'தடம் பதித்த தங்க மகனே எழுந்து வா'.. மறைந்த நடிகர் விவேக்கிற்கு நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சி
மதுரை: "தி சென் அகாடமி" சார்பில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு ஐந்து நாட்கள் நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகக் கடந்த வாரம் உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்கத் தகனம் செய்யப்பட்டது.
திரையுலகத்தைத் தாண்டி பன்னோக்கு சிந்தனை கொண்ட சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படக்கூடிய நடிகர் பகுத்தறிவாளர் விவேக்கிற்கு, "தி சென் அகாடமி" ஐந்து நாட்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியது.

விவேக்கிற்குக் கவிதாஞ்சலி
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 19 முதல் 23 வரை ஐந்து மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. முதல் நாள் பன்னாட்டுக் கவியரங்கம் நடத்தப்பட்டது. "தடம் பதித்த தங்க மகனே எழுந்து வா" என்ற தலைப்பில் 25 கவிஞர்கள் விவேக்கிற்குக் கவிதாஞ்சலி செலுத்தினர். இதனை, தென்காசி கவிவேந்தன் இராஜேந்திரன் தமிழாசிரியர் தலைமையேற்றுச் சிறப்புற நடத்தினார்.

பட்டிமன்றம்
இரண்டாம் நாள் "பன்னாட்டுப் பட்டிமன்றம்" நடைபெற்றது. "மக்கள் மனதில் விவேக் நிலைத்து நிற்க அதீத காரணம் நடிப்பாற்றலா? பகுத்தறிவா? சுற்றுச் சுழலியலார்வமா?" என்ற தலைப்பில் கனடா கவிஞர் அன்புடன் புகாரி தலைமையில் இந்த பட்டிமன்றம் நடைபெற்றது. மூன்றாம் நாள் "பன்னாட்டு பேச்சரங்கம்" நடத்தப்பட்டது. தமிழறிஞர் கவிஞர் கா. அப்துல் ரகீம் தலைமையில் "திரைப்படங்களின் வழியே நடிகர் விவேக் முன்னெடுத்தது அரசியலா? பகுத்தறிவா? மனித நேயமா? இயற்கையார்வமா? சமூக சீர்திருத்தமா? விழிப்புணர்வா? என 10 தலைப்புகளில் பேச்சாளர்கள் தங்கள் கருத்துகளை வழங்கினர்.

விவேக் நினைவேந்தல் நிகழ்ச்சி
நான்காம் நாளில் கனடா தமிழாழி தொலைக்காட்சி இயக்குநர் தமிழ்மணி க. உயிரவன் தலைமையில் சொற்பொழிவு நடைபெற்றது. சுவிட்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலை முதல்வர் பொன். முருகவேள், தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சி பொறுப்பாளர் கவிஞர் தாழை இரா. உதயநேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு " என் பார்வையில் விவேக்" என்ற தலைப்பில் இதில் சொற்பொழிவாற்றினர். இறுதி நாளில் விவேக் குறித்து வினாடி வினா நிகழ்வு நடைபெற்றது.

நூல் வெளியிட முடிவு
நான்கு நாட்களும் இந்நிகழ்விற்கு வருகை புரிந்த அனைத்து சிறப்புச் சொற்பொழிவாளர்களும் விவேக் குறித்த தங்கள் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் அவருக்கு 'விவேகரத்னா' என்ற விருது வழங்கப்பட்டது. இறுதி நாளில் துபாய் ஆளுமையாளர் மற்றும் கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் அ .முகமது முகைதீன், துபாயிலிருந்து தமிழார்வலர் முதுவை ஹிதாயத்துல்லா, ஜெர்மனியிலிருந்து தமிழ்மணி கவிஞர் நகுலா சிவநாதன், நடிகர் விவேக்கின் தோழரும் சுற்றுலாத்துறை அரசு அதிகாரியுமான கவிஞர் இரா.இரவி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் வழங்கப்பட்ட அனைத்து கவிதைகளையும் கட்டுரைகளையும் தொகுத்து ஒரு நூலாக வெளியிடவும் தி சென் அகாடமி முடிவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications