Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு தரும் கோடீஸ்வர யோகம்.. 16 ஆண்டுகள் எந்த ராசிக்காரர்களுக்கு அள்ளித்தருவார் குரு பகவான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் நல்ல நிலையில் இருந்தால் அவரது தசா புத்தி காலத்தில் ஜாதகருக்கு நல்ல யோகங்களை வாரி வழங்குவார். வருமானம் அதிகம் வரும், செல்வம் செல்வாக்கு கூடும், புத்திரபாக்கியம் கிடைக்கும், புத்திரர்களினால் நன்மைகள் நடைபெறும். குரு தசையால் 16 ஆண்டுகள் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

குரு பகவான்: தன காரகன், புத்திரகாரகன். குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் அவரது தசாபுத்தி காலத்தில் கோடீஸ்வர யோகம் பெறும் அளவிற்கு அள்ளிக்கொடுப்பார். அதே சரியில்லாத நிலையிலோ வலுவிழந்தோ, நீசமடைந்தோ இருந்தால் அவரது தசாபுத்தியில் பாதிப்புகளை ஏற்படுத்துவார். குரு பொன்னவன். குரு பார்க்க கோடி நன்மை. குரு நின்ற இடம் பாழ், பார்க்கும் இடம் சுபிட்சம் என்றெல்லாம் ஜோதிட ரீதியான பழமொழிகள் உண்டு. பொன்னும், மஞ்சளும் குருவிற்கு உரியதாகிறது. பொன் எனப்படும் தங்கத்திற்கு அதிபதியும் குருவே. குரு முழுமையான சுப கிரகம் என்பதால் அவரது பார்வைக்கு எத்தகைய தோஷத்தையும் போக்கும் வலிமை உள்ளது. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை குரு பகவானின் நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் போதே குரு தசை தொடங்கும்.

Guru Peyarchi Palan 2023: Guru dasa Effects and Remedies

பண வருமானம் அதிகரிக்கும்: குரு பகவான் தனம் மற்றும் புத்திர காரகன் என்பதால் அவரது தசையில் பணம் அதிகமாகப் புரளும் இடங்களிலோ, பணத்தை வைத்துச் செய்யும் தொழில்களிலோ இருக்க வைப்பார்.ஒருவரின் ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால் பணம் அதிகம் புரளும் இடங்களில் வேலை கிடைக்கச் செய்வார் நகை, நிதித்துறை போன்ற தொழில்களை செய்ய வைப்பார். வலுப்பெற்ற குரு பத்தாமிடத்தோடு சம்பந்தப்படும் நிலையில், ஒருவரை பணத்தை இரட்டிப்பாக்கும் வட்டித் தொழில் மற்றும் ஜுவல்லரி போன்றவைகளில் ஈடுபட வைத்து பெரிய லாபங்களைத் தருவார். ஒருவரின் ஜாதகத்தில் குரு ஆறு, எட்டு போன்ற இடங்களில் மறைந்தோ, பகை, நீசம் பெற்றோ இருந்தால் சனி, ராகு போன்ற பாபக் கிரகங்களுடன் தொடர்பு கொண்டோ இருந்தால் தன லாபத்தை தடை செய்வார், புத்திரபாக்கிய தடையும் ஏற்படும்.

குரு மகா தசை: குரு தசை 16 வருடங்கள் கொண்டது. குரு தசை ஒருவருக்கு நடக்கும் போது 16 ஆண்டுகள் அவரை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு நல்லது கெட்டதை நடத்தி வைப்பார் குரு பகவான். குரு என்றால் மங்கலம், சுபம் என்று பார்க்கலாம். குரு பகவான் சுபர் என்பதால் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு குரு திசை நடந்தால் அது அந்த குடும்பத்திற்கே நல்லதை கொடுக்கும். குரு தசை தொடங்கினால் நிறைய நல்லது நடக்கும். புதிய விசயங்களை கற்றுக்கொள்வார்கள். குரு திசை குரு புத்தி காலத்தில் கடவுள் அருள் கிடைக்கும். இறை அருள் தேடி வரும். சுபமான பலன்கள் அதிகம் நடைபெறும். குருவின் ஆலோசனை கிடைக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். குரு பகவான் உங்களுக்கு யோக காரகராக இருந்தால் நிறைய அள்ளி கொடுப்பார்.

மன நிம்மதி தரும் குருபகவான்: இயற்கை சுபரான குரு பகவான் சரியான நிலையில் வலிமையாக அமர்ந்து இருந்தால் கோடீஸ்வர யோகத்தை கொடுப்பார். குரு திசை சனி புக்தியில் சில தடைகள் வந்து நீங்கும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. நேர்மறை எண்ணங்களை அதிகரித்துக்கொள்ளுங்கள். படிப்பது நல்லது. குரு திசை புதன் புத்தி நடக்கும் போது பலம் அதிகரிக்கும். தெளிவும் ஞானமும் அதிகரிக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். குரு திசையில் கேது புக்தி நடக்கும் போது ஞானம் அதிகரிக்கும். பற்றற்ற நிலை உண்டாகும்.

சுபகாரியம் நடைபெறும்: குரு திசை சுக்கிர புக்தி நடக்கும் போது சுப பலன்கள் அதிகரிக்கும். திருமணம் சுப காரியம் நடைபெறும். குடும்பத்தில் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். குரு திசை சூரிய புத்தியில் அதிகார பதவி தேடி வரும். புகழும் செல்வமும் தேடி வரும். வெற்றி மீது வெற்றிகள் தேடி வரும். குரு சந்திர புக்தி நடைபெறும் காலத்தில் உங்களின் ஆசைகளும் எண்ணங்களும் தேடி வரும். குரு தசையில் செவ்வாயும் இணைந்து தசாபுக்தி நடக்கும் போது பூமி யோகம் தேடி வரும். திருமணம் சுப காரியம் தேடி வரும். வெற்றிகள் தேடி வரும். குரு திசை ராகு புக்தி காலத்தில் கவனமாக இருப்பது நல்லது. பண முதலீடுகளில் நிதானம் அவசியம்.

அஷ்ட லட்சுமி யோகம்: ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் ஒன்று, நான்கு, ஏழு, பத்து எனப்படும் கேந்திர ஸ்தானங்களில் இருந்து ராகு ஆறாமிடத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் அமைவதாக ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. ஆறாமிடத்தில் அசுபக் கிரகமான ராகு இருப்பதால் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் கெட்ட ஆதிபத்தியங்களான கடன், நோய், எதிரி ஆகியவை ஒழிக்கப்பட்டு அந்த பாவம் ஜாதகருக்கு சுப விஷயங்களைச் செய்யும் என்பது ஜோதிட விதி. குரு ஹம்ச யோகம் தரும் நிலையில் அவருக்கு எதிர்த் தன்மையுடைய கிரகங்களான சுக்ரன், சனி, புதன் ஆகியோருடன் சேருவது, இவர்கள் குருவைப் பார்ப்பது யோகத்தைக் குறைத்து விடும். அதேநேரத்தில் குருவின் நண்பர்களான சந்திரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் குருவைப் பார்த்தாலோ, இணைந்தாலோ யோகம் இன்னும் வலுப்பெறும்.

யாருக்கு நல்லது செய்வார் குரு: செவ்வாயின் ஆதிக்கத்துக்குட்பட்ட மேஷ லக்னத்திற்கு குரு 9 மற்றும் 12ஆம் அதிபதி. அதே போல விருச்சிக லக்னத்திற்கு குரு 2 மற்றும் ஐந்தாம் அதிபதி. குரு தனது தசையில் மிகச் சிறந்த யோகங்களை அளிப்பார். அதே போல கடகம், சிம்மம் லக்ன காரர்களுக்கும் தனது தசையில் யோகங்களையே செய்வார். இந்த நான்கு லக்னங்களுக்கும் வலிமையற்ற நிலையிலோ, மறைவு பெற்றோ, பகை, நீசம் பெற்றிருந்தாலும் கூடுமானவரை கெடுதல்களைச் செய்ய மாட்டார். கை தூக்கி விட்டு காப்பாற்றுவார்.

குரு செய்யும் நன்மை: ரிஷபம், துலாம் லக்னக்காரர்களுக்கு குரு பகவான் பெரிதாக நன்மை செய்வதில்லை. காரகம் குருவின் எதிரி சுக்கிரன். ரிஷப லக்னத்திற்கு எட்டிலும், துலாம் லக்னத்திற்கு ஆறாம் வீட்டிலும் அமர்ந்து ஆட்சி பலம் பெற்று சுப கிரகங்களின் பார்வையோ தொடர்போ ஏற்பட்டால் நல்லது நடக்கும். மிதுனம் மற்றும் கன்னி லக்னக்காரர்களுக்கு குரு பகவான் கேந்திரமான 4, 7 , மற்றும் 10ஆம் வீட்டில் அமரும்போது யோகம் தருவார். நல்ல வாழ்க்கைத்துணையும் பிள்ளைகளால் பெருமையும் தேடி வரும். மகரம், கும்பம் லக்னகாரர்களுக்கு யோகாதிபதி இல்லை என்றாலும் கடகத்தில் உச்சம் பெற்ற குரு மகரத்தை பார்த்தால் தசையில் நன்மை நடைபெறும். அதே போல கும்ப லக்ன காரர்களுக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் குரு அமர்வது நன்மை நடக்கும்.

லாபம் தரு குரு பகவான்: தனுசு, மீனம் ராசிக்கு குரு அதிபதி என்றாலும் கேந்திரங்களில் அமர்ந்தால் கேந்திராதிபத்ய தோஷம் வரும். அதே நேரத்தில் தனுசு லக்ன காரர்களுக்கு குரு கடகத்தில் உச்சம் பெற்றால் நன்மை, அது எட்டாவது வீடான மறைவு ஸ்தானமாகவே இருந்தாலும் நல்லது நடக்கும். மீனம் ராசிக்காரர்களுக்கு உச்சம் பெற்றாலும் அதிகம் நன்மை இல்லை அதே நேரம் விருச்சிகமான ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து மீனத்தை பார்ப்பதன் மூலம் வலிமை கிடைக்கும்.

குருவிற்கு பரிகாரம்: ஜாதகத்தில் குரு வலிமை இழந்திருக்கும் நிலையில் நவ கிரகங்களில் குரு பகவானை வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வணங்குவது நல்லது. குருவிற்கு முதன்மைத் தலமாக போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர், தென் திட்டை ஆலயம் சென்று அங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வணங்கலாம். தென் திட்டை ராஜ குருவையும், பாடியில் குரு தலத்திற்கும் சென்று வணங்கலாம். வட ஆலங்குடி என போற்றப்படும் தலம் போரூரில் அமைந்துள்ளது. அருள்மிகு ராமநாதீஸ்வரப் பெருமான் திருக்கோவிலுக்கு வியாழன் தோறும் சென்று வழிபடலாம். திருச்செந்தூர் குருபரிகார தலம்தான். அங்கு சென்று திருச்செந்தில் ஆண்டவனையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்கலாம். ஜென்ம நட்சத்திர நாளில் பரிகாரம் செய்வதுதான் நன்மையை தரும். ஒரு வியாழக்கிழமை குருவின் ஹோரையில் குருவின் வாகனமான யானைக்கு, விருப்பமான உணவு கொடுக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+