசைக் கல்லூரியிலிருந்தும் ஏராளமான அமெரிக்க மாணவர்கள் வருடந்தோறும் தவறாமல் கலந்து கொண்டு முழு நிகழ்ச்சியையும் கேட்டு மகிழ்கிறார்கள்.
அரங்கம் நிறைய சுமார் முன்னூறுக்கும் அதிகமானோர் இசையை கேட்டு மகிழ்வது சென்னையில் நடைபெறும் டிசம்பர் மாத கச்சேரிகளை நினைவுபடுத்துவதாக அமைகிறது. சின்சினாட்டி, டேட்டன், கொலம்பஸ் வட்டாரத்தில் வாழும் இந்தியர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு என்றால் மிகையல்ல.
சபா அமைப்பு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்களின் இந்திய இசை ஆர்வம் மற்றும் முயற்சியினால் மட்டுமே என்பதும் முக்கியமானது.
பல்கலைக்கழக நிதியமைப்பின் ஒதுக்கீடு செய்யும் நிதி ஆதாரத்தை மட்டுமே கொண்டு, பெரும் இசைக் கலைஞர்களை சின்சினாட்டி வரவழைத்து நிகழ்ச்சிகள் நடத்திவருகிறார்கள். அமெரிக்காவில் நமது பாரம்பரியத்தை பறைசாற்றவதற்கு, ஒரு அமெரிக்க பல்கலைக் கழகத்திலேயே நிதியுதவி பெற்று, அதைச் செய்வது என்பது ஆச்சரியமான விஷயமாகவும் இருக்கிறதல்லவா? அமெரிக்கர்களின் டைவர்சிட்டி பெருமைக்குரியதுதான்.
அமெரிக்க மண்ணில் உயர்கல்வி கற்பதற்காக வந்த மாணவர்கள், கூடுதலாக நமது பாரம்பரிய இசைப் பெருமையை நிலை நாட்ட செய்யும் முயற்சிகளுக்காக கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்கள்.
சபா அமைப்பிற்கு ஆசிரியர்களின் பிரதிநிதியாக ரங்கா வெமுரியும், நிர்வாகிகளாக வருண், சந்தீப், ஸ்ரீதரன், விக்னேஷ் ஆகியோரும் செயல்பட்டு வருகின்றனர். மேலும் விவரங்களுக்கு http://www.sabhacincinnati.org/ அல்லது [email protected] என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.
யுஎஸ்ஸிலிருந்து ஆர் தினகர்












Click it and Unblock the Notifications