• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

கலிங்கம் காண்போம் - பகுதி 15: ஓர் இனிய பயணத்தொடர்

By Shankar
Google Oneindia Tamil News

-மகுடேசுவரன்

அங்குமிங்கும் சுற்றி கடற்கரையை ஒட்டியிருக்கும் விடுதிப் பகுதிக்குள் நுழைந்து விடுவித்தார் தானிழுனியார். அதற்குள் ஊரடங்கும் நேரமாகியிருந்தது. அருகிலிருந்த விடுதியொன்றில் அறையெடுத்தாயிற்று. அந்தப் பகுதி முழுக்கவே ஒவ்வொரு கட்டடமும் தங்குவிடுதிகளாகத்தாம் இருந்தன. இராமகிருட்டிண மடமும் அருகில்தான் இருந்தது.

Exploring Odhisha, travel series - 15

எம்மைப்போன்ற ஊர்சுற்றிகளுக்கு ஆங்காங்கே இருக்கின்ற இராமகிருட்டிண மடங்கள் தங்குமிடங்களைத் தந்து உதவினால் எவ்வளவோ நற்செயலாக இருக்குமே... மெய்வருத்தம் பாராது உற்றார் உறவினரைப் பிரிந்து செய்துகொண்டிருக்கும் வினைகள் துறந்து இந்நாடு பார்த்து ஊரார்க்கு எடுத்துரைக்கின்ற இச்செயலின் பொருண்மை எத்தரப்பினர்க்கும் ஏற்புடையதாகத்தான் இருக்கும் என்றே கருதுகிறேன். அதனால் இதுபோன்ற கோவில் நகரங்கள்தோறும் பரவியிருக்கும் மடங்கள் என்போன்றோரையும் ஒரு பிறவியாகக் கருதி உறைவிடம் தந்து உதவலாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Exploring Odhisha, travel series - 15

இந்த வகையில் பஞ்சாப் சிங்குகள் கையெடுத்து வணங்கத்தக்கவர்கள். கடந்த ஆண்டில் மகாராட்டிரத்தின் நாந்தேது நகரத்திற்குச் சென்றபோது அங்கிருந்த சிங்குகள் கோவிலின் தங்கும் வளாகத்திலேயே அறை தந்து ஆவன செய்தனர். அதற்கென்றே அந்நகரமெங்கும் நூற்றுக்கணக்கான விடுதியறைகளைக் கட்டி வைத்துள்ளனர். நாம் எந்த வண்டியில் வந்தோமோ அந்த வண்டியின் பதிவுச் சான்றிதழ் ஒளிப்படியை மட்டும் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள். அறை வாடகை என்று தலைக்கு நூறு உரூபாய் மட்டுமே பெற்றுக்கொள்கிறார்கள்.

திருப்பதி கோவிலைச் சுற்றிலும் இத்தகைய அமைப்புகளின் நூற்றுக்கணக்கான தங்குவிடுதிகள் உள்ளன. ஆனால், அவற்றில் தங்குவதற்கு உள்ளூர்க் கிளை மடத்திடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வரவேண்டும். அப்படியே பெற்று வந்தாலும் அங்கே உங்களுக்கு அறை தரலாகுமா இல்லையா என்பதை அம்மட நிர்வாகியே முடிவெடுப்பார். பூரியில் நாம் பார்த்த இராமகிருட்டிண மடத்தின் அப்பெரிய வளாகம் ஆளரவமின்றித்தான் இருந்தது. இராமகிருட்டிண மடத்தைப்போன்று எண்ணற்ற மடங்கள் அங்கே இருந்தன. மது, புகைக்கு எதிரான என்போன்றோரைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் என்ன... நாடோடி வேட்கையுடைய புழுதிக்கால்களைக் கொண்ட மனத்தினன் ஒருவனின் கோரிக்கையாக இதை ஏற்று உரியவர்கள் ஆவன செய்வார்களாக.

அறையில் பைச்சுமைகளை வைத்தாயிற்று. கடற்கரையையொட்டிய பகுதியில் நம் விடுதி என்பதால் இரவுக் கடற்காற்று உடற்பட வேண்டும் என்ற விருப்பம் தோன்றியது. இரண்டு மணித்துளி நடையில் கடற்கரை தென்பட்டது. தொலைவிலிருந்து அலையோசை கேட்டது. காரிருளின் அடியில் சுருக்கமில்லாத கருங்கம்பளம் போன்று கடல் பரவியிருந்தது. கடற்கரை மணலில் இறங்கியதும் மணல்மென்மையை உணர்ந்தேன்.

Exploring Odhisha, travel series - 15

இருபுறமும் மணல்வெளியாகத் தெரிந்த பூரிக் கடற்கரை சிலிக்கா ஏரியிலிருந்து தங்கு தடையின்றிப் பரவியிருக்கிறது. பூரி நகராட்சிக்குட்பட்ட எல்லையில் ஐந்தாறு கிலோமீட்டர்களுக்கு சுற்றுலாப் பயணியர் இங்கே வந்து பார்க்கின்றனர். கடற்கரை தொடங்குமிடத்திலிருந்த சுவரருகே பத்திருபது இளைஞர்கள் மது குடித்துக்கொண்டிருந்தனர். அவர்களுடைய கூச்சல் காதைப் பிளந்தது. அவர்களால் நமக்குத் துன்பமில்லைதான் என்றாலும் குடிகாரனை நம்பவே கூடாது, குடிமடையன் எந்த நேரத்திலும் அடுத்தவனுக்கு எப்படிப்பட்ட இடையூறுகளையும் செய்யக்கூடியவன். நள்ளிரவில் இதுபோல் பொது இடத்தில் கூடிக் குடிப்பவர்களைப் பிடித்து உட்காருமிடத்தில் பழுக்கக் காய்ச்ச வேண்டும். சோறு தண்ணீர்க்குத்தான் இரக்கம் வரவேண்டும். போதைக்குடியரிடம் எதற்குச் சலுகை என்று கேட்கிறேன்.

விடுவிடு என்று கடல் பரப்பை நோக்கி நகர்ந்தேன். அந்நேரத்தில் கடற்கரையில் அங்கிங்கு என்று ஓரிருவர் காணப்பட்டனர். கடற்கரைக் கடைகள் படுதா போட்டு மூடப்பட்டிருந்தன. குறுக்கும் நெடுக்குமாய் நாய்கள் சில ஓடின. ஓரிரு குடும்பத்தினரும் தம் பிள்ளைகளோடு வந்திருந்தனர். வானம் முகில்மூட்டமாய்க் காணப்பட்டதால் உடுக்கள் தென்படவில்லை.

அலைப்புரள்வின் ஓயாத பெருக்கத்தின் இழுப்பொலியும், கரையில் மோதியுடைந்து காலடியைத் தொடவரும் நீர்ப்பாய்வின் தேய்வொலியுமாய்க் கேட்டுக்கொண்டிருந்தேன். கடற்கரையின் இரவுத் தனிமையை அன்றுதான் உணர்ந்தேன். அகன்று பரந்த வெளியில் நீரும் நிலமும் இதழ்கவ்வி வெளியிடும் ஈரமான மூச்சுக்காற்றில் என்னை மறந்திருந்தேன். தொலைவில் சில மீன்பிடி படகுகள் கடலில் அலைந்துகொண்டிருந்தன. அதன் மஞ்சள் விளக்கொளியைப் பார்க்க முடிந்தது. உலகமே உறங்கினாலும் யாரோ ஒருவர் தம் பிழைப்புச் செயலில் ஈடுபடத்தான் வேண்டும் போலும். திரும்பிப் பார்த்தேன். தொலைவில் பூரி நகரத்தின் கட்டடங்கள் மின்விளக்கொளியில் நனைந்திருந்தன.

- தொடரும்

English summary
The 15th part of Kalingam Kaanbom, travel series on Exploring Odhisha state, written by Magudeswaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X