ஊரு வெச்ச பேரு
ஒருவரிடம் கடன் வாங்கி இன்னொருவரிடம் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் ஏமாற்று சமுதாயத்தில் எங்க ஊரு பாஷாவும் ஒருவன்.
இந்த உலகத்தில் சோறு, தண்ணியை விட எது முக்கியம் ? என்று ஒன்றாம் வகுப்பில் வாத்தியார் காற்றைப் பற்றிக் கேட்டதற்கு அதை விட முக்கியம்காசு பணம் தான் என்று உடனடியாக பதில் சொன்னவன் தான் இந்த பாஷா.
பாஷாவின் தாயார் ஜூனைதா, " பாஷா பக்கத்து தெருவுல சல்மா லாத்தா காசு தர்ரேண்டாஹா. நான் வர்ரதுக்குள்ள போய் வாங்கிட்டு வந்து வச்சிடு..என்று சொல்லிவிட்டு துப்பட்டியை போட்டுக் கொண்டு கிளம்பி வெளியே போனார்.
அதற்கு பாஷா, " நான் போவலைம்மா.. வந்தவொடனே நீயே போயி வாங்கிட்டு வந்துடு என்றான். ஜூனைதா, "நான் வர்ரதுக்குலேட்டாயிடும்டா.. மைத்தாங்கொல்லை வரைக்கும் போறேன்.. சோறாக்கி கொடுக்க.. என்றார்.
பாஷா, "எவ்வளவு காசு கொடுப்பாஹ ? என்று கேட்டான்.
ஜூனைதா, "அதெல்லாம் நீ பிரிச்சு பாக்க வேணாம்.. தாள்ள மடிச்சு தான் கொடுப்பாஹ..நீ பாட்டுக்கு பிரிக்காம வாங்கிட்டு வந்து அலமாரிலவச்சுடு என்று கூறிவிட்டு வேகமாக நடந்து மறைந்து போனார்.
சல்மா லாத்தா வீட்டு வாசல் கதவு தட்டப்பட்டது. உள்ளிருந்து "யாரது? என்று குரல் கேட்டது.
"ஏன் நான் தான் பாஷா என்றான்.
"உள்ளே வாப்பா என்றார் சல்மா லாத்தா.
பாஷா உள்ளே நுழைந்தான். உள்ளே சல்மா லாத்தா கட்டிலில் உட்கார்ந்திருந்தார். மின்சார தடை ஏற்பட்டிருந்ததால் ஒரு பெண்மணி விசிறியை கைகளில்மாற்றி மாற்றி பிடித்து விசிறிக் கொண்டிருந்தாள்.
பாஷா உள்ளே நுழைந்ததும் அந்தப் பெண்மணியை ஓரக்கண்ணால் பார்த்து சிரித்து கண் சிமிட்டினான். அந்த வேலைக்கார பெண்ணுக்கு வெட்கம் வந்தது.ஆனால் பொய்யாக கோபம் இருப்பது போல், "சொல்லி கொடுக்கவா.. என்பது போல் கையை தூக்கி காட்டினாள்.
பாஷா அதை பொருட்படுத்தாதவன் போல், "இங்க தாங்க புள்ள.. நான் வீசுறேன்.. என்று விசிறியை வாங்கும் போது அந்த பெண்மணியின் விரல்களைபாரதிராஜா படத்தில் வருவது போல மெலிதாக வருடினான்.
அந்த பெண்ணுக்கு இன்னும் கொஞ்ச நேரம் அவனை கையை பிடிக்க சொல்ல வேண்டும் என்பது போல் இருந்தது.
சல்மா லாத்தா, "நீ ஒருத்தன் தாண்டா யாருன்னு கேட்டா பாஷான்னு பேர சொல்றவன்.. மத்தாளுவோ எல்லாம் ஏன்..நான் தான்..ஏன் நான்தாங்குறது.. அப்படிம்பாங்க என்றார்.
பாஷாவிற்கு பெருமை வந்தது. அந்தப் பெண்னைண பார்த்து அசிங்கமாக சிரித்தான். "ம்மா காசு வாங்கிட்டு வர சொல்லிச்சு.. என்றான்.
சல்மா லாத்தா, "ஏன் ம்மா வரலே.. எப்பவும் ம்மா தானே வருவாஹா..ஏம்பாஎன்றார்.
பாஷா, இல்ல..ம்மா தான் என்னய வாங்கிட்டு வர சொல்லிச்சு.. ம்மா வெளிய போயிருக்கு.. என்றான்.
சல்மா லாத்தா, "வெளியவா.. எங்க போயிருக்கு? என்றார்.
பாஷா, "ம்மா மைத்தாங்கொல்லைக்கு போயிருக்கு.. சாயங்காலம் தான் வரும்.. என்றான். சல்மா லாத்தா, என்னதுமைத்தாங்கொல்லைக்கா..(அடக்கஸ்தலம்)? என்று கேட்டு சிரித்து விட்டு, "அங்க போனா திரும்பி வரமுடியாதேப்பா..நீ என்ன சாயங்காலம் திரும்பிவந்துடுவாங்குறே..என்றார்.
பாஷா, "அப்ப ம்மாவயே வந்து சாயங்காலம் வாங்கிக்க சொல்றேன்.. என்று பாஷா சொன்னவுடன், " அட இரிப்பா செத்த.. என்று கூறி மல்லிகபொட்டிசு தாவணியின் ஓரத்தில் முடிந்து போட்டு வைத்திருந்த காசை எடுத்து பாஷாவின் கையில் கொடுத்து, "பத்தரம்.. ம்மா கையில தான் கொடுக்கணும்யார் கையிலயும் கொடுக்க கூடாது..தெரியுதா? என்றார்.
அந்த பணம் தான் பாஷா முதன் முதலில் களவாண்ட பணம். தனது தாயார் பிரிக்க கூடாது என்று சொல்லியிருந்தும் காசு மடித்து வைத்திருந்த தாளை பிரித்தான்.
மந்திர சக்தி படைத்த அந்த சில நூறு ரூபாய் நோட்டுகள் அவனை மயக்கியது. மதியிழக்க செய்தது.
ஜூனைதா திரும்பி வந்ததும், "பாஷா சல்மா லாத்தாட்ட காசு போய் கேக்க சொன்னேனே..போய் கேட்டியா? என்றார்.
திருட்டும் பொய்யும் இரட்டை சகோதரர்கள். பாஷா, "இல்லம்மா நான் போவல..நீயே போய் வாங்கிட்டு வந்திடு.. என்றான்.
"ஒரு வேலக்கு அசையாதே நீ.. புள்ளையா இது..? என்று திட்டிய ஜூனைதா, நேராக சல்மா லாத்தா வீட்டுக் கதவை தட்டினார்.
ஜவாஹிரா கதவை திறந்து விட்டு, "ம்மா..ஜூனைதா மாமி வந்திருக்காஹ என்றாள்.
சல்மா லாத்தா, "வாங்க புள்ள.. என்று வரவேற்றார் ஜூனைதாவை.
சல்மா லாத்தா, "ஜவாஹிரா..ஜூனைதா லாத்தாவுக்கு தேத்தண்ணி போட்டு எடுத்திட்டு வாம்மா.. என்றார்.
ஜூனைதா, "இருக்கட்டும்மா.. இப்பத்தான் குடுச்சுட்டு வந்தேன்.. என்றார்.
சல்மா லாத்தா, " ஏன் புள்ள..பாஷா காசு வாங்க வரும்போது நீ மைத்தாங்கொல்லைக்கு போயிருக்கிறதா சொன்னான்..சோறாக்கவா? என்றதும்,ஜூனைதா, " என்ன சொல்றீங்க லாத்தா..பாஷா வந்தானா ? என்றார்.
சல்மா லாத்தா," ஆமா.. புள்ள அவண்ட தான காச கொடுத்து வுட்டேன் என்றதும், ஜூனைதா, "இல்ல லாத்தா அவன் காசு வாங்கியிருந்தாத் தான்எங்கிட்ட சொல்லியிருப்பானே லாத்தா..என்றார் பதட்டமாக.
சல்மா லாத்தாவிற்கு கோபம், "என்ன புள்ள லாஹரி பண்றீங்களா? ( விளையாடறீங்களா?) அவன் வந்து சொல்லாம நீங்க மைத்தாங்கொல்லைக்குபோனது எனக்கு எப்படி தெரியும்..என்றார்.
பெரிய விசாரணைக் கமிஷனே நடந்தது. இந்த விசாரணையில் குறிப்பிடக்கூடிய அம்சம் அந்த வேலைக்கார பெண்ணான ஜவாஹிரா பொய் சாட்சி சொன்னதுதான்.
ஜவாஹிராவை சின்ன வயதில் வேலைக்கு சேர்த்ததிலிருந்து குரான் ஓதக் கற்றுக் கொடுத்து, தொழுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்து வளர்த்து நல்லதுகெட்டது என அனைத்தையுமே சல்மா லத்தா தான் கவனித்து வந்தார்.
பொய் சாட்சி சொன்னதற்கு பிறகு ஜவாஹிராவை வீட்டை விட்டு விரட்டி விட்டார். " இனிம என் கண்ணுலயே முழிக்க கூடாது. என் மய்யித்த கூட பாக்ககூடாது என்று.
ஆனால் அதற்காக கொஞ்சம் கூட கவலைப் படாதவளாக சல்மா லாத்தா வீட்டை விட்டு வெளியேறிய ஜவாஹிரா, பாஷா வீட்டிற்கு சென்றாள்பாஷாவின் மனைவியாக.
ஜவாஹிரா, சல்மா லாத்தா வீட்டில் இருந்த போது இவர் வீட்டிற்கு வரும் சில பணக்கார பெண்மணிகளுடன் பழக்கம் இருந்தது. அவர்களது வீட்டிற்குசென்று," நான் சின்ன வயசுலேந்து அங்க புள்ள மாதிரி வேல பாத்தேன்..என் மேல பழியப் போட்டு வெளிய அனுப்பிட்டாஹ..ஆனா நான் அஹல ம்மாவாதான் இன்னய வரைக்கும் நெனக்கிறேன்.. என்று பொய்யான வார்த்தைகளையும், உண்மையான விஷத்தையும் தெளித்து விட்டு வந்தாள்.
பாஷா ஊரிலுள்ள ஒரு ஏமாளி பெரியவரிடம், " எனக்கு லாட்டரி சீட்டுல லட்ச ரூபா விழுந்திருக்கு.. நாளைக்கு தான் பணம் எடுக்க முடியும்.. இப்ப எனக்குஉடனே பத்தாயிருவா தேவைப்படுது.. கொடுத்தீங்கன்னா நாளைக்கு பேங்குல எடுத்து தந்துடுவேன் என்று பழைய பேப்பரையும், பழைய லாட்டரியையும்காட்டி பத்தாயிரம் ரூபாய் பணம் வாங்கி விட்டான்.
அடுத்த நாள் அந்த ஏமாளிப் பெரியவர் திரும்ப கேட்டபோது," நான் எப்ப உங்கள்ட்ட வாங்குனேன்..வாங்கவே இல்லையே.. என்று அடித்துகூறிவிட்டான்.
இப்படியாக அவன் பணம் வாங்கி ஏமாற்றியது ஒன்று இரண்டு பேரை அல்ல. கிட்டத்தட்ட ஊரையே ஏமாற்றி இருந்தான். அவனது பேச்சைக்கேட்டீர்கள் என்றால் " இவனிடம் நாம கூட ஒரு முறை ஏமாறலாம் போலிருக்கிறது என்று தோன்றும்.
அவ்வளவு இனிமையாக பேசுவான். எந்த ஹல்வா கடையில் கற்றுக் கொண்டானோ அப்படிப் பேச என்று எனக்கு உள்பட யாருக்கும் தெரியவில்லை.
பணத்தை கொடுத்தவர்கள் திரும்ப காசு கேட்டு வரும்போது ஜவாஹிரா தான் பதில் கொடுப்பாள்.
" என்ன மஹரி (சூரியன் அஸ்தமித்த உடன்) நேரத்துல் வந்திருக்கீங்க..போய்ட்டு அப்பறமா காலைல வாங்க
காலையில், " இப்ப எஹ வீட்ல இல்ல..நாளைக்கு வாங்க இது போன்ற பதில்கள் தான் பெரும்பாலும் கிடைக்கும்.
கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டதை " தொந்தரவு தாங்க முடியல.. நீங்க எங்கேயாவது வெளியூர்ல போய் தங்கிடுங்க.. நான் நெலம சரியான வொடனேதகவல் சொல்றேன் அப்புறம் திரும்ப வாங்க என்ற ஜவாஹிராவின் அயோக்கியத்தனத்தின் பேரில் ஊரை விட்டே ஓடி தலைமறைவானான் பாஷா.
ஜவாஹிரா ஏமாற்றி சேர்த்து வைத்திருந்த பணத்தை எளியவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு வட்டிக்கு விட்டு சம்பாதித்தாள். காசு சேர்ந்தது.
செய்தித் தாள்களில் விளம்பரம் கொடுத்தாள் "திரும்பி வர வேண்டும் குடும்பம் ரொம்பவும் கஷ்டமாக உள்ளது என்று.
பாஷா ஒரு வாரத்தில், முன்பே பேசி வைத்திருந்த படி ஆளே அடையாளம் தெரியாமல் போய் தாடி வைத்து பஞ்சத்தில் அடிபட்டவன் போல் வந்து சேர்ந்தான்.
பாஷா குடியிருந்த முஹல்லா பள்ளிவாசலிற்கு தப்லீக் ஜமாத் வந்தது. தொழுகைக்கு அழைத்து வந்த முஹல்லா வாசிகளிடம் அவர்களுடன் வந்த ஒரு பையன்பாஷாவை காட்டி " இவர் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறார். பள்ளிக்கு ஒரு நாள் கூட வரமாட்டேங்குறாரு என்றான்.
தப்லீக் ஜமாத்துடன் வந்த ஒருவர் பாஷாவை நெருங்கி, அஸ்ஸலாமு அலைக்கும்.. என்றார்.
பாஷா, அலைக்கும் ஸலாம் என்றான்.
"தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு வருவீங்களா? என்றார்.
" வருவேனே என்றான்.
" எப்ப? என்றார்.
" பெருநாளைக்கி என்றான்.
"இங்க பாருங்க.. தொழுகை ரொம்ப முக்கியம்..நம்ம மெளத் எப்பன்னு நமக்கு தெரியுமா? என்றார்.
" அது எப்படிங்க தெரியும்.. அது தெரிஞ்சாத்தான் அவனவன் நான் தான் அல்லாண்ணுடுவானே என்றான்.
" அஸ்தக்பிருல்லாஹ்.. என்றார் தப்லீக்கின் அமீர். இருகரம் ஏந்தி அந்த இடத்திலேயே நின்று " யா அல்லாஹ் இவருக்கு ஹிதாயத் என்ற நேர் வழியைகாட்டு என்று உள்ளம் உருக உண்மையாகவே பிரார்த்தித்தார்.
பாஷா, ஜவாஹிரா தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. தமீம் என்று பெயரிட்டார்கள். தமீமை மதரஸாவிற்கு ஓத அனுப்பினார்கள். அங்கே ஹிதயதுல்லாஹ்என்ற இமாமிடம் குரான், ஹதீஸ், சூபியாக்கள் (ஞானிகள்) வரலாறு என்று அனைத்து பாடங்களையும் கற்று வந்தான்.
வீட்டின் வாசற்படியில் ஒரு வங்கியின் பற்று வரவு கைச்சாத்தையும், வேறு சில காகிதத்தையும் கையில் வைத்து உட்கார்ந்திருந்த தமீமை பார்த்து பாஷாஇப்படிக் கேட்டார், " டேய்.. கைல என்னா பேங்க் பாஸ் புக்கா? ஏதிது? யார்ட? என்று
தமீம், " இது பக்கத்து தெருல துபாய் காரஹ வீட்ல இருக்காஹல்ல ஹபீப் முகமது நானா அஹல்ட..எய்த்த வீட்டுக்கு போயிருக்காஹ என்னய செத்த வச்சுக்கசொன்னாஹ.. என்றான்.
பாஷா ஒன்றும் பதில் பேசாமல் உள்ளே சென்றான். சாப்பாடு எடுத்து வர சொன்னான். ஜவாஹிரா இடியாப்பம் எடுத்து வந்து வைத்தாள்.பாஷா சாப்பிடஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த தமீமிடம் ஜவாஹிரா, "தமீம்.. அந்த ஹபீப் ஒண்ட்ட பேசிக்கிட்டு இருந்தாரே..என்ன சொன்னாரு?என்றாள்.
தமீம், இல்லம்மா பேங்க் பாஸ் புக்க கொடுத்து வச்சுக்கு சொன்னாரு..எய்த்த வூட்டுக்கு ஜாமான் கொடுக்க வந்தாரு என்றான்.
ஜவாஹிரா, " பேங்க் பாஸ் புக்கா? வாயை பிளந்து " அதுல எவ்வளவு காசு இருந்துச்சு? கேட்டே விட்டாள்.
தமீம், " நான் பிரிச்சு பார்க்கலேயம்மா.. என்றான்.
சாப்பிட்டுக் கொண்டே கவனித்துக் கொண்டிருந்த பாஷாவிற்கு பிறை ஏறியது.
ஜவாஹிரா பாஷாவிடம்," தண்ணி குடிங்க என்று கூறிவிட்டு தமீமிடம் ஏன் பிரிச்சு பார்த்தா என்ன? என்றாள்.
தமீம், " நான் ஏன் பாக்கணும்..அது என்ன என் காசா? என்று கேட்டான்.
தமீமின் இந்த இடி போன்ற வார்த்தைகளை கேட்டதும் பாஷாவிற்கு அதற்கு மேல் இடியாப்பம் சாப்பிட மனம் வரவில்லை. அது அவனது சாப்பாடாஅல்லது அடுத்தவரின் சாப்பாட்டை எடுத்து சாப்பிடுகிறோமா என்ற கவலை முதல் முறையாக வந்தது.
மய்யித் ஆகும் வரை பள்ளிவாசலுக்கு செல்லக்கூடாது என்று பிடிவாதமாக இருந்தவனை அவனது கால்கள் அந்த வெள்ளிக்கிழமையன்றுபள்ளிவாசலுக்கு இழுத்து சென்றது.
இமாம் கலீல் சாஹிப் தனது இஸ்லாமிய உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார்..
" பெருமானார் அவர்கள் அவர்களது தோழர்களுடன் இருக்கும் போது அந்த வழியாக ஒரு மய்யித் சென்றது. அப்போது அன்னாரது தோழர்கள் அந்தஇறந்த நபரை குறித்து நல்லவிதமாக எடுத்து சொல்கிறார்கள்.
உடனே பெருமானார் அவர்கள் "வஜபத் (கடமை) என்றார்கள். அதேபோல் இன்னொரு மய்யித் எடுத்து செல்லும்போது அவரை குறித்து அதிருப்தியுடன்,"இவர் சரியில்லை என்றார்கள். அதற்கும் பெருமானார் அவர்கள் வஜபத் என்றார்கள்.
அதாவது பெருமானார் அவர்களது வார்த்தையை சற்று சிந்தித்தோமானால் மக்கள் நம்மை பற்றி நாம் இறந்த பிறகு எப்படி பேச போகிறார்கள்என்பது மிகவும் முக்கியம். மரணம் நிச்சயம் ஒரு நாள் நம்மை சமீபிக்கும். அதன் பிறகு மக்கள் நம்மைப் பற்றி எப்படி அடையாளம் காட்டப்போகிறார்கள் என்பது ரொம்ப முக்கியம்.
இப்படியாக இமாம் அவர்கள் பேசிய பேச்சை கேட்ட பிறகு பாஷாவிற்கு ஒரு சிந்தனை பிறந்தது.. " நம்மை பற்றி நாம் இறந்த பிறகு மக்கள் எப்படிபேசுவார்கள் என்று..
மஜீத் தேநீர் கடையின் உள்ளே ஒரு மூலையில் நேற்று கேட்ட ஹதீஸ்களை பற்றிய யோசனையுடன் அமர்ந்திருந்தான் பாஷா.
அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் பட்டாளத்தில் ஒருவன், " அங்கே பார் ரோட்டில் யார் போறான்னு. அப்போது பாஷாவின் மகன் தமீம் சென்றுகொண்டிருந்தான்.
அதற்கு ஒருவன், "யாரது வட்டி பாஷா மகன் தானே என்றான்.
இதைக் கேட்ட பாஷாவிற்கு குற்ற எண்ணங்கள் ஆழ்கடலின் அலையை போல மனதில் திரண்டு வந்து அலைக்கழித்தது.
வீட்டிற்கு வந்தவனுக்கு வீட்டிலுள்ள எந்தப் பொருளை பார்த்தாலும் அதில் வேறு ஒருவரது பெயர் எழுதியிருப்பதை அவன் கண்களால் பார்த்தான். அன்றுமுதல் அவனால் ஒழுங்காக சாப்பிடமுடியவில்லை. தூங்கமுடியவில்லை.
கடைசியில் படுத்த படுக்கையாகி விட்டான். மரணம் சமீபித்து விட்டது என்பதை உணர்ந்த பாஷா தனது மகனை அழைத்தான். ஜவாஹிரா கட்டிலின்ஓரத்தில் நின்று அழுது கொண்டிருந்தாள்.
பாஷா தமீமிடம், " என் மெளத்துக்கு அப்புறம் கூட வட்டி பாஷா மவன்னு தான் உன்னய கூப்பிடுவாஹல்லோ. அதுக்கு காரணம் நான் தான்.. நான் செஞ்சபாவம் தான்.. என்று அழுதான்.
அப்போது ஜவாஹிரா, "எல்லாத்துக்கும் நானும் ஒரு காரணம் என்னய மன்னிச்சிடுங்க என்றாள்.
பாஷா, றாஜவாஹிராவிடம், எனக்காக ஒரு காரியம் செய்வியா? என்றான்.
"சல்மா லாத்தாவ நான் பாக்கணும்..கால்ல விழுந்து கதறணும் என்றான்.
சில நாட்கள் கழித்து..
சல்மா லத்தா வீட்டு கதவு தட்டப்பட்டது. உள்ளிருந்து யாரது? என்று குரல் கேட்டது.
" ஏன் நான் தான் பாஷா மவன் தமீம்.. என்றான். உள்ளே வாப்பா என்றார் வயதான சல்மா லாத்தா. " ஜவாஹிரா..தமீம்வந்திருக்கான்..அவனுக்கு சாப்பாடு எடுத்து வை என்றார் சல்மா லாத்தா.
பள்ளிவாசல்..
என்னிடம் ஒருவர், " வக்து வந்திடுச்சே..பாங்கு சொல்லுங்களேன்.. என்றார்.
நான், " இந்தா ஆலிம்ஷா வந்துட்டாரே.. என்றேன்.
ஆலிம்ஷா (அறிஞர்) என்ற தமீம் ஒலு (அங்க சுத்தி) செய்து முடித்து பாங்கு சொல்ல சென்று கொண்டிருந்தான்.
- அ. முஹம்மது இஸ்மாயில்([email protected])
இவரது முந்தைய படைப்புகள்:
1. தேவை இந்த மனங்கள்
2. தாயின் காலடியில்..
3. மணவாழ்வு
4. அழகு
5. காதல் அழிவதில்லை
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications