• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

கலிங்கம் காண்போம் - பகுதி 6: ஓர் இனிய பயணத்தொடர்

By Shankar
Google Oneindia Tamil News

- கவிஞர் மகுடேசுவரன்

விடிகாலை ஐந்து மணிக்கு விழிப்பு வந்துவிட்டது. அங்கிருந்து அரக்குப் பள்ளத்தாக்குக்குப் பேருந்து பிடிக்க வேண்டும். இருப்பூர்தியகத்து ஒப்பனை அறையில் முகங்கழுவிக்கொண்டு வெளியே வந்தால் அந்நாளின் இளங்கதிர் வெளிச்சம் நகரில் பரவியிருந்தது.

இருப்பூர்தி நிலையத்தை விட்டு வெளியே வந்தாலே தானிழுனி (ஆட்டோ) ஓட்டுநர்கள் சுற்றி வருகிறார்கள். சென்னையர்களைப்போல வற்புறுத்தி இழுக்கின்ற அணுகுமுறை இல்லை. அவர்களுடைய பேச்சில் தெலுங்குப் படத்தில் உணர்ந்த ஒரு பணிவு இருந்தது. அங்கிருந்து பேருந்து நிலையம் பக்கம்தான். ஆனால், காலையிலேயே நடந்துவிட்டால் உடலாற்றல் வடிந்துவிடுமே. அரக்குப் பள்ளத்தாக்கில் எப்படி நடக்க வேண்டும் என்பதும் தெரியாது.

Exploring Odhisha, travel series - 6

எட்டு மணித்துளிப் பயணத்தில் விசாகப்பட்டினப் பேருந்து நிலையம் வந்துவிடுகிறது. விசாகப்பட்டினத்தில் மேலும் சில பேருந்து நிலையங்கள் இருக்கக்கூடும். இருப்பூர்தி நிலையத்திற்கு அருகில் இருக்கும் இப்பேருந்து நிலையத்தில்தான் அரக்குப் பள்ளத்தாக்குக்குச் செல்லும் பேருந்துகள் புறப்படுகின்றன.

பேருந்து நிலையத்தின் முன்பாக ஓர் அறிவிப்புப் பலகை இருக்கிறது. அதில் ஒரு பேருந்து நிலையத்தில் இருக்க வேண்டிய ஒவ்வொரு பகுதியையும் அம்புக் குறியிட்டுக் காண்பித்திருக்கிறார்கள். நம்மூர்ப் பேருந்து நிலையங்களிலும் அப்படியோர் அறிவிப்புப் பலகையை வைக்கலாம். காசெடுப்பகம், கழிப்பறைகள், முன்பதிவிடம் என எல்லாம் அம்புக்குறியிடப்பட்டுள்ள வழிகாட்டுப் பலகை.

ஆந்திரப் பிரதேசத்து அரசுப் பேருந்துகள் நன்றாகவே இருக்கின்றன. பயணச் சீட்டு பெறுவதற்கும் முன்பதிவுக்கும் தனிக்கூண்டுகள் செயல்பட்டுக்கொண்டிருந்தன. வண்டியில் ஏறியமர்ந்ததும் கிளம்பியது. அளவான கூட்டம். விடிகாலையில் விசாகப்பட்டினப் பெருஞ்சாலைகளைக் கடந்து சென்றது.

Exploring Odhisha, travel series - 6

நகரில் வானளாவிய கட்டடங்கள் ஏதுமில்லை. இரண்டடுக்கு மூன்றடுக்கு தளங்களையுடைய கட்டடங்கள் இருந்தன. திருவனந்தபுரத்து வீடுகளைப்போல மரங்கள் செழித்த மாளிகைகள் காணப்பட்டன. ஒரு பிரிவுச் சாலையைப் பிடித்துச் சென்றால் அது மலைக்குன்றின்மீது முட்டி முடியும். சுவரொட்டிகள் ஒட்டுவதில் கடுமையான கட்டுப்பாடு நிலவுவது நன்கு தெரிந்தது. ஆங்காங்கே இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் நம்மூர் மக்களைப் போன்றே அவர்களும் காத்திருந்தனர். நிழற்குடைகள் நன்கு பராமரிக்கப்பட்டுள்ளன.

பெயர்ப்பலகைகளில் தெலுங்குக்குப் போதிய இடம் கொடுத்திருந்தார்கள். தமிழ்நாட்டில் உள்ளதைப்போல முழுமையாக ஆங்கிலத்தின் கொடுங்கரத்தில் அவர்கள் சிக்கிக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். வழியில் கொத்தவலச, போதர என்று இரண்டு சிற்றூர்கள் வந்தன.

பேருந்துகளை அவ்வோட்டுநர்கள் முறுக்கிப் பிழிகின்றனர். அவர்களோடு ஒப்பிடுகையில் நம்மூர் ஓட்டுநர்கள் பூப்போல ஓட்டுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சமவெளி முடிந்து மலைத்தொடரில் பேருந்து ஏறத் தொடங்கியது. மலைப்பாதை என்றும் பாராமல் பாய்ந்து ஏறியது. மகிழுந்தில் இப்பகுதிக்கு வருவோர் இம்மலைப் பாதையில் சற்றே கவனத்துடன் மெதுவாக வண்டியைச் செலுத்துக என்று கேட்டுக்கொள்கிறேன். நல்ல வளைவுகள், குறுகலான திருப்பங்கள் மிகுந்திருக்கின்றன. மகிழுந்துகளை மிரட்டுமாறு பேருந்துகளை விரட்டுகிறார்கள்.

நம் உதகமண்டலமானது கடல் மட்டத்திலிருந்து 7347 அடிகள் உயரமுடையது. கோடைக்கானலின் உயரம் 6998 அடிகள். ஏற்காட்டின் உயரம் 5326 அடிகள். அரக்குப் பள்ளத்தாக்கின் உயர்ந்த சிகரமான காளிகொண்டலின் உயரமே ஐயாயிரம் அடிகள்தாம். மூவாயிரம் அடிகள் உயர்த்திலுள்ள மேல்மலைச் சமவெளிதான் அரக்குப் பள்ளத்தாக்கு.

கிழக்குத்தொடர்ச்சி மலைகள் வங்கத்தையும் மகதத்தையும் தொடாமல் முடிவடைகின்றன. அதன் வடகிழக்கு மலைத்தொடர்மீது அரக்குப் பள்ளத்தாக்கு அமைந்திருக்கிறது. விசாகப்பட்டினத்திலிருந்து நாற்பது பாலங்கள், இருபதுக்கும் மேற்பட்ட மலைக்குடைவுச் சுரங்க வழிகள் ஆகியனவற்றை அமைத்து அரக்குக்கு இருப்பூர்தி வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. நாம் சென்றபோது அண்மை மழையில் பாலங்கள் பழுதாகிவிட்டமையால் இருப்பூர்திகள் நிறுத்தப்பட்டிருந்தன.

Exploring Odhisha, travel series - 6

மலைப்புறங்களைத் தாண்டி ஏறினால் மலையின்மேல் மேடு பள்ளங்கள் மிகுந்த பெருஞ்சமவெளியைத்தான் காண முடிகிறது. அரக்குக்கு அப்பால் ஒடிசா மாநிலத்தின் எல்லையும் அருகேதான் இருக்கிறது. மேலும் சில மணி நேரங்கள் சாலை வழியே சென்றால் சத்தீஸ்கரத்திற்கே செல்லலாம்.

எங்கும் மலைத்தொடர்கள்தாம். அந்த மலைத்தொடர்கள்தாம் கலிங்கத்திற்கு வரலாற்றில் காவலாய் நின்றவை. கங்கைச் சமவெளியைக் கைப்பற்றியவர்கள் கலிங்கத்தைச் சூறையாடாமல் விட்டுவைத்தார்கள். அதனால்தான் கலிங்கத்தில் நம்மைக் காட்டிக்கொடுக்கும் வரலாற்றுச் சுவடுகள் பல பாழ்படாமல் இருக்கின்றன.

Exploring Odhisha, travel series - 6

அரக்குக்குச் செல்வதற்கு முப்பது கிலோமீட்டர்கள் முன்பாக வழியிலேயே இறங்கிக்கொண்டால்தான் பொர்ராக் குகைகளைப் பார்க்க முடியும். பொர்ராக் குகைப்பிரிவில் நடத்துனரே இறக்கிவிட்டார். அங்கிருந்து ஆறு கிலோமீட்டர்கள். வழியெங்கும் மலைக்கிராமங்கள். தானிழுனிக்கு வாடகை பேசியமர்த்தி பொர்ராக் குகைகளை நோக்கிக் கிளம்பினோம்.

- தொடரும்

English summary
The 6th part of Kalingam Kaanbom, travel series on Exploring Odhisha state, written by Magudeswaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X