ஆன்மீகச் சிறப்புபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹார பெருவிழா- சிறப்பு பார்வை
திருச்செந்தூர்: ஆன்மீகச் சிறப்பு வாய்ந்த திருச்செந்தூர் சூரசம்ஹார பெருவிழா நவம்பர் 8ம் தேதி அதாவது நாளை திருச்செந்தூரில் நடைபெறவுள்ளதால் பக்தர்கள் வெள்ளம் திருச்செந்தூர் கடல் அலைகளை தோற்கடித்து வருகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெரும் சூரசம்ஹாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பல லட்சம் பேர் இதைப் பார்த்து மகிழ நேரில் வருவது வழக்கம்.
சூரசம்ஹாரம் குறித்த ஒரு சிறப்புப் பார்வை....

மாங்கனியைப் பெறுவதில் போட்டி
சிவபெருமான் -பார்வதிதேவி தம்பதியினரின் இளைய மகனாக முருகப் பெருமானுக்கும், அவரது சகோதரரான விநாயகப்பெருமானுக்கும் இடையே மாம்பழத்தை பெறுவதில் போட்டி எழுந்தது.
ஞானசித்தியால் தாய், தந்தையை சுற்றி வந்து வென்ற விநாயகர்
தனது ஞானசித்தியால் நாரதரின் கூற்றுப்படி தாய், தந்தையரை சுற்றிவந்து மாம்பழத்தை பெற்றார் விநாயகர். மயில்மீது ஏறி உலகை சுற்றிவந்த முருகன் மாம்பழம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தார். பழம் கிடைக்காத ஆத்திரத்தில் கோபம் கொண்ட முருகப்பெருமான் பழனியில் கோமண ஆண்டியாக எழுந்தருளினார் என்பதெல்லாம் பக்தர்கள் அறிந்த சேதியாகும்.

அழகன்.. மணவாளன்.. வள்ளி மணாளன்.. கந்தன்..
தமிழகத்தில் திருத்தணி, திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, பழமுதிர்சோலை என ஆறு இடங்களில் ஆறுபடை வீடுகளை கொண்ட முருகப்பெருமான், ஆறுமுகன், சரவணபவன், கந்தன், கடம்பன், அழகன், மயில்வாகனன், வள்ளி மணவாளன், குமரன் எனப்பல்வேறு பெயர்களில் பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

2ம் படை வீடு
அறுபடை வீடுகளை கொண்ட முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடானது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வங்கக்கடலோரம் அமைந்துள்ளது. அறுபடை வீடுகளில் மற்ற திருத்தலங்களில் இல்லாத சிறப்பானது திருச்செந்தூரில் எழுந்தருளி கோவிலில் கொண்டுள்ள முருகப்பெருமானுக்கு உண்டு.

சூரபத்ம வதம்
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்துவந்த கொடிய அரக்கனான சூரபத்மனை முருகப்பெருமான் போரிட்டு அழித்து தேவர்களையும், முனிவர்களையும் காத்தார். சூரபத்மனை அழிந்து தேவர்களை காத்த முருகப்பெருமானின் பக்தி திருவிளையாடல் நிகழ்வானது திருச்செந்தூர் கடற்கரையிலேயே நிகழ்ந்தது. இதனால் மற்ற திருத்தலங்களில் இல்லாத அளவிற்கு ஆன்மிக உலககில் புகழ் பெற்ற சிறப்புடன் சூரசம்ஹார திருவிழா பாரம்பரியத்துடன் பக்தர்களால் ஆண்டுதோறும் கடற்கரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அழிக்க முடியாத வரம் பெற்ற சூரன்
சிவபெருமானை தவம் செய்ததன் பலனாக அவரிடம் இருந்து யாராலும் அழிக்கமுடியாத வரத்தை சூரபத்மன் பெற்றான். அழிக்க முடியாத அரிய வரம் பெற்ற சூரபத்மன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவகையான தொல்லைகளை கொடுத்தான். சூரபத்மனின் தொல்லை பொறுக்கமுடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று சூரபத்மனை அழித்து தங்களை காப்பாற்றும்படி வேண்டினர்.

ஞானக்கண் ஆறில் இருந்து...
இதன்பொருட்டு சிவபெருமான் தனது ''சக்யோஜாதகம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம் மற்றும் தனது ஞானக்கண் ஆறில் இருந்து ஆறுசுடர்களை உருவாக்கினார். அச்சுடர்களை வாயு, அக்னிதேவனிடம் ஒப்படைத்த சிவபெருமான் அதனை கங்கையிடம் சேர்க்குமாறு கூறினார். கங்கை அச்சுடர்களை சரவணபொய்கையில் சேர்த்ததின் பலனாக ஆறு தாமரை மலர்களில் உருவான ஆறு மழலைகளை ஆறு கார்த்திகைப்பெண்கள் பாலூட்டி வளர்த்தனர்.

ஒருமுகமாகிய ஆறுமுகம்
ஆறுமழலைகளாக வளர்ந்த முருகப்பெருமானை அன்னை பராசக்தி ஒரே முகமாக்கி ஆறுமுகம் என்று பெயரிட்டு, ஞான சக்தியாகிய வேலாயுதத்தினை கொடுத்து சூரபத்மனை அழிக்க அனுப்பி வைத்தார். அதன்படி வங்கக் கடலோரம் நடந்த போரில் ஆறுமுகப்பெருமான் ஆணவம் கொண்ட சூரபத்மனுடன் சண்டையிட்டு அவனை அழித்தார் என்பது ஆன்மிக வரலாறாகும்.

ஆறு நாள் விரதம் இருந்து குமரனை வேண்டினால்
கந்தசஷ்டி திருவிழாவின் ஆறு நாட்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கினால் குழந்தைவரம், திருமணவரம் உள்பட கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். திருச்செந்தூரில் நடக்கும் கந்தசஷ்டி திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்துவரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் தங்கியிருந்து ஆறு நாட்கள் கடும் விரதம் மேற்கொள்வர்.

கடற்கரையில் சூரசம்ஹாம்
கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா கடற்கரையில் நடக்கும். அன்று பகல் யாகசாலையில் இருந்து ஜெயந்திநாதர் தபசு மண்டபத்திற்கு எழுந்தருள்வார். தபசு மண்டபத்தில் நடத்தப்படும் வழிபாடுகளைத் தொடர்ந்து முருகப்பெருமானான ஜெயந்திநாதர் தனது படை பரிவாரங்களுடன் மாலையில் கடற்கரையில் சூரபத்மனை வதம் செய்ய புறப்பட்டு செல்வார். அங்கு நடக்கும் போரில் ஆறுமுகப்பெருமான் சூரபத்மனை அழித்து வெற்றியை நிலைநாட்டுவார்.

கஜமுகம்.. சிங்கமுகம்.. நிஜ முகம்
போரின் போது சூரபத்மன் முதலில் யானை முகமான கஜமுகத்துடனும், 2வதாக சிங்க முகத்துடனும், இறுதியில் தனது நிஜ முகத்துடனும் ஆறுமுகப் பெருமானுடன் போர் புரிவான். சூரபத்மனின் ஆணவத்தை அழித்து வெற்றியை நிலைநாட்டிய ஆறுமுகன் சூரபத்மனின் நிஜஉருவத்தை இரண்டாக பிளந்து ஒரு பகுதியை சேவலாகவும், இன்னொரு பகுதியை மயிலாகவும் மாற்றி தன்வாகனங்களாக ஆட்கொண்டார்.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
முருகப்பெருமான் சூரபத்மனை அழிக்கும் நிகழ்வினை காண்பதற்காக கடற்கரையில் லட்சக்கணக்கில் கூடியிருக்கும் பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வெற்றி வெற்றி ஆணவத்தை அழித்த எங்கள் ஆறுமுகனுக்கு வெற்றி வெற்றி'' என்று உற்சாகத்துடன் பக்திகோஷத்தை எழுப்பி முருகனை வணங்குவர்.

திருக்கல்யாணம்
சூரசம்ஹார விழாவைத் தொடர்ந்து அடுத்தநாள் முருகப்பெருமானுக்கும், தெய்வானைஅம்பாளுக்கும் திருக்கல்யாண விழா நடக்கும். திருக்கல்யாண திருவிழாவில் பக்தர்கள் மொய் எழுதுவது என்பது இன்றும் பழமைமாறாமல் நடந்து வருவது சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் சேதியாகும்.

ஆணவம் ஓடி விடும்
சூரசம்ஹார விழாவில் பங்கேற்று முருகனை வணங்கினால் நம்மை சுற்றியிருக்கும் ஆணவக்காரர்கள் இடம் தெரியாமல் போவார்கள், தொழில்விருத்தி ஏற்படும், வேண்டுவரம் கிட்டும் என்பது ஐதீகமாகும். பக்தி சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்வினை மட்டுமல்ல, ஆறுமுகப்பெருமானின் அருளை பெற்று நற்பேறு பெற்றிட நாமும் திருச்செந்தூருக்கு இந்தாண்டு பயணித்திடுவோம்.

நாளை சூரசம்ஹாரம்...
தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாள் கந்தசஷ்டி விரதம் துவங்கும். அதிலிருந்து 6வது நாள் சூரசம்ஹார பெருவிழா நடப்பது வழக்கமான ஒன்றாகும். இதன்படி இந்த ஆண்டு கடந்த 3ம் தேதி கந்தசஷ்டி விரதம் துவங்கியது. இதனைத் தொடர்ந்து வரும் 8ம் தேதி சூரசம்ஹார பெருவிழா நடக்கிறது. திருவிழா நாட்களில் பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications