பாவண்ணனுக்கு வாழ்த்துக்கள்
கலாச்சார மாத இதழ் - பிப்ரவரி 2005
நவீன ஆங்கிலேய எழுத்தாளர். ஜீலியன் பார்ன்ஸீக்கு(1946) பல்வேறு முகங்கள். வரலாறு, யதார்த்தம், கலை விமரிசனம், விளையாட்டு,மொழிபெயர்ப்பு(பிரெஞ்சிலிருந்து) என குறிப்பிடத்தக்க வகையில் நிறையவே எழுதிவரும் பார்ன்ஸ் இருமுறை புக்கர் பரிசிற்காகபரிந்துரைக்கப்பட்டவர் (1984 - 1998) பல இலக்கிய விருதுகள் பெற்றிருக்கும் இவரது முக்கியமான நூல்கள்:Metroland, FlaubertsParrot, England England, Talking it over.
அல்ஃபோன்ஸ் தாவ்தே (1840 1897) என்ற புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எழுதிய (ஏறத்தாழ சுயசரிதை என்றே சொல்லக்கூடிய)In the land of pain என்ற நாவலை பார்ன்ஸ் மொழிபெயர்த்திருக்கிறார். ஸிஃபிலிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனின் உளவியல்ரீதியான சிக்கல்கள், அவனது தாங்க முடியாத வலி ஆகியவற்றை வெகு கூர்மையாக தனது மொழிபெயர்ப்பில் கொண்டு வந்திருப்பதற்காகதனது சொந்தப் படைப்புகளை விட கூடுதலாகவே பாராட்டு பெற்றிருக்கிறார்.தமிழில் இதுவரை வந்திராத ஓர் எழுத்தாளர் என்ற முறையில் அவரது சிறுகதை ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஜேன்எடியான் தெலாகூவின் விருந்து தினத்தில் அவரது மருமகள் மேம். அமேலி கீழ்கண்ட உணவுகளைத் தயாரிக்க உத்தரவிட்டிருந்தாள்.வேகவைத்த மாட்டிறைச்சி பூயன், கொந்திய முயல் கறி, புறா கேசரோல், காய்கறிகள், பாலாடைக்கட்டி, பழ ஜெல்லிகள், தனக்கு முன்னால்வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலிருந்து ஒரே ஒரு ஸ்பூன் பூயனை சபையொழுக்கத்திற்காக எடுத்து, தயக்கத்துடன் வாயருகே கொண்டுசென்று நயமாக ஊதினார். வாயில் வைக்காமல் மரியாதையுடன் அதனைக் கீழே வைத்தார்.
மாட்டிறைச்சி அவருக்கு பரிமாறப்பட்டபோது அந்த வேலையாளைப் பார்த்து தலையை அசைத்து மறுத்தார். ஒரே ஒரு பியர் பழத்தையும்,இருபது நிமிடங்களுக்கு முன்னதாக வெட்டியெடுக்கப்பட்டிருந்த மரப்பட்டையையும் மட்டும் தனித்தனித் தட்டுகளில் வைத்துவிட்டுச்செல்ல அனுமதித்தார். தெலாகூவின் மகன் சார்ல்ஸ், அவரது மருமகள், அவரது பேரன், அவரது மைத்துனன், மைத்துனனின் மனைவி, அந்தவட்டாரத்தின் மதகுரு, அண்டை வீட்டு விவசாயி, தெலாகூவின் பால்யகால நண்பர் ஆந்த்ரே லக்ராங்கே, யாரும் அவரைகவனிக்கவில்லை. தெலாகூ விருந்து மரியாதைக்காக அவர்களோடு அமர்ந்து கொண்டிருந்தார். மற்றவர்கள் தங்களது தட்டுகளிலிருந்தமாட்டிறைச்சியை காலி செய்து கொண்டிருந்த போது, அவர் கால்வாசி பியர் பழத்தை சாப்பிட்டு முடித்திருந்தார். அவர்கள் முயல்கறியைமுடித்தபோது, மற்றொரு கால்பாக பியரை சாப்பிட்டிருந்தார். இவ்வாறான வரிசையில் பாலாடைக்கட்டி வந்தபோது தனது பாக்கெட்கத்தியை எடுத்து அம்மரப்பட்டையை சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒவ்வொரு துண்டாக எடுத்து மெல்லத் தொடங்கினார். இறுதியாக,நன்றாக உறக்கம் வரவேண்டுமென்பதற்காக ஒரு கோப்பை பாலும்,. கொஞ்சம் கீரைக் குழம்பும், ஒரு ரென்னட் ஆப்பிளையும்எடுத்துக்கொண்டார். அவரது படுக்கயறை காற்றோட்டமானவொன்று. தலையணை குதிரை ரோமத்தால் நிரப்பப்பட்டிருந்தது. அவர்,கம்பளிப் போர்வை மார்பின்மீது ஒரேயடியாக கனக்காமலும், பாதங்களை முழுதாக மூடி கதகதப்பாக வைத்திருக்கும்படியும்அமைத்துக்கொண்டு திருப்தியுடன் உறங்கத்துவங்கும்முன் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் விருந்து என்ற பெயரில் பகட்டுத்தனமாகவும்,ஊதாரித்தனமாகவும் செய்திருந்த செலவினத்தின் அபத்தத்தை யோசித்துக் கொண்டிருந்தார். அவருக்கு இப்போது அறுபத்தியோரு வயதாகிறது. ஆரம்ப காலங்களில் அவர் ஒரு சூதாடியாகவும், பெருந்தீனிக்காரராகவும்இருந்திருக்கிறார். இந்த இரண்டு பழக்கங்களும் ஒன்றாகச் சேர்ந்து அவரது வீட்டில் அவ்வப்போது கடும் வறுமையைத் தந்திருக்கின்றன.எங்கெல்லாம் பகடை உருட்டப்படுகிறதோ, எங்கெல்லாம் சீட்டுக்கட்டுகள் கலைத்துப்போடப்படுகிறதோ, எங்கெல்லாம் பார்வையாளர்கள்கூச்சலிட பந்தய விலங்குகள் தலைதெறிக்க ஓட்டப்படுகின்றனவோ, அங்கெல்லாம் தெலாகூ காணப்பட்டார். சீட்டாட்டத்திலும்,சொக்கட்டான்களை வைத்து ஆடும் குருட்டாட்டத்திலும், பேக்காமன், டாமினோஸ், ரூலட், ரூழேன்வார் என்று சகலவித சூதாட்டங்களிலும்அவர் ஜெயித்த அளவிற்கு தோற்றுமிருக்கிறார். ஒரு நேரம் சிறுவர்களோடு பிட்ச் அண்டு டாஸ் ஆடிக்கொண்டிருப்பார், மறுமுறைகுதிரைப்பந்தயம், அப்புறம் சேவல் சண்டை, மேம். V யுடன் இரண்டு பாக்கெட் பேஷன்ஸ், அப்புறம் எதுவும் இல்லாவிட்டால் தனியாகஉட்கார்ந்து கொண்டு சாலிடேர் ஆடிக்கொண்டிருப்பார். அவரது பெருந்தீனித்தனம்தான், அவரது சூதாட்டப்பழக்கத்தை முடிவிற்கு கொண்டுவந்தது என்று சொல்லப்பட்டது. உண்மையில் இந்த இருபழக்கங்களும் ஒருசேர அவரிடம் முழுமையாக மிளிரமுடியாமல் போனதற்கு அவரது வசதிக்குறைவுதான் முக்கிய காரணம். இறுதியில் ஒருவாத்தின் காரணமாகவே இதில் ஒரு பழக்கத்தை அவர் கைவிட நேர்ந்தது. ரொம்ப அருமையாக வளர்த்து வரப்பட்ட வாத்து அது. தன்கையாலேயே உணவுப் பருக்கைகளை ஊட்டிவளர்த்த அந்த வாத்தை ஒரு சூதாட்டத்தில் இழக்க நேர்ந்தபோது அவர் மிகவும் இடிந்துபோனார். பழங்கதையில்இரண்டு வைக்கோற் போர்களுக்கிடையே எதைச் சாப்பிடுவதென்று முடிவெடுக்க முடியாமல்திணறிக்கொண்டிருந்த கழுதையைப் போலானார் அவர். அந்த முட்டாள் கழுதையைப் போல் பசியில் செத்துப்போகாமல் ஓர்உண்மையான சூதாடியைப்போல் ஒரு நாணயத்தை வைத்து முடிவெடுத்தார். பூவா தலையா போட்டு பார்த்ததில் ஒழிந்ததுதான் சூதாட்டப்பழக்கம். அதன்பிறது அவரது வயிறும், பணப்பையும் ஒருசேர வீங்கின, அவரது நரம்புகள் தளர்ந்தன. இத்தாலியர்கள் சொல்கிறமாதிரி ஒரு கார்டினல்அளவிற்கு உணவுண்ண ஆரம்பித்தார். கேப்பர் கீரையிலிருந்து உள்ளான் குருவி வரை மனிதன் உண்ணத்தக்க எல்லாசமாச்சாரங்களைப்பற்றியும் விரிவாக வகுப்பெடுப்பார். பிரான்ஸிற்கு வெங்காயப் பூண்டு எவ்வாறு சிலுவைப்போர் முடிந்து திரும்பும்குருசேடர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்று விவரிப்பார். ஒரு கவுதாரியை சமைத்து அவர்முன் வைத்தால், அதன் கால்களைப் பிய்த்துஒரு கடி கடித்துப் பார்த்தவுடனே அது தூங்கும்போது எந்தக் காலை ஊன்றித் தூங்கியது என்று சரியாக கணித்துச் சொல்லிவிடுவார்.பாட்டில்களிலும் அவருக்கு அதீத ஞானம் உண்டு. விருந்து முடிந்ததும் திராட்சைகள் டெஸர்ட்டாக வழங்கப்பட்டால் ஒதுக்கி விடுவார்.ஒயினை மாத்திரை ரூபத்தில் நான் சாப்பிடும் பழக்கமில்லைஎன்பார். தெலாகூவின் மனைவிக்கு அவர் இந்தப் பழக்கத்தைத் தேர்ந்தெடுத்தில் திருப்திதான். சூதாட்டப் பழக்கத்தைப் போலல்லாமல், தீனிப்பழக்கம்,மனிதரை வீட்டிலேயே வைத்திருக்கிறதே. வருடங்கள் கழிய அவளது வடிவமும் அவரைப்போலவே உப்பத்தொடங்கியது. அவர்கள்வயிறார உண்டுகொண்டு எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமலேதான் அந்த துரதிருஷ்டதினம் வரை வாழ்ந்து வந்தனர். அன்று மதியம்கணவர் வீட்டில் இல்லாத வேளையில் அவள் தன்னை செறிவூட்டிக்கொண்டிருந்தபோது ஒரு கோழி எலும்பு தொண்டையில்சிக்கிக்கொள்ள, மூச்சுத்திணறி இறந்து போனாள். ஜேன் எடியான் தன் மனைவியை கவனிக்காமல் போனதற்காக தன்னையேசபித்துக்கொண்டார். தனது பெருந்தீனிப் பழக்கத்தை சபித்தார். அவள் மரணத்திற்குக் காரணமான நமது நாட்களை நிர்வகிக்கும் விதியை,தலையெழுத்தை, அது அந்த எலும்பை ஒரு கொலைகாரக் கோணத்தில் தொண்டையில் சிக்க வைத்ததை சபித்தார். அவரது ஆரம்பசோகம் தணியத்துவங்கியதும் சார்ல்சுடனும், மேம். அமேலியுடனும் வசிப்பதற்குத் தன்னை சமாதானப்படுத்திக்கொண்டார். அதன்பின் அவருக்கு சட்ட விஷயங்களில் ஆர்வம் உண்டாக ஆரம்பித்தது. எப்போதும் ராஜ்ஜியத்தின் ஒன்பது விதிகள்புத்தகத்துடனேயே காணப்பட்டார். கிராமப்புற விதிகள் அவருக்கு எல்லா நுணுக்கங்களோடும் மனப்பாடமாக இருந்தது. தேனீக்கள்கூட்டமாக மேய்வது சம்மந்தமாகவும், உரம் தயாரிப்பது குறித்தும் சட்டவிதிகளை அவர் ஒப்பிப்பார். புயலடிக்கும் நேரத்தில் தேவாலயமணியை ஒலித்தால், செப்புக்கலத்தில் பட்டுவிட்ட பாலை விற்றால் என்ன அபராதம் என்று அவருக்குத் தெரியும். பாலூட்டும்செவிலித்தாய்களை நிர்வகிப்பது குறித்தும், காடுகளில் ஆடுகளை மேய்ப்பது குறித்தும், பொதுச்சாலைகளில் இறந்துகிடந்த விலங்குகளைபுதைப்பது குறித்தும் என்னென்ன ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன என்று வார்த்தைவாரியாக அவர் அறிவார். சிறிது காலத்திற்கு அவர் தனது பெருந்தீனிப் பழக்கத்தை தன் மனைவியின் நினைவிற்காகத் தொடர்ந்து நடத்திவந்தார். இதற்கு அவரதுவயிறு உடன்பாடாக இருந்தாலும் இதயம் அனுசரணையாக இல்லை. இத்தனைக்காலம் இருந்துவந்த அப்பழக்கத்தை அவர் விட்டதற்கு நகராட்சியின் ஒரு முடிவும் காரணமாக இருந்தது. 18ம் வருடத்தின்இலையுதிர் காலத்தில் நகராட்சி நிர்வாகம் நகரில் ஒரு பொதுக்குளியலறை வளாகம் ஒன்றை பொது சுகாதாரத்திற்காகவும், நகர மக்கள்செளகரியத்திற்காகவும் கட்டவேண்டுமென முடிவெடுத்தது. ஒரு வான சாஸ்திரன் புதிய நட்சத்திரம் ஒன்றை கண்டுபிடித்துவிட்டால் எந்தஅளவிற்கு குதூகலப்படுவானோ, அந்த அளவிற்கு எங்காவது ஒரு புதிய உணவுவகையை சந்தித்துவிட்டால் சந்தோஷப்படுகிற ஒரு மனிதர்,சோப்புக்கட்டி, தண்ணீர்குவளை பக்கம் வருவதாவது என்று பலருக்கும் அவநம்பிக்கை. ஆனால் தெலாகூ மற்றவர்கள் கருத்திற்காகஅலட்டிக் கொள்பவரல்ல. நகராட்சி, ஒரு இத்தாலிய முறைப்படி, புதுவிதமாக இந்தத் திட்டத்தை அமலாக்க முடிவெடுத்தது. பொதுமக்களிடம் இது குறித்து ஆர்வத்தைஉண்டுபண்ண, இத்திட்டத்திற்குத் தேவைப்படும் நிதி ஆதாரத்தை நாற்பது சமபங்குகளாகப் பிரித்து அவற்றை பொதுமக்களிடமிருந்தேதிரட்டுவதாக திட்டமிட்டது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களே சந்தாதாரராக இயலும். வருடத்திற்கு இரண்டரை சதவீத வட்டி தரப்படும்.சந்தாதாரர் ஒருவர் இறந்துபோனால் அவர் கணக்கில் சேரவேண்டிய வட்டித்தொகை மற்ற முப்பத்தொன்பது சந்தாதாரர்களுக்கும் சமமாகபிரித்து வழங்கப்படும். சுலபமான கணக்கு. சுலபமான கவர்ச்சி. அதுவும் முப்பத்தொன்பதாவது சந்தாதாரர் இறந்துபோனதும்மிச்சமிருப்பவருக்கு தன்னுடைய முதலுக்கு ஈடாக வட்டித்தொகையும் கிடைக்கும் என்பது கூடுதல் கவர்ச்சி. கடைசி சந்தாதாரர் இறந்ததும்மொத்த முதல்களும் அந்த நாற்பது சந்தாதாரர்களின் அறிவிக்கப்பட்ட வாரிசுகளுக்கு வழங்கப்படும். தெலாகூவின் மனைவி இறந்ததால் அவருக்கு ஒரு கணிசமான தொகை கிடைத்திருந்தது. மேம்.அமேலிக்குத்தான் அந்த யோசனை வந்தது.தெலாகூ இந்தத் தொகையை இத்திட்டத்தில் முதலீடு செய்தால் விவேகமாகவும் இருக்கும். நகரத்தின் சிறப்பானதொரு திட்டத்திற்கு உதவியமாதிரியும் இருக்குமென தனது கணவனிடம் அவர் குறிப்பிட்டபோது அவன் பயந்தான். உனக்கு யோசனையே இல்லை கண்ணே. இதுஅப்பாவுடைய பழைய பழக்கத்தை திரும்ப ஞாபகப்படுத்தி விடாதா? இதை எப்படி சூதாட்டம் என்று சொல்லமுடியும்? தோற்பதற்கு இதில் வாய்ப்பே இல்லையே! இப்படித்தான் எல்லா சூதாடிகளும் எப்போதும் கூறுகிறார்கள். ஆனால் தெலாகூ தனது மருமகளின் யோசனையை ஏற்றுக்கொண்டார். அவர் சந்தாதாரர்களின் முதலீட்டுக் கணக்கை உன்னிப்பாகமேற்பார்வையிட்டார். ஒவ்வொரு சந்தாதாரர் முன்வந்தபோதும், அவரது பிறந்த தேதி, உடற்தகுதி குறித்த பொதுவான குறிப்புகள்,தோற்றக்குறிப்பு போன்ற விபரங்களை தனது கையேட்டில் பதிவு செய்து கொள்வார். தன்னைவிட பதினைந்து வருடங்கள் மூத்தவரான ஒருநிலச்சுவாந்தார் பதிவு செய்துகொள்ள வந்தபோது அவர் அடைந்த சந்தோஷம், அவர் மனைவி இறந்தபிறகு எப்போதும் அனுபவித்திராதஒன்று. சில வாரங்களில் மொத்த அங்கத்தினர்களும் சேர்ந்த பின்பு, தெலாகூ மற்ற முப்பத்தொன்பது பேர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினார்.அவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், தங்களை தனித்துக் காட்டிக்கொள்ள தங்களது சட்டைகளில் ரிப்பன்அல்லது ஒரு பொதுவான அடையாளக்குறியை தைத்து வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஒரு யோசனையை முன் வைத்தார். ஒவ்வொருவருடக் கடைசியிலும் சந்தாதாரர்களுக்கு ஓர் இரவு விருந்து ஏற்பாடு செய்யும் யோசனை கூறினார். சந்தாதாரர்களுக்கு என்றுஎழுதுவதற்கு பதிலாக சாகாதவர்களுக்கு என்றே அனேகமாக எழுதிவிட்டார். இந்த இரு யோசனைகளையும் வெகுசிலரே அங்கீகரித்தனர். பலர் பதில்கூட எழுதவில்லை. ஆனாலும் தெலாகூ அவர்களைத் தனதுநெருங்கிய தோழர்களாகவே மதித்தார். தெருவில் அவர்களில் யாரையாவது சந்தித்தால், அன்புடன் வணக்கம் தெரிவிப்பார், அவர்களதுஆரோக்கியத்தைப் பற்றி விசாரிப்பார், பொதுவான விஷயங்களைப் பற்றி அனேகமாக காலராவைப் பற்றி பேசுவார். தனது நண்பர்லக்ராங்கேவுடன் அவரும் சந்தாவில் சேர்ந்திருந்தார். கஃபே ஆங்க்ளேவில் மணிக்கணக்காக அமர்ந்துகொண்டு இதர முப்பத்தியெட்டுஅங்கத்தினர்களின் ஆயுள் காப்பீட்டுக் கணிப்புகள் நடத்திக் கொண்டிருப்பார். முதல் அங்கத்தினர் இறந்தபோது நகராட்சி குளியலறைகள் கட்டி முடிக்கப்படவேயில்லை. ஜேன் எடியான் தனது குடும்பத்தினருடன் இரவுஉணவில் அமர்ந்தபோது அந்த அவசரக் குடுக்கையான எழுபது வயது சகாவிற்காக அஞ்சலி செய்துவிட்டு, தனது கையேட்டை எடுத்துதேதியுடன் குறிப்பு எழுதி அப்பெயரை கருப்பு மையால் அடிக்கோடிட்டார். மேம்.அமேலிக்கு தனது மாமனார் இவ்வளவு உற்சாகத்துடன் இதனைக் கொண்டாடுகிற மாதிரி நடந்து கொள்வது சகிக்காமல் கணவனிடம்முறையிட்டாள். பொதுவாகப் பார்க்கும்போது மரணம் என்பது என் தந்தைக்கு நண்பன்தான் என்று சார்ல்ஸ் பதிலளித்தான்.தன்னுடைய சொந்தமரணம்தான் அவருக்கு எதிரி. மேம்.அமேலி இது ஒரு தத்துவார்த்தமான உண்மையா அல்லது வெற்றுப் பேச்சா என வியந்தாள். அவள் மிகவும் அன்புமயமான பெண்.தனது கணவனின் கருத்துக்களைப் பற்றி அதிகம் கவலைப்பட்டவளில்லை. ஆனால் அவற்றை அவன் வெளிப்படுத்தும் விதத்தைப்பற்றித்தான் இப்போதெல்லாம் அவளுக்கு விசனமாக இருக்கிறது. அவன் பேசுகிறவிதம் அப்படியே அவன் அப்பாவைப் போல மாறிவருகிறது. பெரியதொரு சான்றிதழோடு முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுக்காலம் முழுமைக்கும் குளியலறையை உபயோகிக்கும் உரிமையும்வழங்கப்பட்டது. வெகு சிலர்மட்டுமே இந்தச் சலுகையை பயன்படுத்திக்கொள்வர் என்பது சீக்கிரமே புரிந்தது. இவ்வளவுபெரிய முதலீட்டுத்தொகையை செலுத்துபவர்கள் வீட்டில் குளியல் தொட்டி இருக்காதா என்ன? ஆனால் தெலாகூ தனக்கு வழங்கப்பட்ட உரிமையைமுழுமையாக பயன்படுத்திக்கொள்ளத் துவங்கினார். முதலில் வாரத்திற்கொரு முறை சென்றவர், பின்பு தினமும் செல்லத் தொடங்கினார்.நகராட்சியின் பெருந்தன்மையை தெலாகூ துஷ்பிரயோகம் செய்வதாக சிலர் கருதினர். தெலாகூ அசைந்து கொடுக்கவில்லை. அவரதுதினசரி அலுவல்கள் இப்போது தெளிவாக நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டன. காலையில் சீக்கிரமே எழுந்து, ஒரே ஒரு பழம் சாப்பிட்டுவிட்டு,இரண்டு குவளை நீர் அருந்திவிட்டு, மூன்று மணி நேரம் நடப்பார். பின்பு குளியலறை வளாகத்திற்கு வருவார். அங்கிருந்தபணியாட்களோடு அவருக்கு இதற்குள் நல்ல பழக்கம் ஏற்பட்டுவிட்டிருந்தது. முதலீட்டாளர் என்பதால் அவருக்கு தனியாக துடைத்துக்கொள்ள துவாலை ஒன்றும் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்பின் கஃபே ஆங்க்ளேவிற்கு வந்து, நண்பர் லக்ராங்கேவுடன் அன்றைய அலுவல்கள்குறித்து கலந்துரையாடுவார். அன்றைய அலுவல்கள் என்பது தெலாகூவைப் பொறுத்தவரை இரண்டே இரண்டு வகைப்படும்.முதலீட்டாளர்கள் எண்ணிக்கை குறைவதற்கு சமீபத்தில் ஏதாவது வாய்ப்பிருக்கிறதா என்பது ஒன்று. மற்றது நகராட்சியின் பல்வேறுசட்டவிதிகள் எவ்வாறு சரிவர அமல்படுத்தப்படாமல் இருக்கின்றன என்பது. அவரது அபிப்ராயத்தில் ஓநாய்களைக் கொன்றால்நகராட்சியில் தரப்படும் சன்மானம் குறித்து சரிவர விளம்பரப்படுத்தப்படவில்லை. குட்டியுடன் உள்ள பெண் ஓநாய்க்கு இருபத்தைந்துஃபிராங்குகள், மற்றதிற்கு பதினெட்டு ஃபிராங்குகள், ஆண் ஓநாய்க்கு பனிரெண்டு, குட்டிக்கு ஆறு என்று இத்தொகை, ஆதாரம்நிரூபிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும். லக்ராங்கே இவரது புகாரை தீவிரமாக பரிசீலித்துவிட்டு மெதுவாகச் சொன்னார். கடந்த பதினெட்டு மாதங்களாக ஒரேயொரு ஓநாய்கூடயார் கண்ணிலும் பட்டதாகத் தெரியவில்லை. இந்த ஒரு காரணத்திற்காகவேனும் அதன் எண்ணிக்கையை நாம் கணக்கிட வேண்டாமா? அதன்பிறகு தெலாகூ ஒயினில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாவென்று பரிசோதிப்பதில் உள்ள சுணக்கத்தைப் பற்றி கண்டனம் தெரிவித்தார்.இன்றுவரை நடைமுறையில் இருந்து வரும், ஜீலை19, 1791 ம் நாளிட்ட விதி, பிரிவு எண்38ன்படி, ஒயினில் காரீயம், மீன்எண்ணைய்,கம்பீச்சே மரக்கரைசல் அல்லது பிற நச்சுப் பொருட்களை கலப்படம் செய்து விற்பனை செய்தால் ஓராயிரம் ஃபிராங்வரை அபராதமும்,ஓராண்டுவரை சிறைத்தண்டனையும் வழங்கப்படும். நீ வெறும் தண்ணீர் மட்டும்தானே அருந்துகிறாய், என்ற லக்ராங்கே தன் கோப்பையை உயர்த்தி ஒயினை கூர்ந்து நோக்கியபடி, நமதுசகாக்களெல்லாம் இம்மாதிரியான கலப்பட சரக்கை எடுத்துக்கொண்டால் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை சந்தோஷப்படும் வகையில்குறைந்துவிடுமே, என்றார். நான் இந்த வகையில் வெற்றிபெற விரும்பமில்லை, தெலாகூ சட்டென்று பதிலளித்தார். தனது நண்பரின் குரலில் இருந்த அருவருப்பான தொனியால் லக்ராங்கே பாதிக்கப்பட்டார். வெற்றி, அவர் கசப்புடன் திருப்பிச் சொன்னார். நீ வெற்றி பெறலாம் இதை ஒரு வெற்றி என்று நினைப்பாயென்றால், நான் இறந்தபிற்பாடு. தெலாகூ இதற்கு மாற்று பதிலை கூற யத்தனித்து, இயலாமல், வருந்துகிறேன், என்றார். கஃபே ஆங்க்ளே சம்பவத்திற்குப் பிறகு, தெலாகூ வீட்டிற்குச் சென்றதும் உடற்கூறியல் மற்றும் உணவியல் புத்தகங்களைத் தீவிரமாக வாசிக்கஆரம்பித்தார். இரவு உணவிற்கு இருபது நிமிடங்கள் முன்னதாக புதிய மரப்பட்டை ஒன்றை அவரே வெட்டி எடுத்துக் கொள்வார்.மற்றவர்கள் ஆயுளைக் குறைக்கும் நச்சுபானங்களை அருந்திக் கொண்டிருக்கையில், அவர் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் உணவுப்பழக்கங்கள் பற்றியும், மனிதனின் சாகாவரத்திற்கு இடர்ப்பாடாக இருக்கும் பொதுவான அபாயங்கள் பற்றியும் விரிவாக பாடம் எடுப்பார். இத்தகைய இடர்ப்பாடுகள் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தன. ஒவ்வொரு மரணத்தினாலும் தெலாகூவின்உற்சாகம் கூடிக்கொண்டே வந்தது. அதைப்போலவே கூடிக்கொண்டு வந்தது அவரது கடுமையான நடைமுறைகளும், உடற்பயிற்சி, பத்தியஉணவு, உறக்கம், சீரான ஒழுங்குமுறைகள், புலனடக்கம், படிப்பு. உடற்கூறியல் குறித்து ஒருமுறை படித்துக்கொண்டிருந்தபோது, மூடு மந்திரசொற்றொடர்களோடும், வெள்ளமாக பிரவாகிக்கும் லத்தீன் வாக்கியங்களோடும், ஆண்களுக்கு கூடுதலான ஆரோக்கியமும், நீண்டஆயுளும் கிடைப்பதற்கான காரணம் விளக்கப்பட்டிருந்தது. உடலுறவு கொள்ளும் வழக்கத்தைப் பொறுத்து ஆயுள் நிர்ணயிக்கப்படுகிறதுஎன்று நிறுவும் விஞ்ஞானக் கோட்பாடு அது. முழுமையாக விலக்கப்படுவதும், அளவிற்கதிகமாக ஈடுபடுவதும் உடல் நலத்திற்குஅபாயகரமானவை. பூரணமாக விலகியிருக்கையில் மேற்கொள்கிற சில பழக்கங்கள் இதைவிட ஆபத்தானவை.அளவாக ஈடுபட்டால்உதாரணமாக வாரத்திற்கு ஒரு முறை மட்டும் தேக ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் பெரும்பயனை விளைவிக்கும். தெலாகூ இந்த நடைமுறை அவசியத்தை உணர்ந்தவராய், இறந்துபோன மனைவியிடம் போதுமான சமாதானங்களை அளித்துவிட்டு,குளியலறையில் பணிபுரியும் ஒரு பணிப்பெண்ணிடம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். வாரம் ஒரு முறை அவர் வருவார், தேவையற்றஅன்பையோ, காதலையோ அவரிடம் அவள் எதிர்பார்க்கக்கூடாது. முப்பத்தியொன்பதாவது சந்தாதாரர் இறந்ததும் அவரது ஆயுள்நீட்டிப்பு பணியை அவள் சிறப்பாக ஆற்றியமைக்கான பரிசாக நூறு ஃபிராங்கோ, அல்லது அதற்கு கொஞ்சம் குறைவாகவோ வழங்குவார்.இதுதான் ஒப்பந்தம். அவர் ஒவ்வொரு முறையும் அவளுக்கு டிப்ஸாக கொஞ்சம் பணம் தந்துவிட்டுச் செல்வார், அதற்காக அவள் மிகவும்நன்றிக்கடன் பட்டவளாய் இருந்தாள். மேலும் பல முதலீட்டாளர்கள் இறந்தனர். தெலாகூ தனது கையேட்டில் அவர்களது இறுதி நாட்களை பதிவு செய்துகொண்டு புன்னகையோடுஅஞ்சலி செலுத்திக் கொண்டார். அதைப் போன்றதொரு இரவில் மேம்.அமேலி படுக்கப்போகுமுன் தன் கணவனிடம் கேட்டாள்:மற்றவர்களைவிட தான் மட்டும் எஞ்சி வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஒவ்வொருவரும் தனக்கான காரணத்தை தானே கண்டறிந்து கொள்ள வேண்டும். என்றான் சார்ல்ஸ். இது அவருக்கானது. சரி, இப்போதெல்லாம் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும் விஷயமே அவரது சகாக்களின் மரணம்தான், தெரியுமா? இது உங்களுக்குஅதிர்ச்சியாகவோ, வினோதமாகவோ படவில்லையா? சாதாரணமான செளகரியங்களைக்கூட அவர் அனுபவிப்பதில்லை. கடுமையானவிரதத்திற்கு கட்டுப்பட்டவர் மாதிரி தனது வழக்கங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார். எதற்காக, யாருக்காக இந்த விரதம்? இந்த சந்தாத் திட்டத்தை அவரிடம் முன்வைத்ததே நீதானே அன்பே? இந்தத் திட்டம் அவரது குணத்தை இப்படி மாற்றிவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் அப்பாவின் குணம் மாறவேயில்லை, என்றான் சார்ல்ஸ். அவருக்கு ஆர்வமான விஷயங்களில் அதே பழைய வேகத்தோடும்,முனைப்போடும் ஈடுபடுகிறார். அவரது குணம் மாறவேயில்லை. சார்ல்ஸ் திரும்பவும் அழுத்திக் கூறினான். தன் அப்பா முதுமைப்பிறழ்வில் தளர்ந்துவிட்டதாக குற்றம் சாட்டப்படுவதாக அவனுக்குத் தோன்றியது. ஆந்த்ரே லக்ராங்கேவைக் கேட்டிருந்தால் மேம். அமேலி சொன்னதை ஒப்புக்கொண்டிருப்பார். ஒரு காலத்தில் ஷோக்குப் பேர்வழியாக இருந்த தெலாகூ இப்போது கடும் நோன்பில் இருக்கும் துறவியைப்போல மாறிவிட்டிருக்கிறார்.மிகவும் சகிப்புத் தன்மை கொண்டவராக இருந்தவர் எல்லோரிடமும் கடுகடுப்பாக மாறிவிட்டிருக்கிறார். கஃபே ஆங்களேவில் அமர்ந்து, புகையிலை பயிர் வைப்பது குறித்த பதினெட்டாவது சட்டப்பிரிவு போதுமான அளவுஅமல்படுத்தப்படாமை பற்றிய தெலாகூவின் பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார் லக்ராங்கே. அவர் முடித்ததும் அமைதி கவிழ்ந்தது.தண்ணீர் அருந்தப்பட்டது. தெலாகூ தொடர்ந்தார். எல்லா மனிதனுக்கும் மூன்று வாழ்க்கைகள் இருக்கவேண்டும். இது என்னுடையமூன்றாவது. திருமணத்திற்கு முந்தைய பருவம், குடும்ப வாழ்க்கை, மனைவியை இழந்த விதுரநிலை ஆகிய மூன்றை அவர் குறிப்பிடுவதாக லக்ராங்கேகருதினார். அல்லது சூதாட்டம், பெருந்தீனிப்பழக்கம், தற்போதைய டான் டீன் (குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும், சந்தாதாரர்கள்இறந்துவிட்டால் அதற்கேற்ப கூட்டித்தரப்படும் ஆண்டுத்தொகை). ஆனால் வெகுநேர தீவிர சிந்தனைக்குப்பிறகு லக்ராங்கே மனிதர்கள்அடிக்கடி சில தினசரி நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தி உலகளாவிய பிரகடனங்களுக்கு தூண்டப்படுகிறார்கள் என்று அறிந்துகொண்டார். சரி, அவளது பெயர்? அவர் கேட்டார். விசித்திரந்தான் இது, என்றார் தெலாகூ. வாழ்க்கை நகர, நகர நமது பிரதானமான ஆசாபாசங்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன.நான் இளைஞனாக இருந்தபோது பாதிரியாரை மிகவும் மதித்தேன். குடும்பத்தின் மீது மரியாதை, நிறைய குறிக்கோள்கள் எல்லாம்இருந்தன. அந்தப் பிராயத்தில்தான் மனதில் காதல் நுழைந்தது. பின்னாளில் எனக்கு மனைவியாகப்போகிற அவள் மீது எனக்கேற்பட்டகாதலுக்கு சமூகம் ஒப்புதலையும் தந்து எங்களை அங்கீகரித்து தாம்பத்தியத்திற்கு அறிமுகப்படுத்தியது. இப்போது வயதாகிவிட்டது.கடவுளை அடைவதற்கு பாதிரியார்தான் சிறந்த வழிகாட்டி என்றெல்லாம் எனக்கு இப்போது சொல்லப்படுவதில்லை. என் குடும்பத்திலும்அவ்வப்போது என்னை கடுப்பேற்றுகிறார்கள். எந்த குறிக்கோளும் மிச்சமிருப்பதாகத் தோன்றவில்லை. இது ஏனென்றால் இப்போது கொஞ்சம் செல்வத்தையும், ஏதோவொரு தத்துவத்தையும் நீ வரித்துக் கொண்டிருப்பதால். இல்லை, மனிதர்களை அவர்களது சமூக அந்தஸ்த்தை வைத்து நான் மதிப்பிடுவதில்லை. நமது மதகுரு இருக்கிறாரே, அவர் ஓர் இனியநண்பர்தான், ஆனால் ஓர் இறையியல் மூடன். என் மகன் நேர்மையானவன், ஆனால் இம்சைபிடித்தவன். என் மனமாற்றத்தினால் எனக்குஏதோ உயர்நெறித் தகுதி வந்துவிட்டதாக சொல்லிக் கொள்ளவில்லை. என்க்குள் ஏதோ நடந்திருக்கிறது. அப்படியென்றால் உடலின்பம்? தெலாகூ பெருமூச்செறிந்துவிட்டு தலையை ஆட்டிக்கொண்டார். நான் இளைஞனாக இருந்தபோது, என் ராணுவ வருடங்களில், என்காலம் சென்ற மனைவியை சந்திப்பதற்கு முன்னால் எவ்வளவோ பெண்களிடம் சென்றிருக்கிறேன். அந்த நாட்களில் இத்தகைய உடலின்பஅனுபவமெல்லாம் காதல் உணர்வுகளுக்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை வந்ததே கிடையாது. நான் நினைத்தேன் இல்லை உறுதியாகநம்பினேன் அவை ஒன்றுக்கொன்று எதிரானவை என்று. சரி, அவளது பெயர்? தேனீக்கூட்டம் மேய்வது குறித்து சட்டம் தெளிவாக இருக்கிறது. என்றார் தெலாகூ. அந்தத் தேனீக்களின் உரிமையாளர் அவற்றைப்பின்தொடர்ந்து வந்து தனது உரிமையை நிரூபிக்கவேண்டும். இல்லாவிட்டால் அவை எந்த நிலத்தில் அமர்கின்றனவோ அந்நிலத்தின்உரிமையாளர் தேனீக்களின் மேல் சட்டபூர்வமான உரிமை பெற்றவராகிறார். அல்லது முயல்களின் விஷயத்தை எடுத்துக்கொள்ளலாம்.அதற்கு சொந்தமான பண்ணை ஒன்றிலிருந்து மற்றொரு பண்ணைக்கு ஒரு முயல் ஓடிவிட்டால் அதன் உரிமையாளர் அதன்மேல் ஏதாவதுஅடையாளத்தையோ, கற்றுக்கொடுத்த ஏதாவது வித்தை ஒன்றை காட்டவைத்தோ அதன் அடையாளத்தை நிரூபிக்க வேண்டும்.இல்லையென்றால் அது போய்ச்சேர்ந்த பண்ணைக்கே அது சொந்தமாகிவிடும். இதே முறைதான் புறாவிற்கும், வாத்திற்கும். பொதுவானஇடத்தில் கொல்லப்பட்டால் கொன்றவருக்கே அவை சொந்தமாகிவிடும். வேறு ஏதாவது புறா மாடத்திற்கு அவை பறந்து சென்று விட்டால்அதன் உரிமையாளர் அதன் மீது பொறித்து வைத்திருக்கும் அடையாளத்தையோ, கற்றுத் தந்திருக்கும் வித்தையையோ காட்டி நிரூபிக்கவேண்டும். நான் கேட்டதை நீ புரிந்துகொள்ளவில்லை, என்றார் லக்ராங்கே. தனது நண்பரின் தெளிவற்ற குழப்பத்தனத்தை அறிந்தவராதலால்அவரைத் தணிவுடன் ஆசுவாசப்படுத்தினா ஆனாலும் தெலாகூ தொடர்ந்தார். நான் சொல்வது என்னவென்றால், இத்தனை நிச்சயமாகநாம் சட்டங்களை வகுக்கிறோமே, ஆனால் தேனீக்கள் எப்போது மேயக் கிளம்புமென்றோ, எப்போது புறாக்கள் பறந்து செல்லுமென்றோயார் முன் கூட்டியே கணிக்க முடியும்? அல்லது தனது குழியிலிருந்து ஒரு முயல் எப்போது வெளியே பாய்ந்து ஓடும் என்று தெரியும்? சரி, அவளது பெயர்? ஜென்னி. குளியலறை வளாகத்தில் பணிபுரிகிறாள். குளியல் அறைகளில் பணிபுரிகிற ஜென்னியா? லக்ராங்கே ஒரு நிதானமான மனிதர் என்று எல்லோருக்கும் தெரியும். இப்போது அவர்நாற்காலியை பின்னால் உதைத்துத் தள்ளிவிட்டு கோபப் பிழம்பாக எழுந்து நின்றார். இந்தச் சப்தம் தெலாகூவின் ராணுவ தினங்களைஞாபகப்படுத்தியது. திடீர் கோபங்கள், திடீர் சவால்கள், உடையும் மரச் சாமான்கள். உனக்கு அவளைத் தெரியுமா? குளியலறையில் வேலைபார்க்கும் ஜென்னியா? ஆம், அவளை நீ விட்டு விட வேண்டும். தெலாகூவிற்கு புரியவில்லை. அதாவது, அவரது வார்த்தைகள் புரிந்தாலும் அதன் நோக்கம் விளங்கவில்லை. புறா எப்போது பறந்துசெல்லும் என்று யார் கணிக்க முடியும்?, தான் கண்டுபிடித்த கோட்பாட்டில் அவரே மகிழ்ந்து மறுபடியும் கேட்டார். லக்ராங்கே மேசையை நடுங்கும் கைகளில் நரம்புகள் புடைக்க அழுத்திப் பிடித்துக்கொண்டு அவரை நோக்கி முன்னால் குனிந்து, நம்நட்பின் பெயரால் கூறுகிறேன், நீ அவளை விட்டு விட வேண்டும், என்றார். தெலாகூ தன் நண்பரை இவ்வளவு தீவிரமான பாவத்திலும், மனநிலையிலும் பார்த்ததில்லை. நான் சொல்வதை நீ கவனிக்கவில்லை. தெலாகூ நண்பரின் முகத்திலிருந்து விலகி, நாற்காலியில் பின்னால் சாய்ந்து கொண்டார். முதலில்இது தேக ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட விஷயமாகத்தான் இருந்தது. அவளிடம் நான் எவ்வளவோ எடுத்துக் கூறினேன். பதிலுக்குஅணைப்பதெல்லாம் கூடாது என்று மறுத்துவந்திருக்கிறேன். அவளை அக்கறையுடன் கவனித்தது கூட கிடையாது. இப்படியிருந்தும் அவள்து எனக்கு காதல் வந்துவிட்டது. முன் கூட்டியே கணிக்கமுடியாத நான் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன்... நம் நட்பின் பெயரால் நான் வற்புறுத்திக் கூறுகிறேன். தெலாகூ இக்கோரிக்கையை கவனமாக சீர் தூக்கிப் பார்த்தார். இல்லை, கோரிக்கையாக இல்லை, கட்டளையாகத்தான் இருந்தது. அவர்சீட்டாட மேசையில் இருப்பதைப் போல திடீரென்று உணர்ந்தார். எதிரேயிருக்கும் எதிரி காரணமேயின்றி தொகையை பத்து மடங்குஅதிகப்படுத்தியிருக்கிறான். இம் மாதிரியான சந்தர்ப்பங்களில் எதிரியின் கையிலிருக்கும் கணிக்கமுடியாத சீட்டு விசிறிக்கு பதில் தர தன்உள்ளுணர்வைத்தான் நம்பியிருக்கிறார், தர்க்கக் கணக்கையல்ல. முடியாது, அமைதியாக பதிலளித்தார். சின்னதாக ஒரு ட்ரம்பை கீழிறக்குவதைப்போல. லக்ராங்கே வெளியேறினார். தெலாகூ கண்ணாடி டம்ளரிலிருந்த தண்ணீரை அருந்திக்கொண்டே சாத்தியக்கூறுகளை நிதானமாக அலசினார். அவர் அதை இரண்டாகக்குறைத்தார். அசூயை அல்லது பொறாமை. அவர் அசூயையை நீக்கிவிட்டார். லக்ராங்கே மனித இயல்புகளை கவனிப்பவர்தானே தவிர,அவர்களின் நெறிமீறல்களைக் கண்டிக்கும் ஒழுக்கவாதியல்ல. எனவே இது பொறாமையாகத்தானிருக்கும். அந்தப் பெண்ணின் மீதா,அல்லது அவள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் அல்லது வெற்றி இவற்றின் மீதா? உண்மையில் இந்த சந்தாத்திட்டம்மனிதர்களை விசித்திரமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்துகிறது. இது லக்ராங்கேவை அளவுக்கு மீறி உணர்ச்சிவயப்பட வைத்திருக்கிறது.அவரும் தேனீக்கூட்டத்தைப் போல கிளம்பிவிட்டார். போகட்டும், தெலாகூ அவரைப் பின் தொடரப் போவதில்லை. அவர் தேர்ந்தெடுக்கும்இடத்தில் அவர் இறங்கட்டும். தெலாகூ தனது தினசரி கடமைகளைத் தொடர்ந்து செய்து வந்தார். லக்ராங்கேவிற்கு தன்னிடம் ஏற்பட்டிருக்கும் மனஸ்தாபத்தை யாரிடமும்அவர் சொல்லவில்லை. எப்படியும் அந்த உணவகத்திற்கு அவர் வருவார் என்று எதிர்பார்த்திருந்தார். அவருடனான விவாதங்களையும்,அவரது கூர்மையான கவனிப்பையும் அவர் வெகுவாக இழந்திருந்தார். பின் மெதுவாக இந்த இழப்பினைப் பழகிக்கொண்டார்.ஜென்னியை அடிக்கடி சென்று பார்க்கத் தொடங்கினார். அவளும் அதனை ஆட்சேபிக்காமல், சட்டவிவகாரங்கள் குறித்து அவர்விளக்கமாக பேசுவதை எதுவும் புரியாவிட்டால் கூட கவனமாக கேட்டுக்கொண்டிருந்தாள். இதற்குமுன் அவளது வரம்பை மீறி அவரிடம்காதலுடன் நடந்து கொண்டதற்காக எச்சரிக்கப்பட்டிருந்ததால் அமைதியாகவும், பணிவோடும் அவரிடம் நடந்து கொண்டிருந்தாள்.ஆனாலும் அவரது தழுவல்களில் மென்மையும் காதலும் இப்போதெல்லாம் கலந்திருப்பதை அவள் கவனிக்கத் தவறவில்லை. ஒருநாள்அவரிடம் தான் கருவுற்றிருப்பதைத் தெரிவித்தாள். இருபத்தைந்து ஃபிராங்குகள், என்றார். அவள் தான் ஒன்றும் அவரிடம் பணம் கேட்கவில்லை என்று சீறினாள். அவர் மன்னிப்பு கோரினார் அவரது கவனம் வேறெங்கோ இருந்ததுபிறகு அவளிடம் தன்னுடைய குழந்தைதான் என்று நிச்சயமாகத் தெரியுமா என்று கேட்டார். அவளது ஆமோதிப்பைக் கேட்டதும், அதுவும்அதிலிருந்த கூர்மையை உணர்ந்ததும், அவர் குழந்தையை ஏற்றுக் கொள்வதாவும், அதனை செவிலித்தாய் ஒருத்தியிடம் ஒப்படைத்துவளர்க்க உதவுவதாகவும் உறுதியளித்தார். இப்போது தன் மனதில் ஜென்னியின்பால் திடீரென்று அன்பும், காதலும், ஒருவித நெகிழ்வும்சுரப்பதை உணர்ந்து வியந்தார். அதனை வெளிக்காட்டாமலிருக்க முயன்றார். அவரைப் பொறுத்தவரை இது அவளைமட்டும் சார்ந்தவிஷயமில்லை. அவரையும் பொறுத்தது. மேலும் அவருக்குத் தோன்றுவதை உண்மையாக வெளிப்படுத்திவிட்டால் இதுவிலகிவிடுமென்றோ, அல்லது அவர் விரும்பாத வகையில் சிக்கலாகிவிடுமென்றோ அவருக்குப் புரிந்தது. தன்னை அவள் நம்பலாம் என்றுஅவளுக்குப் புரியவைத்தார். அதுவே போதுமானதாக இருந்தது. மற்றபடி தனது காதலை ஒரு தனிப்பட்ட விஷயமாகவே கருதினார்.லக்ராங்கேவிடம் இதைச்சொல்வது தவறாகத்தானிருக்கும். வேறு யாரிடமும் சொல்வதுகூட. சிலமாதங்கள் கழித்து அவர்கள் சங்கத்தின் முப்பத்தி ஆறாவது நபராக லக்ராங்கே இறந்துபோனார். தெலாகூ தங்களது சச்சரவைப் பற்றியாரிடமும் கூறியிராததால் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். சவப்பெட்டியை உள்ளே இறக்கும்போது மேம். அமேலியிடம்தன்னை சரிவர இவன் பராமரித்துக் கொள்ளவில்லை, என்றார். தெலாகூ தலையை உயர்த்தியதும், கல்லறைக்கு மறுபுறத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஜென்னி இருப்பதைப் பார்த்தார்.அவளது உடை முழுமையாக முன்னால் தெரிந்தது. செவிலித் தாய்களைக் குறித்த சட்டம், அவரது அபிப்பிராயத்தில் பயனற்ற ஒன்று. ஜனவரி 19, 1715ல் பிரகடனம் செய்யப்பட்டதுதெளிவாகச் சொல்கிறது. செவிலித்தாய்கள் ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு பாலூட்டக் கூடாது. அவளுக்குத் தண்டனையும்,அவள் கணவனுக்கு ஐம்பது ஃபிராங்குகள் அபராதமும் உண்டு. அவர்களே கருத்தரித்துவிட்டால் இரண்டு மாதங்களுக்குள்தெரிவித்துவிடவேண்டும். அதனால் பாலூட்டி வந்த குழந்தையை அதன் பெற்றோர் வீட்டிற்கு திருப்பி அனுப்பிவிடவும் கூடாது. பணம்தரப்படாவிட்டால்கூட அவர்களது சேவையைத் தொடர்ந்து செய்துவிட்டு, காவல்துறை ஆணையத்திடமிருந்து அத்தொகையைமீளப்பெற்று விடலாம். ஆனால் இத்தகைய பெண்கள் நம்பிக்கையானவர்கள் அல்லர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவர்கள்கூடுதலாக குழந்தைகளையும் அமர்த்திக்கொள்வார்கள். தங்களது கருத்தரிப்பு காலத்தை பொய்யாக நீட்டித்தும் சொல்வார்கள். தொகைவழங்கப்படுவதில் பூசல் ஏற்பட்டால் அதற்கு அடுத்தவாரம் அக்குழந்தை பிழைத்திருப்பதில்லை. ஒருவேளை அவர் ஜென்னியையேகுழந்தைக்கு பாலூட்ட அனுமதிக்க வேண்டும் போலிருக்கிறது. அவளும் அதைத்தான் விரும்புகிறாள். அவர்களது அடுத்த சந்திப்பில் தெலாகூ அவளை அந்த இறுதிச்சடங்கில் பார்த்தது குறித்து தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.லக்ராங்கே அவருக்குத் தெரிந்தவரை நகராட்சி குளியலறையை உபயோகிக்கும் தனது உரிமையை துய்த்ததேயில்லை. அவர் என் அப்பா, என்றாள். தந்தைமை மற்றும் மகவுத் தொடர்புத்துறை, மார்ச் 23, 1803 ம் தேதிய ஆணை, ஏப்ரல் 2ல் பிரகடனம் செய்யப்பட்டது. பாகம் 1, 2 மற்றும் 3என்று அவருக்கு ஞாபகம் வந்தது. எப்படி? என்று மட்டும்தான் அவரால் கேட்க முடிந்தது. எப்படி?, அவளும் திருப்பிக் கேட்டாள். ஆமாம், எப்படி? நிச்சயமாக வழக்கமான முறையில்தான்! ஏன்? என்றாள். ஆம். அவர் என் அம்மாவை வந்து பார்த்துவிட்டுச் செல்வார்... நான் உன்னிடம் வருவதைப் போல. ஆம். அவருக்கு என்மேல் மிகுந்த அன்பு இருந்தது. என்னை அவர் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள விரும்பினார். சட்டபூர்வமாக? ஆமாம். என் அம்மாவிற்கு இதில் விருப்பமில்லை. இதனால் சண்டை கூட ஏற்பட்டது. அவர் என்னை கடத்திக்கொண்டு போய்விடுவார்என்று அவள் பயந்தாள். என்னை பொத்திப்பொத்தி வளர்த்தாள். சில வேளைகளில் அவர் எங்களை வேவு பார்ப்பார். என் அம்மா இறக்கும்தருவாயில் அவரிடம் நான் போகக் கூடாது என்றும், அவரோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் சத்தியம்வாங்கிக்கொண்டாள். அவரை... அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்டதை தொடர்பு என்று சொல்லமுடியாதுதானே..? ஜேன் எடியான் தெலாகூ அந்தப் பெண்ணின் குறுகிய கட்டிலின் மீது அமைதியாக அமர்ந்திருந்தார். ஏதோ அவர் மனத்திலிருந்து நழுவிக்கொண்டிருந்தது. உலகம் தனது அர்த்தத்தை இழந்து கொண்டிருந்தது. இந்தக் குழந்தை, பிரசவத்தின் சிக்கல்களையெல்லாம் ஜெயித்து,பிழைக்குமென்றால் அது லக்ராங்கேவின் பேரக்குழந்தையாக இருக்கும். அவர் என்னிடம் சொல்லாமல் மறைத்தது எது? ஜென்னியின் தாய்அவரிடம் மறைத்தது எது? நான் ஜென்னியிடம் சொல்லாதது எது? நாம் சட்டத்தை உருவாக்குகிறோம். ஆனால் தேனீக்கூட்டம் அவைவிருப்பப்பட்ட இடத்திற்கு செல்கின்றன. முயல்கள் ஏதோ ஒரு குழியைத் தேடிக்கொள்கின்றன. புறா அதற்குப்பிடித்தமான மாடத்திற்குபோய்விடுகிறது. கடைசியில் அவர் சொன்னார். நான் ஒரு சூதாடியாக இருந்தபோது, மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் அதை ஒரு கெட்டபழக்கமாக கருதினார்கள். நான் ஒருபோதும் அப்படி நினைத்தது கிடையாது. என்னைப்பொறுத்தவரை மனிதனின் மனப்போக்கை தர்க்கரீதியாக அலசி வியூகம் அமைத்து நம் முடிவை செயல்படுத்தும் முறையாகத்தான் அதை நான் பார்த்தேன். நான் ஒரு பெருந்தீனிக்காரனாகஇருந்தபோது மக்கள் அதை பொறுப்பற்றதொரு இச்சையாக கருதினர். நான் அப்படி நினைத்ததேயில்லை. அது எனக்கு மனிதரசனைசம்மந்தப்பட்ட அணுகுமுறையாகத்தான் தெரிந்தது. அவர் அவளை நோக்கினார். அவர் கூறுவது எதையும் அவள் கிரகித்துக் கொண்டதாகத் தோன்றவில்லை. சரி, இதுதான் அவருடையகஷ்டம். அவள் கையைத் தன்பால் எடுத்துக்கொண்டு, ஜென்னி, என்று அன்புடன் அழைத்தார். உன் குழந்தையைப் பற்றி உனக்கு எந்தபயமும் வேண்டாம். உன் அம்மாவிற்கு இருந்த மாதிரியான பயம் எதுவும் தேவையில்லை. சரி, சார். இரவு உணவின்போது அவரது வளர்ந்த மகனின் குழந்தைத்தனமான பேச்சுகளைக் கேட்டுக்கொண்டு, அந்த அபத்தமான உளறல்களைஅவ்வப்போது திருத்தக் கூடத் தோன்றாதவராய் அமர்ந்திருந்தார். பசியேயில்லாமல், ஒரு சின்ன மரப்பட்டையை எடுத்து மென்றார். அதன்பின் அவர் பருகிய பால் தாமிரப் பாத்திரத்திலிருந்து எடுத்ததைப் போலக் கசந்தது. கீரைக்குழம்பு, சாணிக் குண்டத்திலிருந்து எடுத்துவந்ததைப் போல நாற்றமடித்தது. ரென்னட் ஆப்பிள் அவரது தலையணையில் பொதிக்கப்பட்ட குதிரைவால் ரோமங்கள் மாதிரிதிரிந்திருந்தது. காலையில் அவரை அவர்கள் போய் பார்த்தபோது லினன் இரவுத்தொப்பியை அவரது வலதுகை பற்றியிருந்தது. அதை அவர்அணிந்துகொள்வதற்காக எடுத்திருந்தாரா, அல்லது ஏதோ காரணத்திற்காக கழற்றி வைத்திருந்தாரா என்று யாராலும் சொல்லஇயலவில்லை. BARK by JULIAN BARNES. |
-
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி
ஜேன்எடியான் தெலாகூவின் விருந்து தினத்தில் அவரது மருமகள் மேம். அமேலி கீழ்கண்ட உணவுகளைத் தயாரிக்க உத்தரவிட்டிருந்தாள்.வேகவைத்த மாட்டிறைச்சி பூயன், கொந்திய முயல் கறி, புறா கேசரோல், காய்கறிகள், பாலாடைக்கட்டி, பழ ஜெல்லிகள், தனக்கு முன்னால்வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலிருந்து ஒரே ஒரு ஸ்பூன் பூயனை சபையொழுக்கத்திற்காக எடுத்து, தயக்கத்துடன் வாயருகே கொண்டுசென்று நயமாக ஊதினார். வாயில் வைக்காமல் மரியாதையுடன் அதனைக் கீழே வைத்தார்.












Click it and Unblock the Notifications