• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைச் செம்புச் சடங்கும் மூதேவி வழிபாடும்

By Staff
|

கலாச்சார மாத இதழ் - பிப்ரவரி 2005

அன்று காலை எல்லோருக்கும் போலவே வெண்புருஷம் குப்ப மீனவர்களுக்கும் விடிந்தது, அவர்கள் இறால் மீன்களுக்காக கடலுக்குள் இறங்கிய போது-

மாமல்லபுரம் ஐந்து ரதங்கள் தாண்டியபின் கல்பாக்கத்துக்கும் மாமல்லபுரத்துக்கும் இடைப்பட்ட கடற்கரையோரம் வெண்புருஷம் மீனவ குப்பம். இப்பகுதிஇறால் மீன் வயலாக இருக்கிறது. வெண்புருஷம், கோளமேடு கடலோரக் கிராமங்களுக்கு இடது பக்கமும் பாறை, வலது பக்கமும் பாறை, நடுவில்சேறு. பாறைகளற்ற இக்கடல் பரப்பு இறால் மீன் முட்டை வைக்க, குஞ்சு பொரிக்க, பல்கிப் பெருக தோதான கடல். ஏற்றுமதி இறால் வகை.எங்கெங்கோ இருக்கிற மீனவத் தமிழர்கள் போட்டி, பொச்செரிப்புகளுக்கு நடுவே இந்தப் பகுதியில் வலை போடுவதுண்டு.

காலையில் கடலுக்குப் போன எங்களுக்கு எறால் கிடைக்கலை. நீரோட்டம் மாறி விட்டா எறா சிக்காது. நீரோட்டம் மாறிருச்சி என்றுபடகோடு, வலையோடு, திரும்பி விட்டார்கள்.

வெண்புருஷம், கோளமேடு மீனவர்கள் பிப்ரவரி மாதம் வரை வெறுங்கையோடு திரும்பிய சரித்திரம் இதற்கு முன் இல்லை. பிப்ரவரி வரை நீரோட்டம் திசைமாறுவதற்கான வாய்ப்பேதும் இதுவரை வந்ததில்லை.

நீரோட்டம் மாறியிருந்தது. கடல் நிறமும் மாறியிருந்தது. வழக்கமான நீல உடையை உதறி விட்டிருந்தது கடல். அலைகளின் முகத்தோற்றத்தில்மாற்றம், கடலின் அடிநெஞ்சில் எழுந்த சினமே என்பதை வெண்புருஷம், கோளமேடு மீனவச் சகோதரர்கள் முன்னுணரவில்லை.

கடலோரத்தில் மேட்டுப் பகுதியில் இருந்தது வெண்புருஷம். வெண்புருஷம் குப்பத்தில் சுமார் 100 குடும்பங்கள். விதவைகள் ஆறு பேர். மொத்தம் 106குடும்பங்கள்.

காலை 8.40 மணிக்கு முதல் அலை எழுந்து வந்தது. மீனவர்கள் புயலைக் கண்டிருக்கிறார்கள். பனைமர உயர சுனாமியைக் கண்டதில்லை. இதுவரை எந்தஅலையும் மேட்டிலிருந்து குப்பத்தின் பின்புறத்தைக்கூட தொட்டதில்லை. வீடுகளின் பின்புறங்களைத் தகர்த்து எறிந்து அதற்கு முந்தி இருந்த குடிசைகளை தூக்கி வீசியது.

மேட்டில் நின்ற மக்கள் அதிர்ச்சியில் உறைந்து பார்த்தார்கள். கறுப்பு, பச்சை, நீலம் என்று எத்தனை நிறங்களுண்டோ, அத்தனை நிறங்களுமாய் தண்ணீர்மாறியிருந்தது. பார்க்கையிலேயே கடல் பின்வாங்கிப் போய்க் கொண்டிருந்தது. அரை கிலோ மீட்டர் தூரம் வரை பதுங்குகிற கடல் பாயும் என்று அவர்கள்அறிவார்கள். நடுக்கத்துடன் மூட்டை முடிச்சுகளைக் கட்ட ஆரம்பித்தார்கள்.

கல்தூண்கள் மேல் ஒத்தைப் படை செங்கல் வைத்து மேலே ஓலை வேயப்பட்ட குடிசைகள் தூக்கிகெடாசப்பட்டன. கரையில் நிறுத்தியிருந்த பைபர் படகுகள்,அல்லசா மரப்பலகைப் படகுகள், கட்டுமரங்கள் தூக்கியடிக்கப்பட்டு வீடுகளில் மோதி உடைந்தன. மேட்டிலிருந்த ஊரை நேரடியாக அசைக்க முடியாதஅலைகள் குப்பத்தின் இடது, வலது விலாப்பக்கமாய் சுற்றி வளைத்தன. மேட்டைத் தாண்டி வரமுடியாத சுனாமி சவுக்குத் தோப்பை சுற்றி வளைக்க ஊர்தீவாகி விட்டது. கழுத்தளவு தண்ணீரில் குழந்தைகள், வயதானவர்களை தோளில் சுமந்து அரை கிலோமீட்டர் தூரமிருந்த கல்பாக்கம் சாலைக்கு கொண்டுவந்து சேர்ந்து விட்டனர். அதிர்ச்சியில் கை, கால் செயலிழந்த பெரியவர் ஒருவர் இரு நாட்களுக்குப் பின் உயிர் நீத்தார்.

கால்மணி நேரம் தாமதிச்சிருந்தா, இப்ப நாங்க ஒங்க முன்னால பேசிக்கிட்டிருக்க மாட்டோம். உயிரோடு இருந்தாத்தானே பேச எங்கள் முன் நின்றபெண்கள் கூட்டத்திலிருந்து நடுத்தர வயதுப் பெண் நாயகம் சொன்னாள். இரண்டாவது அலை ஒன்பதே கால் மணிக்கு தாக்கியது. அப்போது அதன் பசிக்குகுப்பத்தின் காலியான வீடுகளே கிடைத்தன. சாலையிலிருந்து அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறபோது மூன்றாவது அலை கால் மணி கழித்து வந்து சூழ்ந்தது.

இப்போது சாலையிலிருந்து பார்க்கிறவர்களுக்கு முன்னால் அவர்கள் பிறந்து, தாய் முலை அருந்தி, விரல்சப்பி, வளர்ந்து வாழ்ந்த வெண்புருஷம் இல்லை. அதுஒன்றிரண்டு வீட்டு உச்சி மட்டுமே தெரியும் தனித் தீவு.

மழைத் தண்ணீர் ஊரைச் சுற்றித் தேங்கியதுண்டு. கடல் தண்ணீர் ஊரைச் சூழ்ந்ததாக எங்களுக்கு நினைவு தெரிந்து இல்லை. என்றார் ராஜீ. அவருக்கு நாற்பதுவயதாகிறது. மேட்டுப் பூமியைத் தாண்டி கடல் நீர் வர முடியாது. மேட்டு ஊர் கடல் அலைக்கு ஒரு அணையாக நின்று தடுத்தது. நாங்கள் கடலைப் பார்த்துபயந்தது இல்லை. இப்போது கடலைப் பார்த்தாலே எங்களுக்குப் பயமாக இருக்கிறது என்றார் அவர் தொடர்ந்து.

தரைக்குப் பதில் தண்ணீரில் இருப்பு என்றிருந்த மீனவர்களுக்கு தண்ணீரைப்பார்த்து முதன் முதலாக நடுக்கம் கொள்ளத் தொடங்கி விட்டது. தண்ணீருக்குள்போகிறவன் கரையேறுகிறவரை க<�ண்டம்தான். இப்போ கரையிலிருக்கிறபோதே மொத்தமாய் கண்டம் சம்பவித்தது கண்டு அவர்களிடம் எழுகிறஅச்சத்தில் வாழ்வின் முழு நியாயமும் செறிந்து கிடந்தது.

நீங்க நிக்கிற இந்த இடத்தில்தான் இந்த வீடு இருந்திச்சி. இந்த வீட்டை சுருட்டி அரை கி.மீ.தள்ளி எறிஞ்சது சுனாமி அலை. கடலோரம் போட்டிருந்த இந்தபைபர் படகு இழுத்துக் கொண்டு வந்து இந்த வீட்டு மேல் போட்டாச்சி. நீங்க நிக்கிறது இப்ப பொட்டல்தான். ஒங்க காலடிக்கு கீழே 15 வீடுகஇருந்ததுன்னா நம்புவீங்களா? எரால் வலை, மீன் வலை (இரண்டுக்கும் தனி வலை) கூட்டு வலை (கூட்டாக சேர்ந்து பிடிப்பது) மணி, கயிறுகளோடு கடலுக்குள்போய்விட்டது. என்றார் ரவி. அவருக்கு பைபர் படகு இருந்தது. கொஞ்சம் கூடுதல் வளர்த்தியோடு இருந்தது அவருடைய வீடு. தெளிவாக குளறுபடிஇல்லாமல் விளக்கினார். மீண்டும் வாழ வேண்டும் என்ற கனவுக்குள்ளிருந்து புறப்பட்ட பேச்சு தெளிவுபட வந்தது.

நாங்கள் நிற்கும் இடத்திலிருந்து 50 மீ. தூரத்தில் மீன் உலர வைக்கும் சிமிண்ட் பூசிய தொட்டி அப்படியே தூக்கியெறியப்பட்டு அரை கி. மீ தள்ளிபோடப்பட்டிருந்தது.

நுழைவாயிலில் குப்பத்தைப் பார்த்தபடி நின்றது கோயில். கோயில் முன்னால் கான்கிரிட் போட்டு எழுப்பிய ஸ்தூபி பெயர்த்து வீசப்பட்டிருந்தது. சமதளத்தில்அமைந்திருந்தால் வெண்புருஷத்தின் கதி என்னவாகியிருக்கும்? பக்கத்திலுள்ள கோளமேடு கிராமம் போல் காணாமல் போயிருக்கும். கடல் தின்று துப்பிப்போட்ட கோளமேடு என்ற எலும்புக் கூடு, வெண்புருஷம் என்ற கண்ணாடி வழியாகப் பார்க்கையில் தெரிந்தது.

வல்லமை, அது மனித வல்லமையோ இயற்கை வல்லமையோ மானுடம் பயனுற வாழ்வதற்காக பிரயோகிக்கப்பட வேண்டியது. சுயநலனை,அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இன்றைய காலத்தின் வல்லமை, வல்லாண்மையாக மாறிவிட்டது. இயற்கை நடத்திய சுனாமிவெறியாட்டத்துக்குள் மனித வல்லாண்மையும் அடங்கி இருக்கிறது. வல்லமை தாராயோ பராசக்தி இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே பாரதிவிரும்பியது, கேட்டது, வேண்டியது பொய்யாகி நின்றது அந்தக் கடற்கரையில்.

கோளமேடு பக்கத்தில்தான் கல்பாக்கம் குடியிருப்புக்கள். பெரிய சுற்றுச்சுவர் கல்பாக்கம் வளாகத்தையும் கோளமேட்டையும் பிரித்தது. பாபு என்றவிஞ்ஞானியை சுனாமி தனக்குள் சுருட்டிக் கொண்ட இடம், கல்பாக்க வளாகம். பிறகுதான் அபாய விளக்கு போடப்படுகிறது. கிளம்பு, கிளம்பு என்றுஎல்லோரையும் கிளப்புகிறார்கள். குழந்தைகளுடன் வயசாளிகளுடன் எல்லோரையும் நடத்தியே 15 கி.மீ தூரத்திலிருக்கும் திருக்கழுக்குன்றம்சேருகிறார்கள். ஒரு பேருந்து கூட நிற்கவில்லை. கையில் காசுமில்லை. காசோ ரூபாய்த் தாளோ கட்டிய துணிக்கு மேலிருந்த உடைகளோ எல்லாமும் வீட்டில்தண்ணீரில் நனைந்து மிதந்து கொண்டிருந்தது.

திருக்கழுகுன்றத்தில் மூன்று நாட்கள் ஒரு சத்திரத்தில் தங்கல். சாப்பாடு, மாற்றுத் துணிமணியெல்லாம் சத்திரத்துக்காரரே தந்து உதவுகிறார். இந்தநாட்களில் குப்பத்துக்குள் திருடர்கள் புகுந்து எடுக்க முடிந்ததை எட்டிய அளவுக்கு எடுத்துப் போனார்கள். அவர்கள் மனிதர்கள். அவர்களுக்குள்ளிருக்கும்மனித மனம் கோணலாகிப் போகிறபோது திருடர்களாகி விடுகிறார்கள். ஆகவே ஒவ்வொரு நாளும் பத்துப் பேர் பிரதான சாலையிலிருந்து ஊரைப்பார்த்துக் கொண்டே காவலிருப்பார்கள்.

மூன்று நாள் அசலூர் வாசம் முடிந்து திரும்புகிறபோது அவர்களுக்கு ஊர் என்று ஏதும் இல்லை. மாமல்லபுரம் சாலையில் மேடான பகுதியில் தனியார் ஒருவர்அமைத்து தந்த கூடாரங்களில் வாசம். அந்த இடம் தனியாருக்குச் சொந்தம். இந்த தனியார் மேட்டில்தான் அரசாங்கத்திடம் பாதுகாப்பான வீடுகள் கட்டித்தர வேண்டும் என கேட்டிருக்கிறார்கள்.

சுனாமியைப் போல் கல்பாக்கம் அணுஉலை அவர்களை தினமும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. நேற்றைக்குக் கூட சைரன் அடிச்சு, எல்லோரும் 60, 70கி.மீ தள்ளிப் போயிடுங்க, காலி பண்ணிடுங்க என்று எச்சரிக்கை கொடுத்தாங்க (கல்பாக்கம் அணு மின் நிலையத்திலிருந்து) நாங்க மறுபடியும் குழந்தைகளையும்,பெரிசுகளையும் கூட்டி, அலைந்து எங்கேயோ அகதிகளாக வாழ வேண்டும். அதைவிட அலையாலையோ, அணுகுண்டுப் புகையினாலேயோ செத்தாலும் இங்கேயேசாகிறோம் என்று தனம், உமையார் பார்வதி, நாயகம் என்ற முதிய விதவைகள் சொன்னார்கள்.

ஒரு டிராவல்ஸ் டெம்போ வேனில் ஒரு மருத்துவரும் சில செவிலிகளும் இறங்கி மக்களை நோக்கிப் போனார்கள். அவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம்மருத்துவமனையிலிருந்து தொண்டுள்ளத்தோடு வந்தார்கள். அவர்கள் மக்களை சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் கோயில் முன்பாக குழந்தைகளும்,பெண்களுமான கூட்டம் முண்டியடித்தது. வயதானவர்கள் இன்னொரு வரிசையில். ஒரு சிறிய ஆப்பிளையும், பிஸ்கட் பாக்கெட்டையும் ஒரு பெண் எடுத்துக் கொடுக்கபசித்தீயைத் தணிக்க அவசர அவசரமாக குழந்தைகள் பிரித்துத் தின்றனர். மருத்துவ ஆலோசனைக்கு கூட்டி வைக்கப்பட்ட பெண்கள் அங்கிருந்து பிடுங்கிக்கொண்டு ஆப்பிள், பிஸ்கட் விநியோக வரிசைக்கு ஓடிவந்தனர்.

தங்கம் கூட வேண்டாம்யா, சாப்பாடு, திங்கற பண்டம் ஏதாவது கொண்டு வந்து தந்தால் போதும். அந்த படவேச்சியம்மன் ஒங்களுக்கு துணை இருப்பா ஒருமூதாட்டி பேசினாள்.

சாப்பிட லாயக்கில்லாத 62 கிலோ அரிசி. உடுத்த முடியாத ஒரு புடவை, பெட்சீட் ஆகியவைகளை ஒரு நாள் மட்டும் கொடுத்து தன் கடமையைமுடித்துக்கொண்டுவிட்டது அரசாங்கம். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கீழ்பாக்கம் மருத்துவமனையிலிருந்து என இரக்கமுள்ள மனிதர்கள் வந்துபோகிறார்கள். நாங்கள் போனபோது தனியார் நிறுவனம் கொண்டு வந்து கொடுத்த அரிசியை வாங்கிக் கொண்டு போனார்கள். குப்பத்துப் பெரியவர்கள்வெளியிலிருந்து வரும் உதவிப் பொருட்களை வாங்கி கோயிலில் அல்லது பொது இடத்தில் வைத்து பிறகு எல்லோரும் சமமாகப் பங்கிட்டுக்கொடுக்கிறார்கள்.

நீங்க என்ன கொண்டு வந்திருக்கீங்க?

ஸ்டவ். மண்ணெண்ணைய் ஸ்டவ்

எத்தனை

நூறு

பெறகு

பிளாஸ்டிக் குவளைகள் நூறு

எங்களுக்கு அவர்களிடம் சில கேள்விகள் இருந்தன.

பழைய துணி வாங்க மாட்டேன்னு சொல்வதாக செய்தி

இல்லேங்க. பழைய துணியானாலும் பரவாயில்லை. உடுத்திக்கிற மாதிரி இருந்தா போதும். எந்த உதவின்னாலும் எங்க கையில குடுத்துட்டுப் போயிருங்க.நிரவி நாங்க பிரிச்சிக் கொடுத்திறோம் என்று எங்களிடம் சொன்னார்கள். கிராமத் தலைவர் துரையின் முன்னிலையில் நாங்கள் கொண்டு போனதை சில பிளாஸ்டிக்வாளிகள், எவர்சில்வர் பாத்திரங்கள், துணி துவைக்கும் சோப், பிஸ்கெட் பொட்டலங்கள் ஆகியவைகளை இறக்கி வைத்துவிட்டு ஒப்புதல் வாங்கிக்கொண்டோம்.

அவர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் தனிநபர் போட்டுக் கொடுத்தது. ஆழ்துளைக் கிணறு போட்டு தண்ணீர் தொட்டி வைத்து, குழாய்கள் போட்டு வசதி செய்துகொடுத்தது வேறொருவர். முதல் மூன்று நாள் சாப்பாடு, தண்ணீர், மாற்றுத் துணியெல்லாம் திருக்கழுகுன்றத்தில் சத்திரத்தில் கிடைத்தது. குஜராத்திலிருந்துஅரிசியும், சோப், தீப்பெட்டியும் வந்தன.

ரவியும், ராஜூம் சுனாமி சீரழித்த படகுகளைக் காட்டுகிறார்கள். ஒரு கண்ணாடியிழைப் படகு மொத்து வாங்கி உடைந்து கிடக்கிறது. அதைச் சீர் செய்யஇருபதாயிரம் ஆகும். கடலுக்குள் போனாலும் உத்தரவாதம் கிடையாது. அல்லுசா மரப்படகு, 15 வருட உத்திரவாதமுடையது. இனி உபயோகப்படாது.வலைகள், மோட்டார், மணி, கயிறு எல்லாம் கடலில் மூழ்கி விட்டது. அவர்கள் தொழிலே கடலுக்குள் மூழ்கி விட்டது. இவை எல்லாம் அவர்கள்கடன்பட்டு சேகரித்தது. இதற்கான கடனையும் அவர்கள் அடைக்க வேண்டும். புதியதாக கடன் தர எவரும் முன்வரமாட்டார்கள். கூட்டுறவு சங்கம்அமைத்து, பதிவு செய்து, அரசுக்கு கடனுக்கு மனு செய்துவிட்டு காலம் காலமாய் காத்திருக்க வேண்டும். தனி நபருக்கு எந்த வங்கியும் கூட்டுறவுநிறுவனங்களும் கடன் அளிப்பதில்லை. கந்து வட்டி வலையில் விழுவது தவிர்க்க முடியாதது. நாங்க இழந்ததெல்லாம் புதிதாக கிடைத்தால்தான் கடலுக்குள்போக முடியும். இல்லேன்னா இங்கேயே கெடந்து சாகணும் அவர்களின் மொத்தக்குரலும் துயரத்தின் சுனாமியாக எழுந்து சூழ்ந்தது.

வெண்புருஷம் போகிறபோது மாமல்லபுரம் நுழைவிலும் நகரிலும் நாட்டிய விழா 2005 என்ற பதாகைகள் வரவேற்றன. ஒவ்வொரு ஆண்டும் செய்வதுபோல் சுற்றுலாப் பயணிகளைக் கவர பொங்கல் கொண்டாட்டத்தை நடத்த அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாடுகளை முடுக்கி விட்டிருந்தது. கடலின் தொப்புள்கொடியில் பிணைக்கப்பட்டு இன்னமும் அது அறுக்கப்படாமல் அதன் சுவாசத்திலேயே உயிர்வாழ்கிற மீனவ குப்பங்களுக்கு அருகிலேயே நாட்டிய விழா,சாயந்தர வேளையில் மீனவர்களின் சுமையை ஒரு துளி அளவாவது நெஞ்சில் சுமந்து நாங்கள் திரும்பிய போது, மாமல்லபுரம் கற்கோயிலிருந்து கிளம்பிய நாட்டியஒலி வெண்புருஷம் குப்பம் நோக்கி போய்க்கொண்டிருந்தது.

தரையில் கல் காலில் பட்டால் வலி உடனே தெரியும். கடலில் தண்ணீர் அடிக்கிற அடி, வலி உடனே தெரியாது. மூன்று நாள் கழித்துத்தான் உடம்பு தாங்கமுடியாத வலி எடுக்கும் வாழ்நாளெல்லாம் வலி தரும்படி அந்தத் தண்ணீர் அடித்த அடியை விட இப்போது நாட்டிய விழாவின் ஒலி பரவி வந்து கொண்டிருந்தது.அந்த ஒலி அலைகள், சுனாமி அலைகள் இல்லையென்று யார் சொல்ல முடியும்?

இனி நாம் செய்ய வேண்டியது

வெண்புருஷம் கிராமத்திற்குச் சென்ற குழுவில் இடம் பெற்றவர்களின் ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகள் வரிசையிடப்பட்டு இனிசெயற்படுகிறவர்களுக்காக முன்வைக்கப்படுகின்றன.

1. மீன் பிடித்தலும், மாமல்லபுரம் போன்ற அருகாமைப் பகுதிகளுக்குச் சென்று பெண்கள் மீன் விற்று வருதலுமே இவர்களின் வாழ்வாதாரம். 16 கண்ணாடிஇழைப் படகுகள் (பைபர்) 26 படகுகள், கட்டுமரங்கள், வலைகள் முழுவதுமாக சேதமடைந்து விட்டன.

2. ஒரு படகு ஏறத்தாழ 75,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை விலையுள்ளது. வலையின் விலை ரூ.15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை. இறால் வலை,மணிவலை, செவில் வலை என வெவ்வேறு வகை மீன்களுக்கு வேவ்வேறு வலைகளை உபயோகப்படுத்த வேண்டியிருப்பதால், ஒரு மீனவருக்கு குறைந்ததுமூன்று வலைகள் கைவசம் இருக்க வேண்டியது இன்றியமையாத தேவை. மீனவர்களுக்கு வலைகளும், படகுகளும், கட்டுமரங்களும் உடனடியாகத் தருவதேஅவர்களை இயற்கைச் சீற்றத்தின் வேதனையிலிருந்து மீட்டு வரும்.

3. 45 வீடுகள் முழுவதுமாய் அழிந்து விட்டன. 15 வீடுகள் இடிந்து போயுள்ளன. மாமல்லபுரம் சாலையோரத்தில் மேடான பகுதியில் தற்காலிகமாககூடாரங்களில் தங்கியுள்ளனர். அதே இடத்தைச் சொந்தமாக்கி, உறுதியான, பாதுகாப்பான வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும். கடலோரப் பகுதிகளில் மரவளர்ப்பு மிகவும் தேவை.

4. சடலங்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட குடும்பம் அல்லது உறவினருக்கு ரூ. ஒரு லட்சம் நிவாரணத்தொகைவழங்கப்பட்டுவிடுகிறது. ஆனால் காணாமல் போய்விட்டவர்களின் குடும்பங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. இதை அரசு உடனடியாகப் பரிசீலிக்கவேண்டும்.

5. மீனவச் சகோதரர்களுக்கு பிரத்யேக கடனுதவிகளோ, காப்பு நிதித் திட்டங்களோ கிடையாது. ஒரு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லாருமே மீனவர்கூட்டுறவுச் சங்கத்தின் வழியாக வந்தால் மட்டுமே படகுகள் காப்பீட்டு நிதி (இன்ஸ்சூரன்ஸ்) செய்யப்பட்டு காப்பு நிதிப் பயன்களைப் பெற முடியும். இந்நிலைமாற்றப்பட வேண்டும். தனித் தனிப் படகுகளும் காப்பு நிதித் திட்டத்திற்குள் வர அனுமதிப்பட வேண்டும்.

6. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை படகுகள் பழுது பார்க்கப்பட வேண்டும். ரூ. 20 ஆயிரம் வரை செலவாகும். விசைப் பொறி படகுக்கு மட்டுமே மீன்வளத்துறை ரூ.10 ஆயிரம் மானியம் தருகிறது. இது எல்லாப் படகுகளுக்குமாக தரப்பட வேண்டும்.

7. கழிப்பறை வசதிகள் இல்லை. குறிப்பாக பெண்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். புது வீடுகள் கழிப்பறை வசதியுடன் கட்டித் தரப்பட வேண்டும்.

8. 120 பெண்களுக்கு மேல் உள்ள இக்குப்பத்தில் மகளிர் சுய உதவிக்குழு ஒன்று இருந்தாலும் குறுகிய வரையறைகளுக்குட்பட்டதாகவே அதன்செயல்பாடுகள் உள்ளன. பெண்களுக்கு வருவாய் ஈட்டித் தருவதான சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடங்கவேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

9. வெண்புருஷம் குப்பத்து குடிநீர்தான் முன்பு மாமல்லபுரம் வரை உபயோகமானது இப்பொழுது அப்படியில்லை. சுனாமியின் வீச்சால் குடிநீரின் சுவை மாறிவிட்டது.அவர்களுக்குச் சொந்தமான நீரே இன்று அவர்களுக்கு இல்லை என்றாகி விட்ட சூழலில் சாலையை ஒட்டிய ஊருணியில் இருந்து நன்னீர் கிடைக்கிறது.மேல்நிலைத் தொட்டி, குழாய்கள் அமைத்து நிரந்தர குடிநீர்வசதி செய்து தர வேண்டும்.

10. சுனாமி மூழ்கடித்து விட்ட நிலப்பகுதிகளையோ, கிராமங்களையோ, சாகடிக்கப்பட்ட மக்களையோ எவரும் மீட்டுத் தர முடியாது. ஆனால் சுனாமியால்பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சல்களுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகி நிற்கும் மனிதர்களை மீட்டெடுக்க முடியும். அவர்களில் மீனவர்கள்மட்டுமல்லாது, மீன்பிடி தொழிலோடு சம்பந்தமுடைய பலவிளிம்பு நிலை உழைப்பாளிகள், அவர்கள் குடும்பங்கள் கூட இன்று நிராதரவாய் நிற்கின்றன.நிலைப்புத் தன்மை கூடியதும். தொலைநோக்குப் பார்வை கொண்டதுமான மறுவாழ்வுத் திட்டங்கள் மட்டுமே தங்கள் வாழ்வை புனர் நிர்மாணம் செய்யும் என்றுகடலோர மக்கள் நம்புகிறார்கள்.

11. கடலை நம்பி வாழ்வு என்பதால் மீனவர்கள் கடலைக் கண்டு அஞ்சுவதில்லை. இப்போது கடலைப் பார்க்கவே பயமாயிருக்கிறது என்கிறார்கள்.உயிர்ச் சேதமில்லாவிட்டாலும் 810 சடலங்கள் கரையொதுங்கியதைக் கண்டிருக்கிறார்கள். உடமைக்கும் வாழ்வுக்கும் உத்திரவாதம் செய்து தருதல்மட்டுமே உளவியல் உளைச்சல்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கிற முன்னிபந்தனையாக அமையும்.

- வசந்தன்&பா. செயப்பிரகாசம்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more