"மனிதர்களின் பேராசைகள் மீது இடி விழுந்தது... உயிர் வாழ்ந்தாலே போதும் என்ற நிலை" - தமிமுன் அன்சாரி
சென்னை: அதிகாரம், ஆணவம்,பதவி, பணம் , சொத்து இவற்றை எல்லாம் விட உயிர் வாழ்ந்தால் போதும் என்ற அச்சத்தை கொரோனா மனிதகுலத்துக்கு ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி.
மீண்டும் ஒரு நெருக்கடியை இந்த உலகம் சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்க்க வில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு அவர் அளித்த சிறப்புக் கட்டுரையில் இதைக் கூறியிருக்கிறார். அதன் விவரம் பின்வருமாறு;

மனிதகுலம்
சென்ற ஆண்டு ஜனவரியில் தொடங்கிய கொரணா தொற்றின் பேரலை, இவ்வாண்டு இரண்டாம் அலையாக வலுப்பெற்றிருப்பது கவலை அளிக்கிறது.
மூன்றாம் அலையும் வரும் எனக் கூறப்பட்டிருக்கும் நிலையில் , கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை என புதிய வைரஸ்கள் மனித குலத்தை தாக்குவது அதிர்ச்சியளிக்கிறது.
1919 ல் 'ஸ்பானிஷ் ஃப்ளு' என்ற தொற்று ஐரோப்பாவை உலுக்கியது. அது அடுத்த ஈராண்டுகள் நீடித்ததாக கூறப்படுகிறது.
தற்போது விஞ்ஞானம், அறிவியல், தொழில்நுட்பம் சிறந்து விளங்கும் நிகழ்காலத்தில் உலகமே கொரணாவை கண்டு நிலை குலைந்து போயிருப்பது காலத்தின் சவாலாகும்.

பேராசைகள்
மனிதர்களின் அளவுக்கு அதிகமான பேராசைகளின் மீது இடி விழுந்திருப்பதாக கருத வேண்டியுள்ளது.
அதிகாரம், ஆணவம்,பதவி, பணம் , சொத்து இவற்றை எல்லாம் விட உயிர் வாழ்ந்தால் போதும் என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டிருக்கிறது.
கல்வி,வணிகம், சுற்றுலா போன்ற முக்கிய துறைகள் தேங்கி, திணறி நிற்கின்றன.
இது இவ்வாண்டோடு முடிவு பெறுமா? அல்லது தொடருமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
இம்முறை நமது நாடு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
முறையான முன் திட்டமிடல்கள் செய்யப்படவில்லை என இந்திய நடுவண் அரசு மீது உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
நல்ல வேளையாக மத்திய அரசு இதை திசை திருப்ப கைத்தட்டுங்கள் ; விளக்கேற்றுங்கள் என மீண்டும் அவ்வாறு கூற வில்லை!
தமிழகம், கேரளா, ஒரிஸா மாநில அரசுகள் பிரச்சனையை மிக சிறப்பாக கையாள்கின்றன என்றும், மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் திருப்திகரமாக செயல்படுகின்றன என்றும், பிற மாநில அரசுகள் செய்வதறியாது திணறுவதாகவும் கூறப்படுகிறது.
முழு தேசமும் விழிப்புணர்வுடன் கைக்கோர்த்து நம்பிக்கையுடன் எழுந்து நிற்க வேண்டிய தருணம் இது.

ஆம்புலன்ஸ் ஓசைகள்
ரஷ்யாவின் ஸ்புட்னிக், அமெரிக்காவின் பைசர், இந்தியாவின் கோவிஷீல்ட், கோவெக்ஸின் என தடுப்பூசிகள் சந்தைக்கு வந்தாலும்; உருமாறும் வைரஸ்களால் நிலைமை விரைந்து கட்டுக்குள் வருமா? என்று தெரியவில்லை.
ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் கவலையாகவும், பீதியாகவும் இருப்பதாக பலரும் அங்கலாய்க் கின்றனர்.
ஆனால் அவற்றை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே யதார்த்தமாகும்.
எங்கும் ஆம்புலன்ஸ் ஒசைகள், மரண ஒலங்கள், உறவுகளின் கதறல்கள் என வாழ்வியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அன்பிற்குரியவர்கள்
அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் நிலைக்கு ஒவ்வொருவரும் ஆளாகியிருக்கிறோம்.
மருத்துவமனையில் கிசிச்சை பெறுபவர்கள் நலம் பெற பிரர்த்திக்கிறோம்.
பக்கத்து வீட்டில் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா? என துடிக்கும் பரந்த எண்ணங்களும் உருவாகியிருக்கிறது.
இத்தருணத்தில் அரசின் வழிகாட்டல்களை நாம் பின்பற்றுவது அவசியத்திலும் அவசியமாகும்.
சிலர் முக கவசம் அணிவதை அலட்சியம் செய்வதோடு , அதை கேலி செய்வதும் தொடர்கிறது .
வீட்டில் போரடிக்கிறது எனக் கூறி வீதிகளில் கூடுவதை சிலர் நியாயப்படுத்துகிறார்கள்.

வழிபாட்டுத்தலங்கள்
வழிபாட்டுத்தலங்களுக்கு செல்வதை ஏன் தடுக்கிறார்கள்? என்று சிலர் கேட்கிறார்கள்.
அவர்கள் பெருமனதோடு, பக்குவத்தோடு சமகால வாழ்க்கை நெருக்கடியை உற்று நோக்க வேண்டும் என்பதே நமது பணிவான வேண்டுகோளாகும்.
உயிர் வாழும் போராட்டத்தில் மருத்துவமனைகள் நிறைந்து,புதிய நோயாளிகளுக்கு இடமில்லா சூழல் இருப்பதையும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆக்ஸிஜனுக்காக கதறி கண்ணீர் விடுபவர்களை பார்த்து இரக்கப்பட வேண்டும்!

புத்தக வாசிப்பு
இந்த நிலை அடுத்த ஒரிரு மாதங்கள் வரை நீடிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், முன் எச்சரிக்கையோடு பாதுகாப்பாக ஒவ்வொருவரும் தங்களை தற்காத்துக் கொள்வதே புத்திசாலித்தனமாகும்.
எனவே தவிர்க்க முடியாத சூழல் தவிர பிற நேரங்களில் வீடடங்கி இருப்பது காலத்தின் கட்டாயமாகும்.
புத்தக வாசிப்பு, டைரி எழுதுதல், சமையல் பணிகளில் பங்கேற்பது, பழங்கால விளையாட்டுகளில் குடும்பத்துடன் ஈடுபடுவது, புதிய தொழில்களை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவது என அன்றாட பொழுதுகளை பயன்படுத்தி திட்டமிட வேண்டும்.

கவலையளிக்கிறது
கொரோனா காரணமாக நாடு பல நெருக்கடிகளை சந்திக்கப் போகும் நிலையில்,
அதனால் ஏற்படப் போகும் வருவாய் இழப்பு காரணமாக இவ்வாண்டு நாடு முழுக்க நெருக்கடி ஏற்படும்.
நிதி நெருக்கடி ஏழை, நடுத்தர மக்களை பெருமளவு பாதிக்கப் போகிறது.
இன்று வளர்ச்சியில் ஆசியா கண்டத்திலேயே கடைசி இடத்தில் இந்தியா இருக்கிறது என்று வந்திருக்கும் செய்தி மேலும் கவலை தருகிறது.
அடுத்த ஒரு வருடத்தில் இவற்றையெல்லாம் எதிர்கொள்வது மிகப்பெரும் சவாலாக இருக்கும்.

காத்திருப்போம்
இப்படி மேலும் பல சவால்களை மனித குலம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே நம்பிக்கையுடன், எச்சரிக்கையுடன் நகர்வோம். நெருக்கடிகள் புதிய கதவுகளை திறக்கும் என நம்புவோம். அறிவியல் விஞ்ஞானம் புதிய தீர்வுகளை தரும் என காத்திருப்போம்.
கட்டுரையாளர் - தமிமுன் அன்சாரி, Ex Mla, பொதுச்செயலாளர், ம.ஜ.க.












Click it and Unblock the Notifications