சங்கனாச்சேரி திருக்கடித்தானம் அற்புத நாராயணன் திருக்கோவில்!

இந்தக் கோவிலில் இறைவனை நீண்ட நேரம்வழிபடத் தேவையில்லை. தூய்மையான மனமுருக ஒரே ஒரு நொடி வழிபட்டால் போதும். நம் வேண்டுதல்கள் நிறைவேறும். (அதற்காக நீண்ட நேரம் வழிபடக்கூடாது என்று பொருள் அல்ல. தூய்மையான மனத்துடன் ஒரு நொடி வழிபட்டால் கூட போதுமானது என்பதை வலியுறுத்தும் தலம் இது).
இது தவிர இந்தக் கோவிலுக்கு இன்னும் ஏராளமான சிறப்புகள் உண்டு. சகாதேவனால் உருவாக்கப்பட்ட தலம் . இங்குள்ள மதில்கள் பூதங்கள் ஒரே நாளில் உருவாக்கியது, கோவிலின் முன்னும் பின்னுமாக இரட்டைக் கொடிமரம், இங்குள்ள் இறைவன் அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சக்தி பெறுதல், ஒரே கர்ப்பக் கிரகத்தில் பெருமாள் கிழக்குமுகமாகவும், நரசிம்மர் மேற்குமுகமாகவும் அருள் பாலிப்பது. கோவிலின் முகப்பில் லஞ்சம் வாங்கியன் என்ன கதியடைவான் என்பதைக் காட்டும் விதமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு காவலாளியின் உடல் கோவில் முன் வைக்கப்பட்டிருப்பது என பல்வேறு சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ருக்மாங்கதன் என்ற மன்னன் சங்கனாச்சேரி பகுதியை ஆண்டு வந்தான். இவன் சூரியவம்சத்தை சேர்ந்தவன். இவனது அரண்மனைக்கு அருகில் இருந்த நந்தவனத்தில் ஏராளமான அரியவகை மலர்கள் பூத்திருந்தது. இதைக் கண்ட தேவர்கள் சிலர் விண்ணுலகத்திலிருந்து இங்குவந்து அந்த மலர்களை பறித்துச் சென்று இறைவனுகு அணிவித்து மகிழ்ந்தனர். தினமும் மலர்கள் காணாமல் போவதையறிந்த காவலர்கள், ருக்மாங்கதனிடம் இது பற்றி முறையிட்டனர்.
மலர்களை உங்களுக்குத் தெரியாமல் யாரோ பறித்துச் செல்கிறார்கள். நந்தவனத்தில் காவலை தீவிரப்படுத்தி, அவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களை கைது செய்து கொண்டுவாருங்கள் என்று உத்தரவிட்டான் மன்னன். மறுநாள் வழக்கம்போல் தேவர்கள் பூப்பறிக்க வந்தபோது அவர்களை காவலர்கள் பிடித்து கொண்டனர். பின்னர் அவர்களை மன்னன் முன்பு கொண்டு நிறுத்தினர்.
மன்னன் விசாரித்தபோதுதான் அவர்கள் தேவர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் வருத்தம் தெரிவித்து அவர்களை விடுவித்தான் மன்னன். ஆனால் தேவர்களால் வானுலகம் செல்ல முடியவில்லை. காரணம் எப்போது நாங்கள் மனிதர்களால் சிறைப்பிடிக்கப்பட்டோமோ அப்போதே வானுலகம் செல்லும் சக்தியை நாங்கள் இழந்து விட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்ட மன்னன் பதறினான். தேவர்களாகிய உங்களை இந்த கதிக்கு ஆளாக்கிவிட்டேனே? இதற்கு தீர்வுதான் என்ன என்று அவர்களிடமே கேட்டான். அதற்கு தேவர்கள் இதுவரை நீ மேற்கொண்ட ஏகாதசி விரத்ததின் பலன்களை மொத்தமாக எங்களுக்கு அளித்தால், நாங்கள் விண்ணுலகம் செல்ல முடியும் என்றனர்.
இதைக் கேட்டு மகிழ்ந்த ருக்மாங்கதன் அப்படியே தருகிறேன் என்று சொல்லி தேவர்களுடன் அங்குள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்றான். பெருமாள் சந்நிதியில் தனது ஏகாதசி பலன்களை தேவர்களுக்கு அளித்தான். அதன்பின் தேவர்கள் விண்ணுலகம் சென்றனர். இந்த நிகழ்ச்சிகள் யாவும் ஒரு கடிகைப் (நொடி) ப்பொழுதுதில் நடந்து முடிந்தது. இதனால் இந்த தலத்திற்கு கடிகைத்தானம் என்ற பெயர் வந்தது. பின்னர் திருக்கடிக்கைத்தானமாகி தற்போது மருவி திருக்கடித்தானமாக மாறியுள்ளது.
இறைவனை ஒரு நொடி வழிபட்டால் போதும் என்பதும் இதனால்தான்.
இங்குள்ள பெருமாள் சகாதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சகாதேவன் இந்தப்பகுதியில் கோவில் கட்ட வேண்டி வந்தபோது பெருமாள் விக்ரகம் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் தீக்குளித்து இறந்து போக முடிவு செய்து அதற்காக தயாரானபோது தான் பெருமாள் விக்ரகம் தானாகத் தோன்றியது. இந்த அற்புதத்தை குறிக்கும் வகையில்தான் இங்குள்ள் நாராயணருக்கு அற்புத நாராயணன் என்று பெயர் வந்தது.
இங்குள்ள பெருமாள் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாக ஐதீகம். கலியுகத்தின் முடிவில் இந்தப்பெருமாள் ஜோதிமயமாகிவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.
இங்கு நாராயணர் கற்பகவல்லி நாச்சியார் சமேதராக உள்ளார். வட்ட வடிவமான கர்ப்பக்கிரகத்தில் பெருமாள் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனர். பெருமாள்தான் பிரதான மற்றும் முதலான சந்நிதியாகும். நரசிம்மர் சந்நிதி பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரே கர்ப்பக் கிரகத்தில் இரண்டு சந்நிதிகள் இருப்பதால் இங்கு இரட்டைக் கொடிமரம் உள்ளது. கருவறைக்கு தெற்கே தட்சணாமூர்த்தி, விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த விக்ரகங்கள் அமைக்கப்பட்டுள்ள சந்நிதிக்கு கதவுகள் கிடையாது.
மரத்தால் ஆன சட்டங்கள் வழியேதான் இவர்களை வழிபட முடியும். பிரகாரத்தில் சாஸ்தா. சுப்பிரமணியர், நாகர் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள்து. இக் கோவிலைச் சுற்றி கட்டப்பட்ட பிரம்மாண்ட கல்சுவர்கள் பூதகணங்களால் ஒரே நாளில் கட்டப்பட்டதாக கூறுவர். நரசிம்மருக்கு ஒவ்வொரு பூஜையின் போதும் நாராயணீயம் படிக்கப்படுகிறது. இவருக்கு பால்பாயாசம் நைவேத்யமாக படைக்கப்படுகிறது.
இக் கோவிலின் முகப்பில் ஒரு கல்தூணில் இறந்த ஒரு மனிதரின் உடல் கிடத்தப்பட்டிருப்பது சிலையாக வடிக்கப்பட்டிருக்கிறது. அது இந்த கோவிலின் காவலாளியின் உடல். ஒரு முறை மன்னர் ஒருவர் இந்தக் கோவில்க்கு வந்த போது நடை சாத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் காவலாளி மன்னரிடம் பணம் (லஞ்சம்) வாங்கிக் கொண்டு கோவில்நடையை திறந்து விட்டிருக்கிறான். மரபை மீறிய அந்தக் காவலாளி அந்தக் கணமே பிணமாகிப் போனான். இந்த நிகழ்ச்சியை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டவே அவன் உடல் கோவில் முன் வைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
இக்கோவிலில் காலை 5 முதல் பகல் 11 மணி வரையிலும், மாலையில் 5 முதல் இரவு 8 மணி வரையிலும் நடைதிறந்திருக்கும். கேரளாவில் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் வழியில் சங்கனாச்சேரி உள்ளது. அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் திருக்கடித்தானம் கோவில் அமைந்துள்ளது. உணவு, தங்குமிட வசதிகள் சங்கனாச்சேரியில்தான். அங்கிருந்து திருக்கடித்தானம் சென்று வர பஸ்,ஆட்டோ வசதிகள் உண்டு
திருவிழா:
கார்த்திகை மாதம்தான் இக்கோவிலில் பிரதான திருவிழா கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் ஒன்பதாம் நாள் தீபம் ஏற்றப்படுகிறது. அன்று ஏற்றப்படும் தீபம் மறுநாள் வரை இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும். இந்த வைபவம் ‘சங்கேதம்’ என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமான் ஜோதி வடிவில் இங்கு தோன்றியதை குறிக்கும் வகையில் இந்த வைபவம் கொண்டாடப்படுகிறது. கலியுகத்தின் முடிவில் அதே ஜோதிவடிவில் இறைவன் இங்கிருந்து செல்வார் என்ற ஐதீகமும் இதன் அடிப்படையில் உருவானதுதான்.












Click it and Unblock the Notifications