"மனிதனே நினைத்தாலும் முடியாது.." சத்தமின்றி AI செய்ய போகும் காரியம்! ஏஐ காட்பாதர் தந்த பகீர் வார்னிங்
சென்னை: செயற்கை நுண்ணறிவின் காட்ஃபாதர் என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹின்டன் இப்போது ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஏஐ விரைவில் தங்களுக்குள் பேசிக் கொள்ள ஒரு மொழியை உருவாக்கிக் கொள்ளக்கூடும் என்றும் அது மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாது என்றும் எச்சரித்துள்ளார். இது மனித இனத்தையே ஆபத்தில் தள்ளும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ தான் இருக்கிறது. எல்லா துறைகளிலும் ஏஐ மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஏஐ காரணமாகப் பல துறைகளில் வேலை ஈஸியாகி இருப்பதாகப் பலரும் பாராட்டித் தள்ளி வருகிறார்கள். அதேநேரம் சிலர் ஏஐ மாடல்கள் குறித்தும் அவை மனித இனத்திற்கே எப்படி ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பது குறித்தும் எச்சரித்து வருகிறார்கள்.

ஜெஃப்ரி ஹின்டன்
அப்படி ஏஐ ஆபத்துகள் குறித்துத் தொடர்ந்து எச்சரித்து வருபவர் ஜெஃப்ரி ஹின்டன். செயற்கை நுண்ணறிவின் காட்ஃபாதர் என அழைக்கப்படும் இவர் 'ஒன் டிசிஷன்' என்ற பாட்காஸ்டில் இது குறித்து சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது விரைவில் AI தனக்கென தனிப்பட்ட மொழியை உருவாக்கிக் கொள்ளும் என்றும் மனித படைப்பாளர்களால் கூட அதைப் புரிந்துகொள்ள முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
பெரிய சிக்கல்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இப்போது ஏஐ அமைப்புகள் chain of thought எனப்படும் முறையில் ஆங்கிலத்தில் செயல்படுகின்றன. இதனால், அவை என்ன செய்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.. ஆனால், அவை தங்களுக்குள் பேசிக்கொள்ளத் தனிப்பட்ட உள்ளக மொழிகளை உருவாக்கினால், அது மிகவும் அச்சுறுத்தலாகிவிடும். AIகளுக்கு அச்சுறுத்தும் திறன்கள் உள்ளன. அதில் சிலவற்றை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எனவே, அவை மனிதர்களுக்குப் புரியாத மொழியை உருவாக்க வாய்ப்புகள் அதிகம்" என்றார்.
ஹின்டனின் கருத்துகள் எப்போதும் சர்வதேச அளவில் அதிகம் கவனம் ஈர்க்கும். 2024ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இவர் ஆரம்பக் காலத்தில் நியூரல் நெட்வொர்க் ஆய்வுகளைச் செய்துள்ளார். அதுவே இன்றைய டீப் லேர்னிங் மாடல்கள் மற்றும் ஏஐ அமைப்புகளுக்கு வழி வகுத்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் தொடக்கத்தில் இது எந்தளவுக்கு ஆபத்து என்பதை உணரவில்லை என்றும் தனது ஆய்வுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிய போதே இதன் ஆபத்தை உணர்ந்ததாகச் சொல்லியிருக்கிறார் ஹின்டன்.
வேதனை
அவர் மேலும் கூறுகையில், "இதனால் ஏற்படும் ஆபத்துகள் என்னவாக இருக்கும் என்பதை நான் சீக்கிரமே உணர்ந்திருக்க வேண்டும். எதிர்காலம் தொலைவில் இருப்பதாகவே நான் எப்போதும் நினைத்தேன்.. மேலும் பாதுகாப்பு பற்றி நான் முன்னரே சிந்தித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று அவர் கூறியிருக்கிறார்.
ஏஐ ஆபத்துகளை விளக்கும் ஹின்டன், "மனிதர்கள் புதிய விஷயத்தை கற்றுக் கொள்ளக் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால், ஏஐ அவற்றைக் காபி பேஸ்ட் செய்துவிடும். மனிதர்களால் எட்ட முடியாத வேகத்தில் AI புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும். GPT-4 போன்ற தற்போதைய மாடல்கள் ஏற்கனவே பொது அறிவில் மனிதர்களை விஞ்சிவிட்டன. இப்போதைக்கு ரிசனிங் மட்டுமே மனிதக் குலத்தின் பலமாக உள்ளது. ஆனால் அதுவும் ஏஐ பக்கம் செல்ல அதிக டைம் ஆகாது" என்றார்..
ஒரே தீர்வு இதுதான்
ஏஐ தொடர்பான கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க வெள்ளை மாளிகை முயன்று வருகிறது. இருப்பினும், வெறுமன ஒழுங்குமுறை மட்டும் போதாது என்கிறார் ஹின்டன். மனிதர்களால் பாலோ செய்ய முடியாத வழிகளில் சிந்திக்கும் என்பதால் அடிப்படையிலேயே நன்மை மட்டுமே செய்யும்படி வடிவமைக்கப்பட்ட AIஐ உருவாக்குவதே தீர்வாக இருக்கும் என்கிறார் ஹின்டன்.!












Click it and Unblock the Notifications