Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக். சிறுமிக்காக இந்தியரின் இதயம் துடிக்கிறது: துபாயில் அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு

Subscribe to Oneindia Tamil

Dubai
துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் புத்தாண்டு விழா, தமிழ்த்தேரின் மாத இதழ்களான தியாகம் மற்றும் பிறந்தநாள் சிறப்பிதழ்கள் வெளியீட்டு விழா மற்றும் மன்னார்குடி மருத்துவர்கள் டாக்டர் சி. அஷோக் குமார் மற்றும் டாக்டர் சிவ. தர்மராஜ் ஆகியோருக்கு பாராட்டு விழா ஆகியவை கடந்த 10ம் தேதி மாலை 7.30 மணியளவில் துபாய் கராமா சிவ்ஸ்டார் பவனில் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்தினை திருமதி. ஜெயா பழனி பாடிட நிகழ்ச்சி இனிதே துவங்கியது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் திருமதி. ஜெயா பழனி வரவேற்றார். நிகழ்ச்சிக்கு சிவஸ்டார் பவன் உணவகங்களின் உரிமையாளர் திரு.லெ.கோவிந்தராசு அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார்.

தமிழ்த்தேர் இலக்கிய இதழின் ஆசிரியர் கவிஞர் காவிரிமைந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வ‌ழங்கினார்.

மன்னார்குடி மருத்துவர் டாக்டர். சி.அஷோக் குமார் மற்றும் டாக்டர் சிவ. தர்மராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மத நல்லிணக்கம் பற்றியும், பிரிவினைகளைக் களைந்து பெருமிதத்துடன் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அன்னை பூமியிலிருந்து வந்திருக்கும் நமக்கெல்லாம் இந்த மண் (அமீரகம்) வளம் தருகிறது! வாழ்க்கை தருகிறது!! நலம் தருகிறது!! இதைப் போற்றுவது நம் கடமையாகிறது என்று குறிப்பிட்டார். இந்தியா பாகிஸ்தான் நாடுகளிடையே உள்ள பகையுணர்வு மாறி அண்டை நாட்டோடு நட்புறவை பலப்படுத்த வேண்டும் என்றும் சென்னையில் நடைபெற்ற இருதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் பாகிஸ்தான் சிறுமிக்கு இந்தியர் ஒருவரின் இதயம் பொருத்தப்பட்டு அவள் நலமுடன் இருப்பதாக டாக்டர் செரியன் அவர்கள் மூலம் அறிந்த தகவலை பகிர்ந்து அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழ வைத்தார்.

அதேபோல் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற டாக்டர். சி.அஷோக் குமார் அவர்களின் உரை எதிர்பார்ப்புகளை அப்படியே மாற்றி ஒரு இலக்கியப் படைப்பாளிபோல தமிழின் பெருமைகளை, நமது இலக்கிய இதிகாசங்களைப் பட்டியலிட்டு அதனின்று உவமைகள், உதாரணங்கள் எடுத்துக்காட்டி, வள்ளுவன் தொடங்கி, கம்பன், கண்ணதாசன் வைரமுத்து என பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய மாபெரும் சொற்பொழிவினை ஆற்றினார் என்பது மிகையில்லை. டாக்டர் சிவ. தர்மராஜ் தமது சுருக்கமான உரையில் பிள்ளைகளின் மீது பெற்றோரும், ஆசிரியர்களும் பெரும் சுமையை, எதிர்பார்ப்பை, பிள்ளைகளின் ஆர்வத்தை அறியாமல், தேர்ந்தெடுக்க வேண்டிய துறையை திணிப்பதை தவிர்க்க வேண்டும். இதன்மூலம் பிள்ளைகள் அவரவருக்கு விருப்பமான தொழிலை தேர்ந்தெடுக்கவும் அதில் முன்னணிக்கு வரவும் அதிக வாய்ப்பிருக்கும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திரு. வேணுகோபால், திரு. குணா, கவிஞர் கவிமதி, திரு.ரஃபிக், விருதை மு.செய்யது உசேன், திருமதி. மீனா பத்மநாதன், திருமதி. நர்கீஸ் பானு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்புரையாற்றிய திரு.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு அமைப்பின் தலைவர் திரு.கோவிந்தராஜ் அவர்கள் பொன்னாடை அணிவித்தார். டாக்டர் சி.அஷோக் குமார் அவர்களுக்கு தமிழ்த்தேர் பதிப்பாசிரியர் ஜியாவுதீன் அவர்கள் பொன்னாடை அணிவித்தார். நினைவுப் பரிசினை திரு.கோவிந்தராஜ் அவர்கள் வழங்கினார். டாக்டர் சிவ. தர்மராஜ் அவர்களுக்கு அமைப்பின் பொருளாளர் ஆதிபழனி பொன்னாடை அணிவித்தார். நினைவுப்பரிசினை ஈமான் அமைப்பைச் சேர்ந்த திரு. லியாகத் அலி அவர்கள் வழங்கினார்.

அடுத்து, தமிழ்த்தேரின் 73வது வெளியீடான தியாகம் சிறப்பிதழை திரு.அப்துல் ரஹ்மான் வெளியிட திரு.கே.ஜி.குணா முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். இரண்டாவது பிரதியை டாக்டர் சி. அஷோக் குமார் வெளியிட திரு. வேணுகோபால் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை டாக்டர் சிவ. தர்மராஜ் வெளியிட திரு.நடேஷ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

தமிழ்த்தேரின் 74வது வெளியீடான பிறந்தநாள் சிறப்பிதழை லயன் கருணைக்கடல் வெளியிட சங்கமம் தொலைக்காட்சி கலையன்பன் அவர்கள் பெற்றுக் கொண்டார். இரண்டாவது பிரதியை திரு,கோவிந்தராஜ் வெளியிட கவிஞர் தஞ்சாவூரான் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை முதுவை ஹிதாயத்துல்லா வெளியிட திரு. தாஹா அவர்கள் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, கீழப்பெரம்பலூர் கவிஞர் ஜெயராமன் ஆனந்தி அவர்கள் எழுதிய மணிமேகலைப் பிரசுரத்தாரின் வெளியீடான "குறைந்து போன கடிதப் பழக்கம்" என்கிற கவிதை நூலினை திரு.அப்துல் ரஹ்மான் அவர்கள் வெளியிட திரு.கோவிந்தராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை டாக்டர் அஷோக் குமார் அவர்கள் வெளியிட திருமதி. மீனா குமாரி பத்மநாதன் பெற்றுக்கொள்ள மூன்றாம் பிரதியை டாக்டர் சிவ. தர்மராஜ் அவர்கள் வெளியிட அஜ்மான் மூர்த்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்.

அமீரகத்தில் செயல்பட்டுவரும் ஏனைய அமைப்புகளின் பிரதிநிதிகள் குத்தாலம் அஸ்ரப், சந்திரா ரவி, ரமேஷ் விஸ்வநாதன், பட்டணம் மணி, எமிரேட்ஸ் அப்துல் லத்தீப், எஸ்.எம்.பாஃரூக், கிளியனூர் இஸ்மத், சைஃபுதீன், திருமதி. ஜெசீலா பானு மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அடுத்த இதழ்கள் வெளியீடு வரும் 18ம் தேதி அன்று 'அலைகள்' மற்றும் 'கலைகள்' எனும் தலைப்புகளைத் தாங்கி, கராமா சிவ்ஸ்டார் பவனிலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அடுத்த மாதத் தலைப்புகளான ‘உயிர்' மற்றும் ‘ஓவியம்' ஆகிய தலைப்புகளில் கவிதைகளையும், படைப்புகளையும் 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு உறுப்பினர்களையும், பங்கேற்பாளர்களையும் தமிழ்த்தேர் ஆசிரியர் குழு சார்பாகக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தமிழ்த்தேர் இதழின் பதிப்பாசிரியர் கவிஞர் ஜியாவுத்தீன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ், காவிரிமைந்தன், ஜியாவுத்தீன், கீழைராஸா, சிம்மபாரதி, ஆதிபழனி மற்றும் முதுவை ஹிதாயத்துல்லா ஆகியோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+