துபாயில் வானலை வளர்தமிழின் கவியரங்கம்
துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் தலைவி திருமதி. மீனாகுமாரி பத்மநாதன் மற்றும் நாவலர் கெளஸ் மொகய்தீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
செல்வி ஆனிஷாவின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சி துவங்கியது. மேட்டுப்பாளையம் கவிஞர் ந. சந்திரசேகர் அவர்கள் தலைமையில் சிறப்புக் கவியரங்கம் ‘கணவன் மற்றும் நன்றி' ஆகிய தலைப்புகளில் நடைபெற்றது. எண்ணரதம் இழுத்து இலக்கியத்திலிருந்து காட்சிகளைக் காட்டி.. திரைத்துறையில் அதன் எதிரொலியாய் அமைந்த பாடல்களை எடுத்துரைத்து சிறப்புச் சொற்பொழிவே ஆற்றி கவியரங்கை கலகலக்க வைத்தவிதம் அவர்தம் தனிச்சிறப்பு!
குறிஞ்சிதாசன், இளையசாகுல், அதிரை கலாம், தெளலத் கான், ஜியாவுதீன், ஜெயராமன் ஆனந்தி, ஆனிஷா, விருதை மு. செய்யது உசேன், காவிரிமைந்தன், நர்கீஸ், மசாஃபி ரவீந்திரன், ஆதிபழனி மற்றும் சந்திரசேகர் ஆகியோரின் கவிதைகள் சிறப்பு சேர்த்தன. குறிப்பாக சிறப்பு விருந்தினராய் பங்கேற்ற திருமதி மீனாகுமாரி பத்மநாதன் அவர்கள் கணவன் பற்றி கவிதையொன்றையும், நன்றி பற்றிய கவிதையொன்றையும் வழங்கி பெருமை சேர்த்தார்.
சென்ற மாதம் சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்ட நாவலர் கெளஸ் மொகய்தீன் அவர்கள் உறுப்பினர்களின் ஏகோபித்த வேண்டுகோளினால் மீண்டும் சிறப்பு விருந்தினராய் பங்கேற்று முத்தமிழ் விருந்து வழங்கினார் என்று தான் சொல்ல வேண்டும். தமிழின் அருவி ஒன்று அமிழ்தைப் பொழிந்ததென்று சொன்னால் அது அவரின் உரையாகவே அமையும். இனியதோர் தமிழ் மொழியை இறைவன் தந்ததற்கும் அதன் உரிமை மக்களாக நாம் அமைந்ததற்கும் உள்ளபடி பேறு பெற்றோம் என்றும் அதன் சிறப்புக்களை அடுத்தடுத்து எடுத்துரைத்த கேட்டோர் உள்ளமெல்லாம் வியப்பின் விளிம்பில் நிற்கும்படி செய்து பாடல் கலையையும் பாங்காய் எடுத்துரைத்த அவரின் முழக்கம் என்றும் நம் மனதில் இனிக்கும்.
எண்ணற்றோர் வாழ்கின்ற இந்த அமீரகத்தில் இயங்கிவரும் அமைப்புகள் எத்தனையோ என்றாலும், தங்கள் எண்ணங்களை எழுதி வைத்து, ஏட்டில் பதித்து ஏற்றதோர் கவியரங்கம் நடத்தி வருதல் என்பது உள்ளபடி பாராட்டத்தக்க செயலாகும் என திருமதி மீனாகுமாரி பத்மநாதன் தன் உரையில் குறிப்பிட்டார். இனிவரும் காலங்களில்.. இதுபோல் அமைப்பு நடப்பதைப் பற்றி எடுத்துரைத்த நண்பர்கள் பலரை தங்கள் திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம் தமிழ்த்தேர் இதழில் இணைத்திட முயற்சிக்க வேண்டும் என்றும் தன் விருப்பத்தை பதிவுசெய்தார். நிகழ்ச்சிக்கு மெருகூட்டும் வண்ணம் கணவன் தலைப்பினை கெளரவிக்கும் விதம் தன் கணவர் திரு.பத்மநாதன் அவர்களுடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
அமைப்பின் ஆலோசகர் காவிரிமைந்தன் தொகுப்புரையாற்றினார். பலகுரல் வித்தகர் தஞ்சை பேசில் ராஜா தனது திறமைகளால் அவையோரின் பாராட்டைப் பெற்றார்.
திருமதி மீனாகுமாரி பத்மநாதன் அவர்களுக்கு திருமதி. ரம்யா அர்ஜுனன் பொன்னாடை போர்த்தினார். நினைவுப் பரிசை விருதைக் கவிஞர் மு. செய்யது ஹுசைன் வழங்கினார். நாவலர் கெளஸ் மொகய்தீன் அவர்களுக்கு நினைவுப் பரிசை கிளியனூர் இஸ்மத் வழங்கினார்.
கவியரங்கிற்கு தலைமை வகித்த ந.சந்திரசேகர் அவர்களுக்கு நினைவுப் பரிசினை திரு.அப்துல் லத்தீப் வழங்கினார். பதிப்பாசிரியர் திரு.ஜியாவுதீன் அவர்களுக்கு நினைவுப் பரிசினை மசாஃபி ரவீந்திரன் வழங்கினார்.
‘கணவன்' சிறப்பிதழின் முதல் பிரதியை திருமதி. மீனாகுமாரி பத்மநாதன் வெளியிட திருமதி. அனுசுயா கந்தநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை திரு.அர்ஜுனன் வெளியிட திரு.ஆனந்த் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை திரு. ஆனந்தன் வெளியிட திருமதி.நர்கீஸ் ஜியாவுதீன் பெற்றுக் கொண்டார்.
‘நன்றி' சிறப்பிதழின் முதல் பிரதியை திரு. பத்மநாதன் வெளியிட ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை திரு. கந்தநாதன் வெளியிட திருமதி.வாணி ஆனந்தன் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை திரு.மணிமுத்து சுவாமிக்கண்ணு வெளியிட திரு. ஆதிபழனி பெற்றுக் கொண்டார்.
விழாவின் நிறைவுரையாக நன்றியுரையை செல்வி நிவேதிதா வழங்கினார்.
காவிரிமைந்தன், ஜியாவுதீன், சிம்மபாரதி, கீழை ராஸா, கவிஞர் அத்தாவுல்லா மற்றும் ஆதிபழனி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.













Click it and Unblock the Notifications