ஆட்டை கடித்து.. மாட்டை கடித்து.. இப்போ பாருங்க.. AI துறையில் வேலையிழப்பு! 200 பேர் வேலை பறிபோனது!
சியாட்டில்: ஏஐ வளர்ச்சி காரணமாக ஏற்கனவே பல்வேறு துறைகளில் வேலையிழப்புகள் ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே ஆட்டை கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களைக் கடிக்கும் கதையாக இதர துறைகளைத் தொடர்ந்து, இப்போது ஏஐ துறையிலேயே வேலையிழப்பு நடந்துள்ளது. சுமார் 200 ஊழியர்கள் ஒரே மாதத்தில் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ தான் இருக்கிறது. பல்வேறு துறைகளிலும் ஏஐ தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், மற்ற விஷயங்களைக் காட்டிலும் ஏஐ டூல்களின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. இந்த ஏஐ வளர்ச்சியால் மனிதர்களுக்கு ஏகப்பட்ட நன்மைகளும் இருக்கவே செய்கிறது. பல துறைகளில் நமக்கு உதவியாகவும் இருக்கிறது.

வேலையிழப்பு
அதேநேரம் மிக வேகமாக ஏஐ வளர்ச்சி அடைவது பல சிக்கல்களை உருவாக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக வேலையிழப்பு இதனால் அதிகமாக இருக்கும் எனச் சொல்கிறார்கள். ஏஐ வேலையிழப்பு என்பது சில ஆண்டுகளிலேயே மிகப் பெரிய பிரச்சனையாக வெடிக்கும் என்றும் நாம் வேலை செய்யும் முறையே இதனால் மாறும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஏற்கனவே சில துறைகளில் ஏஐ காரணமாக வேலையிழப்பு தொடங்கிவிட்டதையும் நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக கஸ்டமர் கேர் உள்ளிட்ட துறைகளில் ஏஐ வேலையிழப்பு அதிகமாகவே இருக்கிறது. இது வரும் காலங்களில் மற்ற துறைகளிலும் கூட எதிரொலிக்கும் என அஞ்சப்படுகிறது. இப்படி மற்ற துறைகளில் சம்பவம் செய்து வந்த ஏஐ, இப்போது செயற்கை நுண்ணறிவு துறையிலேயே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
200 பேர் வேலை பறிபோனது
அதாவது கூகுள் நிறுவனத்தின் ஜெமினி மற்றும் ஏஐ ஓவர்வியூஸ் ஆகிய செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் பணிபுரிந்த 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரே மாதத்தில் இரு வெவ்வேறு கட்டங்களாக இந்தப் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் இவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
என்ன காரணம்
பல ஒப்பந்த ஊழியர்கள் தாங்கள் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக ஆண்ட்ரூ லாசான் என்ற ஒப்பந்த ஊழியர் கூறுகையில், "திடீரென என்னை டிஸ்மிஸ் செய்துவிட்டதாகச் சொன்னார்கள். அன்றைய தினம் எனக்கு ஒரு மெயில் வந்தது. நான் வேலை தொடர்பான மெயில் என நினைத்து ஓபன் செய்து பார்த்தேன். அதில் எனது ஒப்பந்தம் முடிவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எதற்காக என்னை வேலையைவிட்டு நீக்கினீர்கள் எனக் கேட்டேன். திட்டத்தைக் குறைக்கப் போவதாக ஏதோ சொன்னார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்று கூட எனக்குப் புரியவில்லை. எந்த நேரத்திலும் வேலை போகலாம் என்ற நிலையே இருக்கிறது. எங்களுக்கு உரிய விளக்கத்தைக் கொடுத்தே தீர வேண்டும்" என்றார்.
கூகுள் விளக்கம்
அதேநேரம் இந்தப் பணி நீக்கங்களுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை எனக் கூகுள் கூறியுள்ளது. ஏஐ தொடர்பான சில வேலைகளுக்கு மற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டிருந்ததாகவும் அந்த நிறுவனங்களே இப்போது ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணிநீக்கம் செய்யப்பட்ட யாருமே கூகுள் ஊழியர்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
ஏஐ துறையைப் பொறுத்தவரை இப்போது நாளுக்கு நாள் போட்டி அதிகரித்துள்ளது. சாட்ஜிபிடி, க்ராக் எனப் பல்வேறு ஏஐ டூல்கள் வந்துவிட்டன. அதற்குப் போட்டியாகவே கூகுள் நிறுவனமும் ஜெமினி ஏஐ டூலில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications