பெண்களின் பாதுகாப்பில் உ.பி அரசு ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது.. முதல்வர் யோகி ஆதித்யநாத் கறார்
லக்னோ: பெண்களின் பாதுகாப்பில் உ.பி அரசு ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்றும், பெண்களை துன்புறுத்துவோருக்கு மரணம் காத்திருக்கிறது எனவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பின்னால் பைக்கில் வேகமாக வந்த இளைஞர்கள் மூவர் மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்துள்ளனர். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்டவர்களை தேடி வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் நடத்தப்பட்ட எண்கவுண்ட்டரில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மொத்தமாக மூவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ரூ.343 கோடி மதிப்பில் 76 திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பெண்களின் பாதுகாப்பில் உ.பி அரசு ஒருபோதும் சமரசம் செய்துக்கொள்ளாது என்றும், பெண்களை துன்புறுத்துவோருக்கு மரணம் காத்திருக்கிறது எனவும் எச்சரித்துள்ளார். பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குற்றச்சாட்டை போக்கும் வகையில், மாநிலம் முழுவதும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார். இத்திட்டத்தின்படி 12 துறைகள் இந்த திட்டத்தை செயல்படுத்தும். தற்போது இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை 3 மாதங்களில் முடித்துவிட வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பான நகர திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும், இதில் முதல் கட்டத்தில் 17 மாநகராட்சிகளுடன் கௌதம் புத்த நகர், இரண்டாம் கட்டத்தில் 57 மாவட்ட தலைமையக நகராட்சிகள் மற்றும் மூன்றாம் கட்டத்தில் 143 நகராட்சிகள் அடங்கும். இந்த திட்டத்தின்படி போலீசின் ரோந்து பணிகள் அதிகரிக்கப்படும், அதேபோல நீதிமன்றங்கள், சிறைகள், மதுக்கடைகள், பெண்கள் கல்லூரிகள், பூங்காக்களில் சிசிடிவி கட்டாயம் பொருத்தப்படும். இந்த திட்டம் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டால் இந்தியாவில் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்கிற பெயரை உத்தரப் பிரதேசம் எடுக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications