அவ்வை தமிழ் மையம் மற்றும் டாலஸ் தமிழ் மன்றம் இணைந்து வழங்கிய தமிழர் இசை விழா

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெக்சாஸ்: அவ்வை தமிழ் மையமும் டாலஸ் தமிழ் மன்றமும் இணைந்து வழங்கிய தமிழர் இசைவிழா கடந்த சனிக்கிழமை ஃபிரிஸ்கோ பகுதியில நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழர்கள் கலந்துகொண்டனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள டாலஸ் மாநகரைச் சார்ந்த அவ்வை தமிழ் மையமும் டாலஸ் தமிழ் மன்றமும் இணைந்து கடந்த சனிக்கிழமை ஜூலை பதினைந்தாம் நாள் தமிழர் இசை விழாவினை ஃபிரிஸ்கோ பகுதியில் நடத்தியது. இவ்விழாவில் மக்களிசைக் கலைஞர் ஜெய்மூர்த்தி, பண்ணிசைப் பாடகர் முனைவர் கோ.ப.நல்லசிவம், புரவலர் பால்பாண்டியன் முதலானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Avvai Tamil Sangam and Dallas Tamil Manram organised big Tamil music festival

கல்வெட்டியல், சுவடியியல், மூலிகை மருத்துவம், பக்தி இலக்கிய ஆய்வாளர், பண்ணிசை ஆய்வாளர், பேச்சாளர், எழுத்தாளரென விளங்குவதோடு, தேவார இசைமணி, சைவச்செம்மல், இலக்கியயிசையரசு உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்ற தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் முனைவர் கோ.ப.நல்லசிவம் அவர்கள் ஒருவாரகாலம் இப்பகுதியில் முகாமிட்டு பண்ணிசைப் பயிற்சிப் பட்டறை நடத்தினார்.

Avvai Tamil Sangam and Dallas Tamil Manram organised big Tamil music festival

அப்பயிற்சியில் பங்கேற்றுப் பயின்ற ​மாணவிகளான அன்னமயில் மனோகர், சிநேகா முத்தையா ஆகியோரின் பாடல்களோடு​ ​ நிகழ்ச்சி உயர்தர ஒளி/ஒலி அமைப்புகள் கொண்ட "ஃப்ரிஸ்கோ டிஸ்கவரி சென்டர்"(Frisco Discovery Center) எனும் சிறப்பு அரங்கத்தில் துவங்கியது.

மாணவர்களின் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒருமணி நேரத்துக்கும் மேலாக முனைவர் கோ.ப.நல்லசிவம் அவர்கள், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்டவற்றிலிருந்து பல பாடல்களைப் பாடினார், பண்ணிசையில் பாடப்பட்ட நாகூர் அனிபாவின் 'இறைவனிடம் கையேந்துங்கள்' என்கிற பாடல் வந்திருந்தோரின் மனத்தை உருக்குவதாக அமைந்தது.

Avvai Tamil Sangam and Dallas Tamil Manram organised big Tamil music festival

'பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயரை வையுங்கள்' எனும் பாடலில் அரங்கம் மெய்மறந்து சிந்தனைக்காட்பட்டது. பண்ணிசை, இசைத்தமிழ், தமிழிசை போன்ற நுணுக்கங்கள் குறித்துப் பேராசிரியர் பகிர்ந்து கொண்டதும் அரங்கத்தினரின் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

​அடுத்ததாக, ​ நாட்டுப்புறப் பாடல் சேகரிப்பாளார், மக்களிசை ஆய்வாளர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளார் என பன்முகங்களைக் கொண்டதோடு மட்டுமல்லாமல், சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், 'இந்த பொண்ணுங்களே இப்படித்தான் தெரிஞ்சு போச்சுடா' என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடியவரான இசைப்பாடகர் ஜெயமூர்த்தியின் மக்களிசை இடம் பெற்றது.

Avvai Tamil Sangam and Dallas Tamil Manram organised big Tamil music festival

இவர் பாடிய பாடல்களுள் தமிழே உயிரே வணக்கம், ஆத்தா உன் சேலை, ஊரடங்கும் சாமத்திலே ஆகிய பாடல்கள் அவையைக் கட்டிப் போட்டு விட்டன.

இவ்விழாவில் இடம் பெற்ற பண்ணிசை, மக்களிசை ஆகிய இரு நிகழ்ச்சிகளுக்கும் உள்ளூர்க்கலைஞர்களே இசையூட்டி வலுச்சேர்த்தனர். ஆறாம் வகுப்பு பயிலும் பதினொரு வயது மாணவ ரான​ நரேன் என்பவர் தபேலா, மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகளை தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாகக் கையாண்ட விதம் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த இசைக்கலைஞர்களின் பெரும் பாராட்டுதலுக்கு உரித்தானது. வயலின் வாசித்த உமாமகேஷ், கீபோர்ட் வாசித்த டாக்டர் செல்லையா பாண்டியன் அவர்களது பங்களிப்பும் மிகச் சிறப்பாக அமைந்தன.

Avvai Tamil Sangam and Dallas Tamil Manram organised big Tamil music festival

மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழிசை ஆய்வு மையம் நிறுவி அதன் மூலம் தமிழிசை ஆராய்ச்சிக்கும், ​தமிழிசை ஆய்வு​ மாணக்கர்களுக்கு உதவிகள் செய்து வருபவரும் , தமிழி​சைப் பேரகராதி (பண் களஞ்சியம்) வெளிவர உதவியவருமான புரவலர் பாவலர் பாண்டியன் அவர்கள் விழாவுக்கு முன்னிலை வகித்து கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்.

அவ்வைத் தமிழ்மையத் தலைவர் திரு.நந்தகுமார், டாலாஸ் தமிழ்மன்றச் செயலாளர் திரு.முனிராஜ் ஆகியோர் கலைஞர்களுக்குப் பட்டய ​ம் வழங்கியும், வந்திருந்தோர்க்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டனர். வந்திருந்த தமிழர்கள் இதுபோன்ற ​​இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நிகழ வேண்டுமெனத் தங்களுக்குள் பேசியபடித் தத்தம் இல்லங்களுக்குத் திரும்பினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Avvai Tamil Sangam and Dallas Tamil Manram organised big Tamil music festival at USA.
Please Wait while comments are loading...