சபரிமலை ஐயப்பன் கோவில் மகர விளக்கு சீசன் நாளை முடிகின்றது
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல, மகர விளக்கு சீசன் நாளை முடிவடைகிறது. நாளை காலை 7 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2010-11ம் ஆண்டுக்கான மண்டல, மகரவிளக்கு சீசன் கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி தொடங்கியது. 41 நாள் மண்டல காலம் டிசம்பர் 27ம் தேதியுடன் முடிவடைந்தது. கடந்த 15ம் தேதி மகரவிளக்கு பூஜை நடந்தது. அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரிந்தது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் முக்கிய பூஜையான படிபூஜை கடந்த 17ம் தேதி தொடங்கி, இன்று வரை நடந்தது. படி பூஜைக்கு கட்டணமாக ரூ.30,001 வசூலிக்கப்படுகிறது. வரும் 2025ம் ஆண்டு வரை படிபூஜைக்கு முன்பதிவு முடிந்துவிட்டது. இந்த பூஜை நடக்கும் போது பக்தர்கள் 18ம் படி ஏற முடியாது.
இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு காலம் நாளையுடன் முடிகின்றது. பக்தர்கள் இன்று இரவு வரை மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். நாளை காலை 7 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். நாளை பந்தளம் மன்னர் பிரதிநிதி மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை அடுத்த மாதம் 15ம் தேதி மாலை திறக்கப்படும்.












Click it and Unblock the Notifications