மாசி மகம்: கும்பகோணம் மகாமக குளத்தில் புனித நீராடிய பக்தர்கள்

மாசி மாதம் சூரியன் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்வார். மகம் நட்சத்திரம் சிம்மத்திற்குரியது. அன்றைய தினம் சந்திரன் மகநட்சத்திரத்தின் சிம்ம ராசியில் சஞ்சாரிக்கிறார். இந்த நாளே மாசி மகம் எனப்படுகிறது. அம்பிகை மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் அவதரித்தார் என்று மாசிமகத்தின் பெருமை கூறப்படுகிறது.
கோடீஸ்வர யோகம்
எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதம் வரும் மகம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக் கூடியவர். அதே நேரத்தில் கோடீஸ்வர யோகத்தையும் அள்ளித் தரும் வல்லமை உள்ளவர்.
புனித நீராடுவது புண்ணியம்
இந்நாள் எல்லா தெய்வங்களுக்கும் மிகவும் உகந்த நாளாகும். கோயில்களில் சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், யாகங்கள், உற்சவங்கள் நடைபெறுகின்றன.
பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொணர்ந்த நாளாகவும், சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாகவும் மாசிமகம் திகழ்கிறது. எனவேதான் இந்த நாளில் புனித நீராடுவது புண்ணியம் என்று கூறுகின்றன புராணங்கள்.
கும்பகோணத்தில் திருவிழா
மகாமகத் திருவிழா, நீர்நிலைகளின் மேன்மையை மக்களுக்கு போதிக்கிறது. நீர்நிலைகளைப் பாதுகாக்கவே, அவற்றை தெய்வத்துக்கு சமமாக முன்னோர் மதித்தனர்.
நதிகளில் புதுநீர் வரும்போது, அவற்றுக்கு பூஜை செய்தனர். இதனை கடலாடும் விழாவாகவே ஆதி காலம் தொட்டு மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
மாசிமகத்தன்று, கும்பகோணத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இருந்து மகாமக குளத்திற்கும், காவிரியாற்றுக்கும் சுவாமிகள் எழுந்தருளுவர்.
இறைவனுக்கு தீர்த்தவாரி
கும்பகோணத்தில் உள்ள பழம்பெரும் 12 சிவாலயங்களிலும், 5 வைணவத்தலங்களிலும் ஒருசேர நடத்தப்படும் இந்த மாசிமக பெருவிழாவில் பங்கேற்க, தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து கும்பகோணத்தில் குவிந்துள்ளனர் அதிகாலை ஆயிரக்கணக்கான மக்கள் முதலே மகாமக குளத்தில் நீராடி, முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வருகின்றனர்.
ஸ்ரீ சக்ரபாணி திருக்கோயில் மாசிமக திருவிழாவின் 9ஆம் நாளான இன்று, தேரோட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற தீர்த்தவாரிக்கு முக்கிய சிவாலயங்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் மாகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சென்னையில் மாசிமகம்
சென்னை மயிலாப்பூரில் உள்ள சிவ ஆலயங்களில் உள்ள உற்சவ மூர்த்திகளும், மாதவப் பெருமாள் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தியும் மெரீனா கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர். இதேபோல் மாமல்லபுரத்தில் தல சயணப்பெருமாளுக்கு கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் புனித நீராடினர்.
இதேபோல் மாசி மகத்தை முன்னிட்டு திருகோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் ஏராளமானோர் விளக்கேற்றி வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications