ஓ.. திருடியதே நீதானோ...!!

தோள் சாய்ந்து
உன் வாள் விழி பார்த்தேன்...
வாவ்...!
அழகூட்டும் அந்த விழிகளை நினைத்தால் இப்படி வரும் வார்த்தைகள். காதலின் சுகமே, நினைத்துப் பார்ப்பதில்தான். கண்கள் வாள் போன்று என்பதெல்லாம் இலக்கிய வார்த்தைகளாக இருக்கலாம்... ஆனால் மனசை கூறு போட்டு கிழிக்கும்போது வாள் போலத்தான் தெரியும்.
எத்தனை முறை நான் கரைந்தாலும்
மறையவில்லை
என்னுள் புதைந்த உன் காதல் மட்டும்
மனசுக்குள் புதைந்து போன காதலை அவ்வப்போது எடுத்துப் பார்ப்பது போன்ற சுகம் எதுவும் கிடையாது. எப்போதெல்லாம் உன் காதலியை நினைப்பாய் என்று ஒரு காதலனைப் பார்த்துக் கேட்டால், எப்போது நான் மறந்தேன், நினைப்பதற்கு என்று திருப்பிக் கேட்பான்... அதுதானே அவனது மெயின் 'பொழப்பே'.. அவனிடம் போய் இப்படிக் கேட்டால்.!
கண்களிலிருந்து தவழ்ந்து வரும் துளிகளில்
கலர் கலராய் உன் முகம்...
சோகத்திலும் என்னை சந்தோஷப்படுத்துவது நீ மட்டுமே...!
கவலைப்பட்டாலும் கூட அப்போதும் சந்தோஷப்படுத்துவது காதல்தான்.. எப்படிப்பட்ட மனக் கவலையாக இருந்தாலும், மனம் கவர்ந்த மாந்தர்தனை நினைத்து விட்டால் எப்படி பீடிக்கும் கவலை... காதல் வலியைக் கொடுத்தாலும் கூட வலி நீக்கும் நிவாரணியாகவும், சமய சஞ்சீவியாகவும் திகழ்வதும் உண்மைதானே...
கரணம் தப்பினால் மரணம் என்பார்கள்
எனக்கோ உன் நினைவு தப்பினாலே மரணம்தான்
என்னுள்ளேயே இருந்து விடு...
நான் பிழைத்துக் கொள்வேன்
இதுதாங்க காதலில் ஹைலைட்டே... எதை வேண்டுமானாலும் ஒரு காதலன் இழந்து விடலாம். ஆனால் காதலியின் நினைவை மட்டும் அவனால் இழக்கவே முடியாது. காரணம், அதற்குப் பிறகு அவன் காதலனாக இருக்கவே அர்த்தமற்றவனாகி விடுகிறானே... நினைவுகள் போனால் நான் இல்லையே கண்ணே என்பது அர்த்தப்பூர்வமான வார்த்தைதான்.
உன்னை நினைத்த
அந்த நொடியில் அப்படியே பறந்தேனே
ஏனடி அப்படி...
அதுதான் காதலா...?
நிச்சயம் ஆய்வுக்குரிய விஷயம்தான். காதலுக்கு மட்டும் ஏன் இப்படி அசாத்தியமான பல விஷயங்கள் சாத்தியமாகின்றன என்பது நிச்சயம் புரியவே இல்லை. செய்ய முடியாதவை என்று பட்டியலில் உள்ள பல காரியங்களையும் காதலில் பீடித்தவர்கள் ஜஸ்ட் லைக் செய்து விட்டுப் போய் விடுகிறார்கள். நிச்சயம் காதல் சக்தி வாய்ந்தது என்பதில் சந்தேகமே இல்லைதான்.
என்ன சொல்வது தெரியவில்லை
என் மனதில் எல்லாமே வெள்ளையாய்
ஆனால்
சின்னப் புள்ளியாய்
நீ வந்தால்
பெரும் இலக்கியமே அங்கு பிறக்கும்
வருவாயா...!
அ ஆ கூட எழுதத் தெரியாதவனையும் கவிதை எழுத வைப்பது காதல் மட்டும்தான். காதலித்துப் பார் உன்னையே புதிதாக நீ உணர்வாய் என்று ஆரம்பித்து எங்கெங்கோ போய் நிற்பார்கள் இந்த காதலில் விழுந்தவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இலக்கியம் எல்லாம் எம்மாத்திரம்... காதலியரின் சின்ன புன்னகை போதாதா...
போன பிறவியில்
நீ திருடிய என் இதயத்தை
இந்தப் பிறவியில்
திரும்பக் கொடுக்க வந்தாயா
தேங்க்ஸ் தேவதையே...!
இதுவும் காதலின் உச்சமான உணர்வுதான். திருடிய இதயத்தைத் திருப்பிக் கொடுத்து விடு காதலா என்று காதலி பாடுவதும், இதயமே இதயமே என்று காதலன் பாடுவதும்.. காதலித்துப் பாருங்க சார், அதன் அருமை, அழகு புரியும்...
எப்படித் தொலைந்து போனேன்
எத்தனை சிந்தித்தும் தெரியவில்லை
உனக்குத் தெரியுமா, ஏதாவது...
ஓ.. திருடியதே நீதானோ...
காதலித்தால் பித்துப் பிடிக்கும், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் எதையாவது செய்வார்கள்... என்பது உலக வழக்கு. உண்மைதான்.. பல நேரங்களில் என்ன செய்கிறோம் என்றே தெரிவதில்லை. இன்னதென்று தெரியாமல் செய்யும் இவர்களை மன்னியும் பிதாவே என்று சொல்லிக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை, காதல் வயப்பட்டவர்களை.
உன் கண்களை மூடினால்
என் கண்கள் திறக்கிறது
என் கண்கள் மூடும்போது
உன் கண்கள் திறக்கிறது
இருவரும் சேர்ந்து திறக்கும்போது
கூடவே இதயமும் இறகு விரிக்கிறது
உள்ளே சின்னதாக நம் காதல்
அழகாக.. அருமையாக...
வாவ்...!
காதல் அழகு,, அழகானது மட்டுமே... அனுபவியுங்கள்...!












Click it and Unblock the Notifications