ரெட் அலர்ட்: கோவை வெள்ளியங்கிரி மலை ஏறத் தடை.. ஒரே நாளில் 2 பக்தர்கள் உயிரிழப்பு
கோவை: கோவை மாவட்டத்துக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளியங்கிரி மலை ஏற வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது. அதேநேரத்தில் இன்று ஒரே நாளில் வெள்ளியங்கிரி மலை ஏறிய ஒரு பெண் உள்பட 2 பக்தர்கள் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. முக்கியமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்துக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. நேற்று முதலே கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் தொட்டபெட்டா, ஃபைன் பாரஸ்ட், படகு சவாரி, டிரெக்கிங் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
தமிழ்நாடு அரசு இரண்டு மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்துள்ளது. இந்நிலையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை குற்றாலம், பரளிக்காடு சூழல் சுற்றுலா பகுதிகளுக்கு வனத்துறை தற்காலிகமாக தடை விதித்துள்ளது. வார இறுதி நாட்களில் நடைபெறும் பரளிக்காடு பகுதிக்கு சுற்றுலா சென்ற மக்களை வனத்துறை பத்திரமாக வெளியேற்றியது.
பொதுவாக வெள்ளியங்கிரி மலைக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்கள் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்தாண்டு மே 31 ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரெட் அலர்ட் காரணமாக வெள்ளியங்கிரி மலை செல்வதற்கும் வனத்துறை தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
இதுகுறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. வெள்ளியங்கிரி மலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எனவே பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு வெள்ளியங்கிரி மலையேற தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. மேலும் மலை ஏறிக் கொண்டுள்ள அனைவரும் உடனடியாக கீழே திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கொண்டு யாரும் மலை ஏற வேண்டாம்." என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் வெள்ளியங்கிரி மலை ஏறிய 2 பக்தர்கள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், "காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கௌசல்யா என்ற 45 வயது மதிக்கத்தக்க பெண் வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார். அவர் ஏழாவது மலையில் உள்ள விநாயகர் கோயில் அருகே உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
அதேபோல திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது செல்வக்குமார் என்ற இளைஞர் வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார். ஐந்தாவது மலையில் இருக்கும்போது அவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இருவரின் உடல்களை மீட்க வனக்களப்பணியாளர்கள் மற்றும் சுமை தூக்கும் பணியாளர்கள் டோலியுடன் சென்று கொண்டிருக்கிறார்கள்." என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் இந்தாண்டு தற்போதுவரை வெள்ளியங்கிரி மலை ஏறிய 7 பக்தர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்திருப்பது குறிப்பிட்டத்தக்கது.












Click it and Unblock the Notifications