Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலிங்கம் காண்போம் - பகுதி 47 - பரவசமூட்டும் பயணத்தொடர்

Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

ஆங்கிலேயர் ஆட்சியின்போதே ஒடியத்தின் ஆட்சித் தலைமையகமாக விளங்கிய கட்டாக்கிலிருந்து அரசாங்கக் கட்டடங்களை வேற்றிடத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மகாநதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகள் திங்கள்கணக்கில் நீடித்ததால் கட்டாக் நகரம் வெளிப்போக்குவரத்தோடு துண்டிக்கப்பட்ட நிலை. ஏறத்தாழ மகாநதிப் படுகையிலிருந்து சிறிதே உயர்வான தளத்திலுள்ள கட்டாக் நகரத்திற்கு ஏற்பட்ட வெள்ளப்பேரிடரை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. அதுவரை பூரி, கொனாரக் போலவே கோவில்தலமாகவே விளங்கிய புவனேசுவரம் ஆட்சித் தலைநகரமாக மாறிவிட்டது. அரசுக் கட்டடங்கள், பள்ளி கல்லூரிகள், ஆட்சியாளர் குடியிருப்புகள், பூங்காக்கள், அகல்தெருக்கள் என்று பழைய புவனேசுவரத்தையொட்டிய பகுதியில் நன்கு திட்டமிட்ட புதிய நகரத்தை உருவாக்கிவிட்டனர்.

exploring odissa kalingam

ஏறத்தாழ ஏழ்நூறு கோவில்களால் ஆன பழைய புவனேசுவரம் நெரிசல் மிகுந்த குறுகிய தெருக்களையுடையது. நாட்டிலேயே மிகுதியான கோவில்களையுடைய நகரம் புவனேசுவரம்தான். சிறிதும் பெரிதுமான கோவில்கள். தமிழகத்தின் காஞ்சிபுரத்தையும் கும்பகோணத்தையும் போன்றது. பிரிதெருக்கள் யாவும் ஐந்தடி, எட்டடி அகலங்களில்தாம் இருக்கின்றன. நம் நகரங்களில் ஒவ்வொரு கதவு எண்ணுக்கும் ஒரு வீடு இருப்பதைப்போல பழைய புவனேசுவரத்தில் ஒவ்வொரு கதவு எண்ணுக்கும் ஒரு கோவில் இருக்கின்றது. பழைய புதிய என்று ஒரு விளக்கத்திற்காகத்தான் பயன்படுத்துகிறேனேயன்றி, அங்கே இருப்பது ஒரே புவனேசுவரம்தான். பழைய நகரம், புதிய நகரம் என்று பிரித்தறிந்துகொள்ளுமளவுக்கு அந்நகரம் பெரிதில்லை.

நாடு விடுதலை பெற்றபின் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதொன்றாம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி புவனேசுவரத்தின் மக்கள் தொகை பதினாறாயிரத்து ஐந்நூற்றுப் பன்னிரண்டுதான். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து ஒன்பதாம் ஆண்டில்தான் நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. தொண்ணூற்று நான்கில் மாநகராட்சியாகியிருக்கிறது. இரண்டாயிரத்துப் பதினொன்றாம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் ஐம்பத்தெட்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது புவனேசுவரம் (மக்கள் தொகை 837737). மக்கள்தொகையின்படி தமிழகத்தின் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர் ஆகிய நகரங்கள் புவனேசுவரவத்திற்கு மேலே இருக்கின்றன. இவ்வொப்பீட்டிலிருந்தே அந்நகரம் எவ்வளவு பழைமை மாறாமலும் புதுமை கெடாமலும் இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

exploring odissa kalingam

கோடையில் மிதமான வெப்பமாகவும் குளிர்காலத்தில் வெடவெடக்க வைக்கும் குளிரோடும் இருக்கும். ஆண்டுதோறும் நல்ல மழைப்பொழிவு. மகாநதியினின்று பிரியும் கிளையாறான குவாகை ஆறு புவனேசுவரத்திற்குக் கிழக்கில் பாய்கிறது. அதிலிருந்து பிரியும் தயா ஆறு புவனேசுவரத்தை ஒட்டியபடி சென்று சிலிக்கா ஏரியில் கலக்கிறது. நகரத்திற்குள் விண்முட்டும் கட்டடங்கள் என்று பெரிதாக ஏதுமில்லை. தற்கால அடுக்குமாடிக் கட்டட முறைமைகள் புவனேசுவரத்தையும் விட்டுவைக்கவில்லை என்பதால் வளர்முகப் பகுதிகளில் அவை காணப்படுகின்றன.

நல்ல உறக்கத்திற்குப் பின்னர் எழுந்து கிளம்பியாயிற்று. முந்திய நாள் உண்ட உணவகத்திற்கு எதிர்த்திக்கில் நடந்ததில் சிறிய உணவகம் ஒன்றைக் கண்டுபிடித்தோம். உணவு விடுதியைப் பொறுத்தவரை எங்கே நல்ல கூட்டம் காணப்படுகிறதோ அதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் அப்பகுதியின் புகழ்பெற்ற உணவு விடுதியாக இருக்கும். நாம் கண்ட உணவகத்திற்குள் காலைக்கூட்டம் நன்றாகவே இருந்தது. உள்ளே புகுந்தமர்ந்து ஒரு மசாலா தோசையை உண்டேன். எங்கே சென்றாலும் மசாலா தோசை கிடைத்தால் அதையே தேர்ந்தெடுப்பது என் வழக்கமாகிவிட்டது. அதுதான் வயிற்றுக்கு இடையூறு செய்வதில்லை. உணவுக்குப்பின் குளம்பியோ தேநீரோ குடிப்பதும் என் வழக்கமில்லை. வயிற்றுக்குள் சென்ற உணவை அதன் தனித்தன்மையோடு விட்டுவிட வேண்டும். மேலும் புதிதாக ஒன்றைச் சேர்த்து வயிற்றைக் குழப்பக் கூடாது. ஒவ்வோர் உணவின் பின்னரும் வயிற்று உப்புசம், உறுமல், செரிமானமின்மை என்று பலவற்றோடும் போராடுகிறீர்கள் என்றால் அதற்குக் காரணம் எதிரெதிர்த்தன்மையுள்ல பண்டங்களைப் போட்டு அமுக்குகிறீர்கள் என்று பொருள். ஒற்றையுணவோடு நிறுத்திப் பாருங்கள். வயிறு நம் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும்.

- தொடரும்

[பகுதி1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46 ]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+