மான்செஸ்டரில் பொங்கலோ பொங்கல்.. தமிழர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
மான்செஸ்டர்: இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் தமிழர்கள் கூடி பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
உலகமெங்கும் உள்ள தமிழர்கள் இந்த வருடம் தை முதல் நாளான தைபப் பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடினர். வழக்கத்தை விட அதிக உற்சாகத்துடன் இந்த முறை தமிழர்கள் கொண்டாட்டங்களில் உணர்வு மிகுந்து காணப்பட்டது.
அதேபோல மான்செஸ்டர் வாழ் தமிழ் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் பொங்கல் விழாவாக ஜனவரி 20ம் நாள் சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாடினர். விழா பரி நகர டவுன் ஹாலில் நடைபெற்றது.

குத்துவிளக்கேற்றி தொடக்கம்
விழாவை மதுசங்கர் பாலசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்க, மீனா சிவலிங்கம் திருவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். விழாவில் ஜெயந்தி சிவக்குமார் அவர்களின் தேஜஸ் ஆர்ட்ஸ் குழுவினரின் ஒயிலாட்டம், கோலாட்டம் நடந்தது.

பரதம், பறையிசை
நிர்த்யா ராம்மோகன் அவர்களின் நிர்த்யகலா ஆர்ட்ஸ் குழுவினரின் பரதம் மற்றும் பல வகையான நடன நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனந்தராஜா கனேஷ் அவர்களின் யுனைடட் ஆர்ட்ஸ் குழுவினரின் கிராமிய இசை, பறையிசை, பட்டிமன்றம் என பல வகையான கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
பெரும் திரளான மக்கள் பங்கு பெற்ற இவ்விழாவில் குழந்தைகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. மூன்று வயது முதல் பதினான்கு வயதுக்கு உற்பட்ட நாற்பது குழந்தைகள் இப்போட்டியில் பங்கு பெற்று பார்வையாளர்களை பரவசமடைய செய்தனர்.

வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசு
கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஊக்க சான்றிதல்கள் வழங்கப்பட்டன, வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வெளி நாடு வாழ் தமிழ் மக்கள் தமிழ் கற்பதற்கு ஏதுவாக எழுதப்பட்ட அடிப்படை தமிழ் புத்தகம் அமிழ்தம் தமிழ் பள்ளி சார்பில் வெளியிடப்பட்டது. சுவிதா சரவணா மற்றும் நாச்சியப்பன் நன்றி தெரிவிக்க விழா இனிதே முடிந்தது.












Click it and Unblock the Notifications